Monday, January 26, 2015

சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்; ராமதாஸ்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக தொகுத்து  தமிழ் சமுதாயத்திற்கு பரிசளித்தவர். 1874 ஆம் ஆண்டு தமது 19 ஆவது வயதில் ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணியைத் தொடங்கிய உ.வே.சா. தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சுமார் 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் தாத்தா சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய போது முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடு தான் இடிக்கப்பட்டிருக்கிறது.

உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2012 செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அப்போது பாதி இடிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் காப்பாற்றப்பட்டது. அப்போதே அந்த வீட்டை உ.வே.சா அவர்களின் நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதை தமிழக அரசு ஏற்றிருந்தால் தமிழுக்கு தொண்டு செய்த தமிழ் தாத்தாவின் இல்லம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால் உ.வே.சா.வின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

இதன்பிறகாவது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தாவின் இல்லம் அமைந்திருந்த இடத்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப் பட்டிருக்கும் போதிலும் சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு  வாங்கி நினைவு இல்லம் அமைத்திருக்கிறது. 

அதேபோல், தமிழ் தாத்தா பிறந்த உத்தமதானபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும் திருவல்லிக்கேணியில் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவதே சரியானதாக இருக்கும்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கர் லண்டனில் சில காலம் வாழ்ந்த இல்லத்தை வாங்கி அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்று மராட்டிய மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, லண்டன் வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் லண்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை தமிழக அரசு வாங்கி, அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். உ.வே.சா அவர்களின் 160 ஆவது பிறந்த நாள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அந்த நாளில் அவரது நினைவு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: