பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால் தமிழக மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதைக் குலைக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், இந்த விசயத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கோ அல்லது அதை செயல்படுத்துவதற்கோ இறுதித்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திருக்கிறது.
அதனடிப்படையில் தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
அதன்படி தான் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணைக்கு இணையான அத்தீர்ப்பு 90 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
ஆனால், இதையெல்லாம் உணராதவரைப் போல காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது ஆகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன்சிங்கும் மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப் படும் என்று உறுதியளித்திருந்தார். இன்னொருபுறம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இந்த விசயத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
கர்நாடகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், கர்நாடக மக்களை சமாதானப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்யலாம் என்று ஏற்கனவே நான் அச்சம் தெரிவித்திருந்தேன். அதை உண்மை என்று நிரூபிப்பதைப் போல மத்திய அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது. தமிழகத்திற்கு எதிரான அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத் தக்கது. கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தின் நலனை பலி கொடுக்க மத்திய அரசு முயல்வது சரியல்ல. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment