Sunday, July 22, 2012

விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்வதோடு, ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வேண்டும்: ராமதாஸ்


சென்னை: 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துவிட்டதாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டதாலும், மேட்டூர் அணையில் 75 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதாலும், உரிய காலம் கடந்து 50 நாட்கள் ஆகியும் இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு நாள்தோறும் 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தபோதும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் பம்பு செட்டுகளை நம்பி பயிரிடப்பட்ட குறுவைப்பயிர்கள் வாடும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு, அங்குள்ள உழவர்கள் கடன் வலையில் சிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள 11 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் கூட குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. ஆடி மாதம் பிறந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லை என உழவர்கள் கூறியுள்ளனர். 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். உழவர்கள் பெற்ற பயிர் கடனையும், நில வரியையும் ரத்து செய்வதுடன், ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாள்களின் எண்ணிக்கையை 100 நாள்களில் இருந்து 300 நாள்களாக உயர்த்த மத்திய அரசுடன் தமிழக அரசு கலந்து பேச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: