Monday, July 23, 2012

விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் சிமெண்ட் நிறுவனங்கள்! ராமதாஸ் கண்டனம்!




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சிமெண்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் பிற தென் மாநிலங்களிலும் உள்ள சிமெண்ட் ஆலைகள் தங்களுக்குள் முறைகேடான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன.

சிமெண்ட் ஆலைகளில் வாரத்தின் 7 நாட்களும் சிமெண்ட் உற்பத்தி நடைபெறும் போதிலும், 4 நாட்கள் மட்டுமே சிமெண்ட் மூட்டைகள் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், ஏற்படும் தேவை அதிகரிப்பை பயன்படுத்திக்கொண்டு சிமெண்ட் நிறுவனங்கள் விருப்பம்போல விலையை உயர்த்துகின்றன.

சிமெண்ட் நிறுவனங்களின் இந்த முறைகேடான செயலுக்கு இந்திய போட்டித்தன்மை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் 6300 அகாடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதன்பிறகும் சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ரூ.180ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்டின் விலை தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.350 என்ற விலையை எட்டியுள்ளது. சிமெண்ட் நிறுவனங்களின் சட்டவிரோத கூட்டணியை தகர்த்து, சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது.

சிமெண்ட் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. வறட்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், கட்டுமான தொழிலும் முடங்கினால் இலட்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


இந்த ஆபத்தை தடுக்க, தமிழ்நாட்டில் சிமெண்ட் விலையை அத்துறை வல்லுனர்களின் உதவியுடன் அரசு நிருணயிக்கவேண்டும். அந்த விலைக்கு சிமெண்ட் மூட்டைகளை விற்பனை  செய்ய மறுக்கும் சிமெண்ட் நிறுவனங்களை அரசுடமையாக்கவேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலிவு விலை சிமெண்ட் விற்பனை திட்டம் தற்போது தொய்வடைந்துள்ளது. இத்திட்டத்தை சீரமைத்து, வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்குமதி செய்து, அவற்றை மூட்டை ரூ.200 என்ற விலையில் தமிழகத்தின் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: