|
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்கெனவே இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்ததையடுத்து அவர்களுக்கான பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்தும் அவர்களை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் குன்னூரில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் பயிற்சிகளை பார்வையிட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கள அதிகாரிகளை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, குன்னூருக்கு வந்துள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கும், பெங்களூரில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment