Tuesday, February 26, 2013

மது, புகை பழக்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அன்புமணி பாராட்டு


சென்னை: புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பசுமை தாயகம் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் உடல்பருமன் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடத்தின. இந்த கண்காட்சியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
உலகில் மாசு அதிகரித்து வெப்பமயமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இது தவிர மது, புகை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மது மற்றும் புகை பழக்கத்தால் தான் பட்ட துன்பங்களை யாரும் படக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் அன்று தெரிவித்திருந்தார். மேலும் மது, புகை பழக்கத்தை கைவிட்டு ரஜினிகாந்த் ஒரு முன்உதாரணமாக இருக்கிறார்.
டெல்லியைப் போன்று தமிழகத்திலும் கேஸ் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் மாசு ஏற்படாமல் இருக்கும். நம் பாரம்பரிய உணவு பழக்கங்களை விட்டுவிட்டு மேலை நாட்டு உணவு கலாச்சாரத்திற்கு மாறியதால் தான் உடல் பருமன் நோய் அதிகரித்துள்ளது. இதனால் நம் உடலுக்கு தீங்கு தான். எனவே, நாம் நமது பாரம்பரிய உணவு வழக்கத்தையே மீண்டும் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கிய வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

கொஞ்சம் மகிழ்ச்சி! நிறைய ஏமாற்றம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2013&14ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித் துறை நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்வண்டிக் கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, பயணிகள் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருப்பது நிம்மதியளிக்கிறது.

அதேநேரத்தில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் தட்கல் முன்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும், அதிவிரைவு வண்டிகளுக்கான முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களை பாதிக்கும்.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இந்த கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
புதிய விரைவு வண்டிகளைப் பொருத்தவரை மொத்தம் அறிவிக்கப்பட்ட 67 வண்டிகளில் 12 வண்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிடைத்திருக்கின்றன. இவைதவிர பழனி& திருச்செந்தூர் பயணிகள் வண்டி, சென்னை& திருப்பதி மின்சார வண்டி ஆகியவையும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
தமிழகத்திற்கு கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்ட 11 ரயில்களில் 4 ரயில்கள் இன்னும் இயக்கப்படாத நிலையில், அவற்றையும், புதிய ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ரயில்களின் இயக்க நாட்கள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. எனினும், இவற்றில் 3 ரயில்கள் 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் என்பதால் இந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பே.
மேலும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சென்னை& திருச்சி இடையிலான மலைக்கோட்டை விரைவு வண்டியை மீண்டும் இயக்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
காரைக்கால் & பேரளம், தஞ்சை & பட்டுக்கோட்டை இடையே புதிய பாதை அறிவிக்கப்பட்டிருப்பதும், ஆவடியிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை அமைப்பதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், தஞ்சாவூர் & அரியலூர் புதியபாதை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மக்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதேபோல் மின்மயமாக்கல், இரட்டைப்பாதை ஆகியவற்றில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் & பேசின் பாலம் இடையே மேலும் இரு பாதைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பயணிகளுக்கு பெரிய அளவில் எந்த பயனையும் அளிக்காது. செங்கல்பட்டு & திருச்சி இடையே இரட்டைப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராததும் கண்டிக்கத்தக்கது. கொல்கத்தா, மும்பையில் புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில்சேவைகள் அதிகரிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
ரயில்வேத்துறையில் உள்ள1.52 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ரயில்வே பாதுகாப்புப் படையில் 10% பணியிடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும், உணவின் தரம் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மொத்தத்தில் புதிய ரயில்கள் உள்ளிட்ட சில அறிவிப்புகள் மகிழ்ச்சியளித்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான தேவைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுவிலக்கு கோரி தொடர் உண்ணாவிரதம்!





துவிலக்கு கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிபெருமாள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சென்னை மெரினா காந்தி சிலை அருகே தனது உண்ணாவிரத்தை ஆரம்பித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

முதல் நான்கு நாள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த அவரிடம் போலீசார் வற்புறுத்தல் காரணமாக, தண்ணீர் மட்டும் குடித்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி, 19ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வலுக்கட்டாயமாக குலுக்கோஸ் ஏற்றியுள்ளனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
மீண்டும் 23ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி இல்லத்தில் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார். மதுவிலக்கு கோரி தான் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்தும், அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தங்கள் குறித்தும் ராதாஸ் சசிபெருமாளிடம் கலந்துரையாடினார்.

Monday, February 25, 2013

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்'

சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், கே.பாலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், டாஸ்மாக் கடைகள், ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், மது பானங்களை குடித்து விட்டு, வாகனங்களை ஓட்டுவதன் மூலம், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அனைத்தையும், உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவுக்கு, மதுவிலக்கு துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்த உடன், அது பற்றி, மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், அங்கு புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது எனவும், கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, டாஸ்மாக் கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்ற, மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கே.பாலு, ""தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு கூறுகிறது; ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சமீபத்தில், புதிதாக இரண்டு கடைகள் திறக்கப்பட்டன,'' என்றார்.
இதற்கு, "டாஸ்மாக்' தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துராஜ், ""தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கடைகளை அகற்ற, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிதாக, தேசிய நெடுஞ்சாலையில், கடைகள் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளையும் அகற்ற, 6 மாதம் அவகாசம் தர வேண்டும்,'' என்றார். அரசு தரப்பில், கால அவகாசம் கோரியதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. "தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும், மதுபானக் கடைகள் அனைத்தையும், மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில், 500, மதுபானக் கடைகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த, 500, கடைகளும் அடுத்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளன.

மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி நிதிநிலை அறிக்கை: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2013-14-ம் நிதி ஆண்டிற்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிட்டார். சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்பு நிருபர்களுக்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கடந்த 11 வருடமாக பா.ம.க. சார்பில் மாதிரி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. சமூக பொருளாதார அரசியல் கடமையாக கருதி இதை வெளியிடுகிறோம். மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத் திற்காக இந்த மாதிரி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக தற்போதைய நிலை குறித்து பொருளாதார கொள்கையை வெளியிடுவது போல தமிழகத்திலும் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மகளிர் மேம்பாட்டை உள்ளடக்கி நிதிநிலை அறிக்கை தனியாக வெளியிட வேண்டும். ரெயில்வே துறைக்கு பட்ஜெட் வெளியிடுவது போல வேளாண்மை துறைக்கும் தனியாக வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முக்கிய அம்சங்கள் இதில் வெளியிட்டு உள்ளோம் என்றார்.
இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இப்போது இதனை சில கட்சிகள் கையில் எடுத்துள்ளதே?
பதில்: 1986-ம் ஆண்டு பா.ம.க. கட்சியை ஆரம்பித்தோம். கட்சி ஆரம்பித்த 3 மாதத்தில் இருந்தே பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இப்போது ஓட்டுக்காக இதனை சில கட்சிகள் கையில் எடுத்து உள்ளன.
கேள்வி: பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் கள்ளச் சாராயம், உயிர் இழப்பு அதிகரிக்குமே?
பதில்: அதற்கான மாற்றுத் திட்டம் எங்களிடம் உள்ளது. அதனை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, February 23, 2013

காதல் திருமணங்களை அல்ல, நாடகத் திருமணங்களைத்தான் எதிர்க்கிறோம்- ராமதாஸ்


மயிலாடுதுறை: நாங்கள் காதல் திருமணங்களை எதிர்க்கவில்லை.காதல் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத் திருமணங்களைத்தான் எதிர்க்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளளார்.
மயிலாடுதுறையில் நடந்த அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் இதுவரை 26 மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் கூட்டம் நடத்த உள்ளோம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது பழிவாங்கும் நோக்கத்திற்கும், காசு பறிப்பதற்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சட்டத்தில் டீக்கடைக்காரர் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிக்காதவர்கள் யாருமே இல்லை. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரிகளை மிரட்ட இந்த வன்கொடுமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறோம்.

நாங்கள் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. காதல் நாடகத் திருமணத்தைதான் எதிர்க்கிறோம். டீன் ஏஜ் பருவம் என்பது முடிவெடுக்க தெரியாத பருவம். அப்போது அவர்களை இலக்காக வைத்து காதலித்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதைத்தான் கண்டிக்கிறோம்.
பெண்ணின் திருமண வயது 21 ஆகவும், ஆணிற்கு 23 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். பிரேசில், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்ணின் திருமண வயது 21, ஆணின் வயது 23 ஆகும். 21 வயதிற்குள் திருமணம் என்றால் பெற்றோர் சம்மதம் அவசியம் வேண்டும். அதேபோலதான் நம் நாட்டிலும் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதுதொடர்பாக பிரச்சாரம் செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். இந்த அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கூட்டங்கள் நடத்துவதால் கட்சி பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்காகதான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

Friday, February 22, 2013

காவிரி மேலாண்மை வாரியம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால் தமிழக மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதைக் குலைக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், இந்த விசயத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கோ அல்லது அதை செயல்படுத்துவதற்கோ இறுதித்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திருக்கிறது.
அதனடிப்படையில் தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
அதன்படி தான் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணைக்கு இணையான அத்தீர்ப்பு 90 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
ஆனால், இதையெல்லாம் உணராதவரைப் போல காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது ஆகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மன்மோகன்சிங்கும் மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப் படும் என்று உறுதியளித்திருந்தார். இன்னொருபுறம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இந்த விசயத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
கர்நாடகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், கர்நாடக மக்களை சமாதானப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்யலாம் என்று ஏற்கனவே நான் அச்சம் தெரிவித்திருந்தேன். அதை உண்மை என்று நிரூபிப்பதைப் போல மத்திய அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது. தமிழகத்திற்கு எதிரான அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத் தக்கது. கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தின் நலனை பலி கொடுக்க மத்திய அரசு முயல்வது சரியல்ல. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது.
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம்
காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே, ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர், போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படி எல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நீதிமன்ற கூண்டில் ராஜபக்சே
இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

கொடுங்குற்றம் செய்த ராஜபக்சே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும்.
26-ந் தேதி போராட்டம்
இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க. சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இந்த போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை கூண்டிலேற்ற வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மிகக் கொடூரமான இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 26ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது.

காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே , இராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை ஆகும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்;போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படியெல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. அதோடு பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களே போலியானவை என்றும், அவை வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தில்லியில் அமர்ந்து கொண்டு இலங்கை தூதர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.

மிகக் கொடுமையான இந்த மனித உரிமை மீறலை கண்டிக்கவேண்டிய இந்திய அரசோ, அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டு மவுனம் காக்கிறது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

கொடுங்குற்றம் செய்த இராஜபக்சே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் . அந்நாட்டு அதிபர் இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும் , இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடைபெறும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் தலைமையேற்கிறார். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப்போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 20, 2013

சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் : இராமதாசு

பிரபாகரன் மகன் கொடூரக் கொலைக்கு காரணமான ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:      இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப்படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டிபெண்டண்ட் நாளிதழும், சேனல் - 4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவன் பாலச்சந்திரன் கவலை தோய்ந்த முகத்துடன் ரொட்டி போன்ற ஒன்றை தின்று கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அடுத்த இரண்டு படங்களில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்த காயங்களுடன் அச்சிறுவன் இறந்து கிடக்கும் காட்சிகள் உள்ளன. பால் மனம் மாறாத பச்சைக் குழந்தையை சிங்கள இனவெறியர்கள் எவ்வளவு கொடூரமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்கள் விளக்குகின்றன. சிங்களப்படையினரின் இந்த மிருகத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.      பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் படங்களை சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கு சர்வதேச அரங்கில் கடும் கண்டனம் எழுந்த போது விடுதலைப் புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிக்கி பாலச்சந்திரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு காரணம் கூறியது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெரிக் பவுண்டர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டு சாய்த்துவிட்டு, அச்சிறுவன் பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்து பார்க்கும்போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது.

ஐ.நா தூதர்களிடமும், இந்திய அரசிடமும் தகவல் தெரிவித்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்டோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது, மருத்துவ உதவி கூட வழங்காமல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றது, போரின் இறுதிக் கட்டத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்றுவரை கொடுமைப்படுத்தியும், கொலை செய்தும் வருவது என சிங்களப் படையினரின் போர்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை அரசின் இத்தகைய போர்க்குற்றங்களுக்கு இதுவரை எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; போர்க்குற்றங்களை எத்தனையோ சர்வதேச அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால், இலங்கை அரசு இதுவரை திருந்தவில்லை. இதற்குக் காரணம் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எச்சரிக்காமல், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வரும்போதெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருப்பது தான்.இப்போது வெளியாகியுள்ள கொடூரமான ஆதாரங்களுக்குப் பிறகாவது இலங்கை மீது கடுமையான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ். கூறியுள்ளார்

Tuesday, February 19, 2013

பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட விதத்தை நினைக்கையில் நெஞ்சம் பிளக்கிறது, ஈரக்குலை நடுங்குகிறது: ராமதாஸ்


சென்னை: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப் படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டி பெண்டண்ட் நாளிதழும், சேனல்-4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.
அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவன் பாலச்சந்திரன் கவலை தோய்ந்த முகத்துடன் ரொட்டி போன்ற ஒன்றை தின்று கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அடுத்த இரண்டு படங்களில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்த காயங்களுடன் அச்சிறுவன் இறந்து கிடக்கும் காட்சிகள் உள்ளன. பால் மனம் மாறாத பச்சைக் குழந்தையை சிங்கள இன வெறியர்கள் எவ்வளவு கொடூரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்கள் விளக்குகின்றன. சிங்களப்படையினரின் இந்த மிருகத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் படங்களை சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கு சர்வதேச அரங்கில் கடும் கண்டனம் எழுந்த போது விடுதலைப்புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிக்கி பாலச்சந்திரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு காரணம் கூறியது.
ஆனால், இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெரிக் பவுண்டர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டு சாய்த்து விட்டு, அச்சிறுவன் பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்து பார்க்கும் போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது.
ஐ.நா தூதர்களிடமும், இந்திய அரசிடமும் தகவல் தெரிவித்துவிட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்டோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது, மருத்துவ உதவி கூட வழங்காமல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றது, போரின் இறுதிக் கட்டத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்று வரை கொடுமைப்படுத்தியும், கொலை செய்தும் வருவது என சிங்களப் படையினரின் போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வருகின்றன.
இலங்கை அரசின் இத்தகைய போர்க்குற்றங்களுக்கு இதுவரை எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; போர்க்குற்றங்களை எத்தனையோ சர்வதேச அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால், இலங்கை அரசு இதுவரை திருந்தவில்லை. இதற்குக் காரணம் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எச்சரிக்காமல், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வரும்போதெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருப்பது தான்.
இப்போது வெளியாகியுள்ள கொடூரமான ஆதாரங்களுக்குப் பிறகாவது இலங்கை மீது கடுமையான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Sunday, February 17, 2013

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் 70 சதவீத குற்றங்கள் குறையும்: அன்புமணி பேச்சு

காஞ்சீபுரம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. கட்சியின் சார்பில் காஞ்சீபுரத்தில் இளம் பெண்களுக்கான பாசறைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

மாணவ-மாணவிகள் தங்களின் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒன்றே அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் மேம்படுத்தி நல்ல எதிர்காலத்தினையும் ஏற்படுத்தி தரும். காதல் உள்ளிட்ட விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் அமைவது தவறி விடும்.
மதுவினால் ஏற்படும் குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மதுக்கடைகளை நிரந்தரமாக மூடும் போராட்டத்தினை பா.ம.க. தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தற்போது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழக்கினையும் பாட்டாளி மக்கள் கட்சிதான் தொடுத்துள்ளதால் குறிப்பிட்ட அந்தக் காலவரைக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

வன்முறையைத் தூண்டும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன. குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுவும் முக்கிய காரணமாக உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் 70 சதவீத குற்றங்கள் குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, February 16, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் 15.2.13-ந்தேதி நடைபெற்றது.

இதில் பேசிய வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் குரு எம்.எல்.ஏ, நமது மருத்துவர் அய்யா தங்களது மாவட்டங்களுக்குள் வரக்கூடாது என பல மாவட்ட ஆட்சியர்களும் தடை போடுகிறார்கள். நாங்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வலம் வந்தவர்கள் எங்களுக்கே தடையா? நாங்கள் நினைத்தால் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி தலைவரும் நிம்மதியாக நடமாட முடியாது. ஆட்சியாளர்கள் மட்டுமல்ல முதல்வரேக்கூட எங்கும் போக முடியாத அளவுக்கு தடை போடுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என தன் அதிரடியாக பேசியுள்ளார்.

முன்னால் மத்தியமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது:

உத்தரபிரசேத்தில் தற்போதைய முதல்வர் அகிலேஷ்யாதவ் தேர்தலுக்கு முன் பத்து லட்சம் மக்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டம் பற்றி செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் அவர் தான் அடுத்த முதல்வர் என எழுதின. நாம் லட்சங்களில் அல்ல கோடிகளில் நாம் மக்களை திரட்டுகிறோம் ஆனால் அதை எந்த செய்திதாளும் எழுத மறுக்கின்றன. அவர்கள் எழுதாவிட்டால் என்ன அடுத்த ஆட்சியமைக்கப் போவது நாம் தான் என்றார்.

இறுதியில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வரும் ஏப்ரல் 25ந்தேதி வன்னியர் குடும்ப விழாவான சித்திரை பௌர்ணமி விழா மகாபலிபுரத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடி வன்னியர்கள் திரள வேண்டும் இதற்காக நாம் உழைக்க வேண்டும். நம் பலத்தை மகாபலிபுரத்தில் காட்ட வேண்டும் என்றவர், காதலித்து ஏமாற்றுபவர்கள் பற்றி நான் பேசக்காரணம் வேலூர் மாவட்டத்தில் இருந்து அதிகமான புகார்கள் வந்தன. அதைக்கொண்டே பேச தொடங்கினேன். இப்போது இதற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும்மென எதிர்பார்க்கவில்லை. காதல் என்ற பெயரில் ஏமாற்றும் பிற சாதியினரை எதிர்த்து போராடுவோம் என்றார்.

இலங்கை போர்க்குற்ற விசாரணை! ஐ.நா. விருப்பத்தை இந்தியா நிறைவேற்றவேண்டும் : ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணை! ஐ.நா. விருப்பத்தை இந்தியா நிறைவேற்றவேண்டும் : ராமதாஸ்

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:-
இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்களப்படையினரின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தின் 19&ஆவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இலங்கையில் மனித உரிமைச் சூழலை மேம்படுத்தவோ அல்லது போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ இராஜபக்சே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக இலங்கையில் மனித உரிமை மீறல் தொடருவதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளைஅவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் நெருக்கடிகால நடைமுறைகள் நீடிப்பது, தமிழர்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுவது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவும், மர்மமான முறையில் காணாமல் போன தமிழ் அமைப்புகளின் தலைவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதது என இலங்கை அரசின் தோல்விகள் அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள நவநீதம்பிள்ளை, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை சூழலை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நவநீதம்பிள்ளை அளித்த பரிந்துரைகளையும் ராஜபக்சே அரசு ஏற்க மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட அரசிடமிருந்து ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டவாறு இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

இதற்கான முயற்சிகளை ஏதோ ஒரு நாடு எடுக்கும் என்று எதிர்பார்த்திருக்காமல், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை வரும் 25&ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22-ஆவது கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவரவேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் & தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் அவர் கூறியுள்ளார்.

Thursday, February 14, 2013

தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்: 4 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலாறு கண்ணிவெடி தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் அவர்கள் தூக்கிலிடப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம், புலவேந்திரன் ஆகிய 4 பேருமே அப்பாவிகள். கண்ணிவெடித் தாக்குதலுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மொத்தம் 124 பேர் மீது குற்றஞ்சாற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களில் 117 பேர் விசாரணை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள இவர்கள் 4 பேர் உட்பட 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது, மூவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், இந்த நால்வர் மீதான இரு குற்றச்சாற்றுகளையும் தள்ளுபடி செய்தனர். தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் தான் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தடா என்ற அடக்குமுறை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் இச்சட்டம் காலாவதியாக அனுமதிக்கப்பட்டது. இப்படி காலாவதியான ஒரு சட்டத்தின் அடிப்படையில் 4 அப்பாவிகளின் உயிர்களை பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகளும், புத்தரும் பிறந்த இந்திய மண்ணில் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஆனால், இந்திய அரசோ மனித உயிர்களுக்கும், உரிமைகளுக்கும் சற்றும் மதிப்பளிக்காமல் தூக்கு தண்டனைகளை அரங்கேற்றி வருகிறது.
அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு கருணை மனுக்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய குடியரசுத் தலைவராக பிரனாப் முகர்ஜி பதவிக்கு வந்த 7 மாதங்களில் 4 தமிழர்கள் உட்பட 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.
அப்சல் குருவின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் , அதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்வதற்கு கூட அவகாசம் தராமல் ரகசியமாக அவரை மத்திய அரசு தூக்கிலிட்டது. அதேபோல் 4 தமிழர்களின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றுவரை வெளியிடாமல், அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை அரசு ரகசியமாக செய்துவருகிறது. இத்தகைய போக்குகள் சரியானவை அல்ல.
மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை பறிப்பதை விட மிகக்கொடிய மனித உரிமை மீறல் எதுவும் இருக்கமுடியாது. எனவே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களையும் விடுதலை செய்வதுடன், இந்தியாவில் தூக்கு தண்டனையை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, February 12, 2013

வினோதினி பற்றி என்ன சொல்ல போகிறார்கள்?

தென்சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தியாகராயநகரில் 12.02.2013 அன்று நடந்தது. இளைஞர் சங்க செயலாளர் மாம்பலம் வினோத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

காதல் கலப்பு திருமணத்தை நான் எதிர்ப்பதாக தவறான பிரசாரம் செய்கிறார்கள். 14, 15 வயதில் சீரழிவதற்கு பெயர் காதலா? காமவெறியில் உணர்வுகளை தூண்டி சீரழிகிறார்கள். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யும்படி கர்நாடக கோர்ட்டே தீர்ப்பு வழங்கி உள்ளது. 21 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளால் தனக்கு துணையாக வருபவன் தனக்கு ஏற்றவன்தானா? என்று பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது.
ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள். அதன்பிறகுதான் பாதிக்கபடுகிறார்கள். தன் மகளுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். காதல் திருமணம் செய்யும் போது பெற்றோர் ஒப்பதல் அவசியம். இல்லாவிட்டால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பக்தவத்சலா, கோவிந்த ராஜுலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
14-ந் தேதி காதலர் தினம் என்கிறார்கள். இதற்கு ஆதரவு திரட்ட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இந்த கலாசாரம் எப்போது வந்தது? மேற்கத்திய கலாசாரத்தை பரப்புவதற்காக, பொருட்களை விற்பதற்காக பரப்பப்படும் கவர்ச்சி. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சீரழிக்கிறார்கள். இந்த கலாச்சாரம் வேண்டாம். நாங்கள் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்கிறார்களே ஆசிட் வீசி படுகொலை செய்யப்பட்ட வினோதினி பற்றி இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?
பெண்கள் படித்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் வரட்டும். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்யட்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Sunday, February 10, 2013

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான்: ராமதாஸ்


போரூர் காரம்பாக்கத்தில் பா.ம.க. சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
      தமிழ்நாட்டின் எதிர் காலம் ஒளிமயமாக வேண்டுமானால் பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். கல்வி, விவசாயம், மருத்துவ வசதியை நோக்கி எங்கள் செயல்பாடு இருக்கும். பெண்கள் மத்தியில் பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எந்த கட்சிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளதோ அந்த கட்சி வெற்றி பெற்றுவிடும்.
2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும். ஒட்டு மொத்த தமிழக மக்கள், எல்லா சமுதாய மக்களுக்கும் பா.ம.க. பாதுகாப்பாக இருக்கும். நமது மொழியையும், இனத்தையும், நாட்டையும் பாதுகாக்க வந்த கட்சி, நியாயமான கட்சி, நல்ல கட்சி, மக்களின் கட்சி பா.ம.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான்.
எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியாவிட்டால் 6 மாதத்தில் பதவியை தூக்கி எறிவோம். திராவிட கட்சிகளுக்கும், மற்ற கட்சிகளுக்கும் சவால் விடுக்கிறேன். நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளோம்.

நீங்களும் அதே முடிவை எடுக்க தயாரா? திராவிட கட்சிகளுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. நீங்கள் எல்லோரும் ஆதரியுங்கள். காரம்பாக்கம் பகுதி பா.ம.க.வின் கோட்டை. இதில் யாரும் எந்த விதத்திலும் ஓட்டை போட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, February 9, 2013

முதல்ல படி, படிச்சுட்டு வேலை பாரு, அப்புறம் காதலிக்கலாம்... ராமதாஸ்


சென்னை: இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை அடையாறில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பாமகவை தவிர எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவேதான் புதிய அரசியலை பேசுகிறோம்.
மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம். மது, இலவசங்கள், சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. இதை சொல்வதால் சினிமாவுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. மக்களை நல்வழிப்படுத்தும் தரமான சினிமாவை கொடுங்கள்.
இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள்.
நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அறியா பருவத்தில் நடக்கும் காதல் நாடகத்தைதான் எதிர்க்கிறோம். இதற்குதான் சிலர் கூச்சல் போடுகிறார்கள். செல்போனும், சினிமாவும் தான் மாணவர்களை கெடுக்கிறது. படிக்கும்போது செல்போன் தேவையில்லை. பெற்றோர்கள் இதை அனுமதிக்காதீர்கள்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. நன்றாக படியுங்கள் என்றார் அவர்.

கர்நாடக அரசின் நிலைப்பாடு தேச ஒற்றுமைக்கு எதிரானது : டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதும், நீதிமன்றம் ஆணையிட்ட குறைந்த அளவு தண்ணீரைக் கூட திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் மறுத்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கர்நாடகமும், பருவமழையும் செய்த சதியால் காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை சம்பா பயிர் மட்டுமே பயிரிடப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்ட பிறகும் கூட சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால், மிக முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகின்றன. இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால் வாடும் பயிர்களில் ஓரளவையாவது காப்பாற்றலாம் என்ற நிலையில் தான், முழுமையாக ஆய்வு செய்யாமல் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. சம்பா பயிர்களைக் காப்பாற்ற குறைந்தது 9.31 டி.எம்.சி. தண்ணீராவது தேவை என வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள தண்ணீரின் அளவு யானைப் பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும்.
கர்நாடக அணைகளிலிருந்து 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது மேட்டூர் அணைக்கு வந்து சேர்வதற்குள் பாதியாக குறைந்துவிடும் என்ற நிலையில் அதைக்கூட திறந்து விடமாட்டோம் என கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருகும் பயிர்களுக்கு உயிர் தண்ணீரைக் கூட தருவதற்கு கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் ஆணையிட்ட பிறகும் கூட தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பது அரசியல் சட்ட மீறல் என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருவதையும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அம்மாநில அரசின் செயல்பாடுகளை மத்திய அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் பார்க்கும் போது தமிழ்நாட்டை இந்தியாவின் ஓர் அங்கமாக மத்திய அரசு கருதுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் ஏற்கனவே 19 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இனியாவது உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க வேண்டிய கடமையும் , பொறுப்பும் மத்திய & மாநில அரசுகளுக்கு உள்ளது. இதை உணர்ந்து சம்பா பயிரை காப்பாற்றுவதற்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும். அதேநேரத்தில் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


பயிர்க் கடன்களை ரத்து செய்யவேண்டும்! இராமதாஸ் வலியுறுத்தல்!

பயிர்க் கடன்களை ரத்து செய்யவேண்டும்! இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரண உதவி போதாது என்பதால் விவசாய பயிர்க் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய முதல்வர், இழப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வந்தது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி போதுமானதல்ல. கடந்த சில ஆண்டுகளில் உரங்களின் விலைகள் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன; வேளாண் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்திருப்பதால் விவசாயம் என்பது செலவு பிடிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், 1.75 லட்சம் உழவர்களுக்கு சொந்தமான 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும் என்பது நியாயமானதல்ல. எனவே, சம்பா பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
தமிழகத்தின் 31 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்த நிலவரியை தள்ளுபடி செய்துள்ள அரசு, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும் அடியோடு தள்ளுபடி செய்ய வேண்டும்.
சம்பா பயிர்கள் கருகியதால் 19 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 5 லட்சமாவது இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் நலன் கருதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் கடந்த பல மாதங்களாக வேலை கிடைக்காததால் வருவாய் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கியுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கும், வறட்சி காரணமாக சம்பா சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக வைத்திருந்த உழவர்களுக்கும் ஒருமுறை உதவியாக தலா ரூ.10,000 வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக ஆட்சி பீடத்தில் அமரும்போது மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்னிய இளம் பெண்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,

நாட்டில் மதுவையும், போதைப் பொருள்களையும் ஓழிக்க வேண்டும். இதுவே தற்போதைய முதன்மைப் பிரச்னையாகவும், வறுமைக்கு காரணமாகவும் உள்ளது. பாமகவைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்காகத் தான் இருக்கும். அரசு மதுக்கடைகள் அனைத்தும் பூட்டப்படும்.
கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சியினர் ஆட்சிபுரிந்து மாநிலத்தை நாசமாக்கிவிட்டனர்.
நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் 911 என்ற சேவையைப் பார்த்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நமது நாட்டில் கொண்டு வந்த திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை. மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாமக, வரும் 2016-ல் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமரும். அப்போது கல்வி, தரமான மருத்துவ வசதியுடன் கூடிய சுகாதாரம், விவசாய இடுபொருட்கள் தடையின்றி கிடைக்கும். இவை மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மற்றப்படி எந்த இலவசத்தையும் பாமக அளிக்காது என்றார்.

Tuesday, February 5, 2013

சிகரெட் விளம்பரங்களை அகற்ற வேண்டும் முதல்வருக்கு அன்புமணி கடிதம்


மத்திய அரசின் உத்தரவுப்படி கடைகளில் வைக்கப்பட்டுள்ள சிகரெட் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் :

      புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் நாள்தோறும் 2,500 பேர் உயிரிழக்கின்றனர். இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டம் 2003-ன் கீழ் அனைத்து விதமான புகையிலைப் பொருள்கள் விளம்பரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இச்சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

சிகரெட் விற்கும் கடைகாரர்கள் 60x45 செ.மீ. அளவுள்ள இங்கு புகையிலை விற்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏராளமான கடைகளில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 முதல் 5,000 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கலாம்.எனவே, சிகரெட் உள்பட அனைத்து புகையிலை பொருள்கள் விளம்பரங்களை அகற்றி, இளம் தலைமுறையினரை புகையிலை பேராபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு :இந்தியாவுக்கு அவமதிப்பு - இராமதாசு

 
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65&ஆவது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் மற்றும் விடுதலைக்கு பின்னர் இலங்கையை ஆட்சி செய்த சிங்களப் பேரினவாதிகளின் சதியால், இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டனர். இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என்பதால், அதை அடைவதற்காக போராடிவந்தனர். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண 1987-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய& இலங்கை ஒப்பந்தத்தின்படி, 13&ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி இதை ஏற்க ஈழத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து 2002&ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு , தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக்கொண்டது.

அதன்பின்னர், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வியடைந்தது. போர் முடிவடைந்தபின்னர், இலங்கைக்கு வந்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியபோது , ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதாக இராஜபக்சே உறுதியளித்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17&ஆம் தேதி இலங்கை அதிபர் இராஜபக்சேவை , அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டிணா சந்தித்த போதும், 13&ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படியான அதிகாரங்கள் மட்டுமின்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்கி தமிழர்கள் தன்னாட்சியுடன் வாழ வகைசெய்யப்படும் என இராஜபக்சே உறுதி அளித்திருந்தார். இதே வாக்குறுதியை அவர் பலமுறை இந்தியாவுக்கு வழங்கியிருந்தார்.

      ஆனால், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும்பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இராஜபக்சேவின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வகை செய்வோம் என்று கூறிவரும் இந்திய அரசை அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து போரின்போதும், போருக்குப் பிறகும் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு, இப்போது சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம்மை எட்டி உதைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்திய அரசு இனியாவது உணர வேண்டும்.

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கூட வழங்காமல் அடிமைகளாகவே வைத்திருக்கத் துடிக்கும் சிங்களப் பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து தமிழர்கள் கண்ணியமாகவோ அல்லது சுயமரியாதையுடனோ வாழ முடியாது என்பதை இந்தியா உணர வேண்டும். காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருவதைப் போல, இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதால் அதை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, February 3, 2013

திமுக வழியில் பேஸ்புக், டிவிட்டரில் நுழைகிறது பாமக

சென்னை: ஃபேஸ்புக், டிவிட்டர், இணையதளங்களில் இணைந்து கட்சிக் கொள்ளைகளைப் பரப்ப பாமக முடிவு செய்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், வருங்காலத்தில் இணைய தளங்கள் வழியாக பா.ம.க.வின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இன்றைக்கு இளைய தலைமுறையினர் இணைய தளம் மற்றும் மொபைலுடன் தான் இருக்கிறார்கள். எனவே கருத்துக்கள் பரிமாற்றத்துக்காக 4 லட்சம் இளைஞர்களின் ‘டேட்டா ஆப் பேஸ்' தயாரித்து இருக்கிறேன். இதை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து உள்ளேன் என்றார்.
உலக அளவில் சமூக வலைத்தளங்கள், இணையங்கள் மூலம் பல புரட்சிகள் நடந்து வருகின்றது. தமிழகத்தில் கூட கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் இணைய தளம் மூலம் கருத்துக்கள் பரிமாறியதால் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு இளைய தலைமுறையினர் இணைய தளம் மற்றும் மொபைலுடன் தான் இருக்கிறார்கள். எனவே கருத்துக்கள் பரிமாற்றத்துக்காக 4 லட்சம் இளைஞர்களின் ‘டேட்டா ஆப் பேஸ்' தயாரித்து இருக்கிறேன். இதை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து உள்ளேன். இதன் மூலம் பொது மக்களிடம் ஆதரவு திரட்டப்படும்
தர்மபுரி பிரச்சினையில் ஊடகங்கள் பா.ம.க.வுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆனால் உண்மை நிலை வேறு. 85 சதவீத மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இனி நாமும் கட்சிக்காக "டுவிட்டர்" "பேஸ்புக்", "பிளாக்" உருவாக்க முடிவு செய்துள்ளோம். பா.ம.க. பற்றிய எதிர் கருத்துக்களை முறியடிக்கும் வகையில் உடனடியாக இந்த சமூக வலை தளம் மூலம் பதில் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
 

ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்களால் ஒரு நாளைக்கு 2 வேளை கூட சாப்பிட முடியவில்லையே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட உணவுக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட சாப்பிட முடியாத அவல நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதால் அரிசிக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன்விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலை மாதம்தோறும் உயர்த்தப்படவிருப்பதால் காய்கறி உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிச்சந்தையில் விற்கப்படுவதற்கு இணையான தரம் கொண்ட அரிசியை நியாயவிலை கடைகள் மூலம் மானிய விலையில் விற்பனை செய்யவும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயிலின் அளவை இரு மடங்காக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Friday, February 1, 2013

ஜெ. புகழ் பாடிய ஆளுநர் உரை அதிமுக பொதுக்குழு தீர்மானம் போல தோன்றுகிறது: ராமதாஸ்


சென்னை: முழுக்க முழுக்க தமிழக முதல்வரின் புகழ்பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுனர் உரை அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் போலவே தோன்றுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'தமிழ்நாட்டில் விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், அவற்றைத் தீர்த்து ஆறுதல் அளிக்கும் வகையில் ஆளுனர் உரையில் அறிவிப்புகள் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆளுனர் உரையில், எந்த அறிவிப்புமே இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்ததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். கடன் வாங்கி சாகுபடி செய்த உழவர்கள், அதற்கான வட்டியை கட்டுவதற்கு கூட விளைச்சல் இல்லாததால் கடன் வலையில் சிக்கி, கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வறட்சியால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்த பிறகும், விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மாறாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் முந்தைய அறிவிப்பையே ஆளுனர் உரையில் மீண்டும் வெளியிட்டிருப்பதால் எந்த பயனும் ஏற்படாது.
இதை உணர்ந்து கருகிய சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குவது குறித்த அறிவிப்பை ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதேபோல், பயிர் சேதத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் சாவை கொச்சைப்படுத்தாமல், அவர்களின் குடும்பங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆளுனர் உரைக்கு முதல் நாளன்று கூட மதுரை மற்றும் சென்னையில் கொடூரமான முறையில் இரண்டு படுகொலைகள் நடந்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023 வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் இலக்குகளை நோக்கிய பயணத்தில் இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாம் பகுதி வெளியிடப்படவிருப்பதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டிருப்பது போகாத ஊருக்கு வழி காட்டுவதாகும்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் 12 முறை கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, இனியும் மீனவர்கள் தாக்கப்படாமல் தடுக்க என்ன செய்யப்போகிறது என்பது குறித்து எதையும் அறிவிக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், அரசு வேலைவாய்ப்பை பெருக்குதல் போன்றவற்றுக்கான எந்த திட்டமும் ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. நேரடி பண மாற்றத் திட்டம், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு, தேசிய நீர்க் கொள்கை ஆகியற்றில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் முழுக்க முழுக்க தமிழக முதலமைச்சரின் புகழ்பாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுனர் உரை அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் போலவே தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: