|
இது குறித்து 13.07.2012 அன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள உயர்கல்வி சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உருவாக்கியுள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் சட்டக் கல்வியை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரம் இந்திய பார் கவுன்சிலிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.
இதனால் சாதாரணமானவர்களால் வழக்குரைஞர்களாக முடியாமல் போய்விடும். அதுமட்டுமன்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், சட்ட நிறுவனங்களும் கொல்லைப்புறம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நிலை ஏற்படும். இதனால் இந்திய வழக்குரைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்த உயர்கல்வி சட்ட மசோதா தவிர, உயர்கல்விக்கான தேசிய அங்கீகார ஒழுங்குமுறை ஆணைய சட்ட மசோதா, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்ட மசோதா, தேசிய சட்டப் பள்ளி மசோதா என மேலும் மூன்று மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுள்ளார். இவை அனைத்துமே வழக்குரைஞர்களின் நலன்களுக்கு எதிரானவை.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்ற நாளிலிருந்தே சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக நீதிக்கும், சாதாரண மக்களின் கல்வி பெறும் உரிமைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதைத் தடுக்க வேண்டிய அவர், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு கதவுகளை திறந்துவிட்டு வெண்சாமரம் வீசும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, அவரை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு எதிரான நான்கு சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment