இலங்கை போர்க்குற்ற விசாரணை! ஐ.நா. விருப்பத்தை இந்தியா நிறைவேற்றவேண்டும் : ராமதாஸ்
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:-
இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்களப்படையினரின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தின் 19&ஆவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இலங்கையில் மனித உரிமைச் சூழலை மேம்படுத்தவோ அல்லது போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ இராஜபக்சே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக இலங்கையில் மனித உரிமை மீறல் தொடருவதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளைஅவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் நெருக்கடிகால நடைமுறைகள் நீடிப்பது, தமிழர்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுவது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவும், மர்மமான முறையில் காணாமல் போன தமிழ் அமைப்புகளின் தலைவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதது என இலங்கை அரசின் தோல்விகள் அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள நவநீதம்பிள்ளை, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை சூழலை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நவநீதம்பிள்ளை அளித்த பரிந்துரைகளையும் ராஜபக்சே அரசு ஏற்க மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட அரசிடமிருந்து ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டவாறு இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.
இதற்கான முயற்சிகளை ஏதோ ஒரு நாடு எடுக்கும் என்று எதிர்பார்த்திருக்காமல், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை வரும் 25&ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22-ஆவது கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவரவேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் & தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment