காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதும், நீதிமன்றம் ஆணையிட்ட குறைந்த அளவு தண்ணீரைக் கூட திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் மறுத்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கர்நாடகமும், பருவமழையும் செய்த சதியால் காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை சம்பா பயிர் மட்டுமே பயிரிடப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்ட பிறகும் கூட சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால், மிக முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகின்றன. இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால் வாடும் பயிர்களில் ஓரளவையாவது காப்பாற்றலாம் என்ற நிலையில் தான், முழுமையாக ஆய்வு செய்யாமல் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. சம்பா பயிர்களைக் காப்பாற்ற குறைந்தது 9.31 டி.எம்.சி. தண்ணீராவது தேவை என வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள தண்ணீரின் அளவு யானைப் பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும்.
கர்நாடக அணைகளிலிருந்து 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது மேட்டூர் அணைக்கு வந்து சேர்வதற்குள் பாதியாக குறைந்துவிடும் என்ற நிலையில் அதைக்கூட திறந்து விடமாட்டோம் என கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருகும் பயிர்களுக்கு உயிர் தண்ணீரைக் கூட தருவதற்கு கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் ஆணையிட்ட பிறகும் கூட தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பது அரசியல் சட்ட மீறல் என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருவதையும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அம்மாநில அரசின் செயல்பாடுகளை மத்திய அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் பார்க்கும் போது தமிழ்நாட்டை இந்தியாவின் ஓர் அங்கமாக மத்திய அரசு கருதுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் ஏற்கனவே 19 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இனியாவது உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க வேண்டிய கடமையும் , பொறுப்பும் மத்திய & மாநில அரசுகளுக்கு உள்ளது. இதை உணர்ந்து சம்பா பயிரை காப்பாற்றுவதற்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும். அதேநேரத்தில் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment