Tuesday, January 12, 2016

சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதத்தில் முடித்த ஜெ. ஜல்லிக்கட்டுக்காக நீதிமன்றத்தை நாடவில்லை: ராமதாஸ்


சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடித்து சாதகமான தீர்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டிய ஜெயலலிதாவும், தமிழக அரசும் கடந்த 19 மாதங்களில் ஒருமுறை கூட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா? என்ற வினா எழுந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் உண்ணாநிலை, கருப்புக்கொடி போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இப்போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் காவல்துறை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்ததையடுத்து, தென் மாவட்ட மக்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. அதே உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், மக்களின் உற்சாகம் வடிந்து கோபமாக கொந்தளிக்க தொடங்கியிருக்கிறது. 

அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 20&க்கும் மேற்பட்ட இடங்களில் உண்ணாநிலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் மாடுபிடி வீரர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய, மாநில அரசுகளும் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு முழுக்க முழுக்க தமிழக அரசு தான் காரணம். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டு 19 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தடையை அகற்றவோ, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 19.05.2014 அன்றே தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு விட்ட நிலையில், அம்மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்து தடையை அகற்ற வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கி இப்போது வரை அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் குறைந்தபட்சம் 20 முறையாவது தமிழக அரசை வலியுறுத்தியிருப்பேன். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடித்து சாதகமான தீர்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டிய ஜெயலலிதாவும், தமிழக அரசும் கடந்த 19 மாதங்களில் ஒருமுறை கூட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை. நீதிமன்றத்திடம் நியாயத்தை வலியுறுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத  அரசு, நியாயம் கேட்டு மக்கள் நடத்தும் போராட்டத்தை முடக்க முயல்வது அடக்குமுறையின் அடையாளமாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிப்பதற்காக விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் முன்வைக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உண்மையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்திருப்பதால் காளைகளுக்கு நன்மை ஏற்படாது; மாறாக தீமை தான் ஏற்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காக குழந்தைகளைப் போல பாசம் காட்டி காளைகள் வளர்க்கப் படுகின்றன. நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கண்காணிப்பில் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதால் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.  இத்தகைய சூழலில், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதால் அதற்காக வளர்க்கப்பட்ட மாடுகள் அனைத்தும் இறைச்சிக்காக கொல்லப்படும். இதைத் தான் விலங்குகள் நலவாரியங்கள் விரும்புகின்றனவா? என்று தெரியவில்லை.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு அப்போட்டிகளை நடத்த மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அதற்கு தடை போடுவது சரியானதாக இருக்காது. எனவே, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தில்லி விரைந்து பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அது முடியாவிட்டால் கூட ஜல்லிக்கட்டு குறித்த தங்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பொதுமக்கள் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், நிறைவேற்றிக் கொள்ளவும்  அரசு தடை போடக்கூடாது. அதேபோல், மாடுபிடி வீரர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, தற்கொலை போன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: