Saturday, January 23, 2016

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஜெயலலிதா? பொதுவிவாதத்துக்கு தயாரா? :ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தமது அரசு நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். அதையும் தாண்டி மக்களுக்காக பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை  50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மக்களின் மறதி மட்டும் முதலீடாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே நிறைவேற்றிவிட்டதாக வீர வசனம் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. அதேபோல் தான் இப்போதும் 2011-ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், 10% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட  நிலையில், மீதமுள்ள 90% இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

*   2013-ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 3000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; 4 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரு மெகாவாட் கூட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
*   வேளாண் வளர்ச்சிக்காக இரண்டாம் விவசாயப் புரட்சித் திட்டம் செயல்படுத்தப்படும்; வேளாண் துறையில் 9% வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு புரட்சியும் நடக்க வில்லை. மாறாக வேளாண்மை வளர்ச்சி மைனஸ் 12.1% என்ற அதல பாதளத்துக்கு சென்றது.

*   கரும்பு கொள்முதல் விலை 2011 ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்;கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக கரும்புக்கான பரிந்துரை விலையை தமிழக அரசு ரூ.200 குறைத்தது; சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.1050 கோடியை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கரும்பு சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துவிட்டது.

*   விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அதிமுக கூறியது. ஆனால், இழப்பு தான் இரட்டிப்பானது. இதனால் 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

*  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும்; இதற்காக 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பால் உற்பத்தியை தினமும் ஒரு கோடி லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மாறாக குடிநீர் விலைக்கு விற்கப்பட்டதும், பால் சாலைகளில் கொட்டப்பட்டதும் தான் நடந்தது.

*   கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு சார்பில் ஒரு கேபிள் டி.வி.யைத் தொடங்கி, பிடிக்காத தொலைக்காட்சிகள் பழிவாங்கப்படுகின்றன.

*   கச்சத்தீவு மீட்கப்படும் என்றனர். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுதான் நடந்தது.
*   அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்; சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவுமே நடக்காததால் அரசுத்துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

*   ஊக வணிகம் தடுக்கப்பட்டு விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ஊக வணிகம் தழைக்கிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.260 என்ற உச்சவிலையைத் தொட்டது.

*   58 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இலவச பேரூந்து பயண அட்டை திட்டமும் நிறைவேறவில்லை.

*   தமிழகத்தில் ரூ.1.20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும். தமிழகம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு பைசா கூட கூடுதல் வருவாய் ஈட்டப்படவில்லை. மாறாக  ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை ரூ.4.12 லட்சம் கோடி கடனாக அதிகரித்தது தான் சாதனை.
*   சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றார்கள். கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்ததுதான் மிச்சம். கடந்த 5 ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு லட்சம் கொள்ளைகளும் நடந்துள்ளன.

*   உயர்கல்வித்துறையில் புதிய சாதனைகள் படைக்கப்படும் என்றார் ஜெயலலிதா. அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அனுமதியில்லாத திருவள்ளூர் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள்  படிப்பையும், பணத்தையும் இழந்தது தான் மிச்சம். நேற்று கூட விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரியில் படித்து வந்த  மாணவிகள் 3 பேர் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பாலியல் தொல்லை தரப் பட்டதாலும் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்த அவலம் நடைபெற்றிருக்கிறது.

அ.தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பட்டியல் நீளமானது. ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், 90% நிறைவேற்றப் படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருப்பதாக நான் கூறுகிறேன். இது குறித்து   முதலமைச்சருடன் பொதுவிவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா தயாரா?’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: