Wednesday, January 6, 2016

மோசடி கருத்துத்திணிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’கோயில் திருவிழாக்களின் போது கோவிலைச் சுற்றிலும் புதிது புதிதாக கடைகள் தோன்றுவதைப் போல, தேர்தல் காலத்தில் புதிது புதிதாக கருத்துக்கணிப்புக் கடைகள் முளைப்பது வழக்கமாகி விட்டது. இதைவிட ஆபத்து என்னவெனில், மக்களால் தண்டிக்கப்பட்டு ஒதுக்கப் பட்டோரின் கூலிப்படையாக அவை மாறி, திரிக்கப்பட்ட கணிப்பைக் கூறி, மக்கள் மனநிலையை மாற்றுவதற்கு முயல்வது தான்.

கருத்துக் கணிப்புகள் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்துடன் தொடர்புடையவை என்பதால் கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்ட  போதிலும் அக்கோரிக்கையை பா.ம.க. ஆதரித்ததில்லை. ஆனால், ஊடகங்களும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களும் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி வந்த நிலை மாறி, இப்போது யார் வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பை நடத்தலாம்; யார் பெருந்தொகை தருகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கலாம் என்ற மலிவான கலாச்சாரம் பரவி விட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி சென்னை லயோலா கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் தான் இதற்கு உதாரணம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு அபத்தமானவையாகவும், நகைப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளவர் யார்? என்ற கேள்விக்கு ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் மட்டுமே முன்னிறுத்தப் படுவது வழக்கம். ஆனால், இந்தக் கணிப்பில் ஒரே கட்சியிலிருந்து இருவர் முன்னிறுத்தப்பட்டதுடன்,  அதில் சாத்தியமே இல்லாத ஒருவருக்குத் தான் அதிக செல்வாக்கு இருப்பதாக கூறியதிலிருந்தே அந்த கருத்துக்கணிப்பு யாருக்காக, யாருடைய செலவில் நடத்தப்பட்டிருக்கும் என்பது புரிந்து விட்டது.

அதன்பின், கடந்த 4&ஆம் தேதி இன்னொரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது. முந்தைய கருத்துக்கணிப்பே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, இதன் பின்னணியில் இருப்பவர்களை அப்பட்டமாக அடையாளம் காட்டும் அளவுக்கு அமைந்திருந்தன இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். இந்த கருத்துக் கணிப்பு யாருக்காக யாரால் நடத்தப்பட்டது என்பது சமூக ஊடகங்களில் கேலியும் , கிண்டலுமாக அம்பலப்படுத்தப்பட்டது. இந்த இரு கணிப்புகளிலும் கருத்து கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3500&க்கும் குறைவு. ஐந்தரை கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர் என்ற அளவுக்கும் குறைவானவர்களிடம் கருத்துக் கேட்பது மிகப் பெரிய மோசடி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த இரு கருத்துக் கணிப்புகளும் தமிழ்நாட்டு அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படவுள்ள கட்சியை தூக்கி நிறுத்த திட்டமிட்டு நடத்தப்பட்டவை தான். இப்படி செய்வதைவிட மோசமாக இந்திய ஜனநாயகத்தை யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது.

இதுபோன்று திட்டமிட்டு கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்கும்போது அவை தேவையா? என்ற வினா எழுவதை தவிர்க்க முடியவில்லை. கருத்து சுதந்திரம், மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பெரும்பாலானோரின் மனநிலை கருத்து கணிப்புக்கு  எதிராகவே உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி தேர்தலின் போது கருத்துக்கணிப்புகள் நடத்துவதால் ஜனநாயகத்துக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு யாராலும் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. இந்தியாவில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை அல்ல; அவை மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதில்லை; மாறாக அவை ஜனநாயகத்தை காயப்படுத்துகின்றன. அறிவியல்பூர்வமாக கருத்துக்கணிப்பு நடத்துவதன் மூலம் மக்களின் மனநிலையை ஓரளவு சரியாக கணிக்க முடியும் என்ற போதிலும், அதற்காக பெருமளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால், அத்தகைய உண்மையான கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

மாறாக ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பை நடத்தி, அதற்காக அந்தக் கட்சியிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கலாம் என்ற எண்ணம் தான் இப்போது மேலோங்கி யிருக்கிறது.  இந்தியாவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக்கணிப்பாளர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். கருத்துக் கணிப்புகள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவை.‘‘ கருத்துக்கணிப்பு நடத்தும் சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை அணுகுகின்றன.அவை முறையாக கருத்துக்கணிப்பு  நடத்தினாலும்,  அதன் முடிவுகள், கருத்துக் கேட்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக மாற்றி வெளியிடுகின்றன. இதற்காக அந்தக் கட்சியிடமிருந்து பெருமளவில் பணம் பெற்றுக் கொள்கின்றன’’ என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய துப்பறிவில் , சி&வோட்டர்ஸ் என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு முடிவுகளை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாற்றித் தர தயாராக இருப்பதாக ஒப்புக் கொண்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா டுடே இதழ் ரத்து செய்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி  வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் திரிக்கப்பட்டவை என்பதை தேர்தல் முடிவு அம்பலப்படுத்தியது.

புகழ்பெற்ற கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே இந்த லட்சனத்தில் இருக்கும் போது, தமிழகத்தில் விரக்தியின் விளிம்பில் இருக்கும் சில கட்சிகள் கூலிப்படைகளை அமைத்து நடத்தும் கருத்துக்கணிப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். 

இத்தகைய கருத்து திணிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார் கள். தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை குலைக்கும் வகையில் தான் திட்டமிட்டு கருத்துத் திணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இவை ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை என்பதால், அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்புகளைத் தவிர மற்ற கருத்துத் திணிப்புகளை சட்டப்படியாக தடை செய்ய மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: