Monday, March 28, 2011

நடிப்புக்காக கூட மரக்கன்று நடாதவர் விஜயகாந்த்: ராமதாஸ்

வேலூர்,மார்ச் 28: சினிமாவில் நடிப்புக்காக கூட மரக்கன்று நடாத நடிகர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஒடுக்கத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அணைக்கட்டு தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.கலையரசுவை அறிமுகம் செய்து வைத்து ராமதாஸ் பேசியதாவது:

தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்களே இன்றைக்கு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராவது உறுதி.

என்னை அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என நடிகர் ஒருவர் (விஜயகாந்த்) விமர்சனம் செய்து வருகிறார். என்னை கொச்சைப்படுத்துவதாக நினைத்து அப்படிப் பேசுகிறார்.

நான் அறிக்கை மன்னன்தான். சமூக விழிப்புணர்வுக்காக, அடிதட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.

மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர பிற சிறைகளைப் பார்த்தவன். என்னை என் கட்சியினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன். அதனால் என்னை போராட்ட மன்னன் என்று அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.

தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்?

பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். சினிமாவில் நடிப்புக்காக கூட அவர் மரக்கன்று நட்டதில்லை. அப்படிப்பட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

நீண்டநாள் உறங்கிவிட்டு, தேர்தல் வந்ததும் எழுந்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. அடித்தட்டு மக்களை பற்றி அறியாத அவர், எழுதிக் கொடுப்பதைப் படிக்க மட்டுமே தெரிந்தவர். அவர் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து தேர்தல் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று உணர்ந்துள்ள மக்கள், அவருக்கு நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓய்வு தர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: