Saturday, January 10, 2015

இப்போதே விமர்சிப்பது சரியாக இருக்காது! படகுகளையும் இலங்கை விடுவிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்!

 

தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேனா முதல் வெளிநாட்டுப் பயணமாக அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையொட்டிய நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அவர் ஆணையிட்டிருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து புதிய அதிபர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இதுகுறித்து அவர் பின்னர் முடிவெடுப்பார் என்றும் அரசின் செய்தித்தொடர்பாளர் ரஜித செனரத்ன கூறியிருக்கிறார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையோ அல்லது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையோ விடுவிப்பது முழுக்க முழுக்க இலங்கை அதிபரின் அதிகார வரம்புக்குட்பட்டதாகும். இதற்காக யாரிடமும் சட்ட ஆலோசனையோ - அரசியல் ஆலோசனையோ கேட்கத் தேவையில்லை. அவ்வாறு இருக்கும்போது இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க ஆணையிட்டுள்ள புதிய அதிபர் சிறிசேனா, மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்காததைப் பார்க்கும் போது, இராஜபக்சேவின் கொள்கைகளையே இவரும் கடைபிடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, கடந்த மாத இறுதியில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் படகுகள் விடுவிக்கப் பட வில்லை. அதன்பின்னர் தமிழக மீனவர்கள் 15 பேர் புதிதாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை ஊர்க்காவல் படை  அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.

படகுகள் இல்லாததால் சுமார் 500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட மிகவும் முக்கியமானது தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தான். தமிழக மீனவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில் அவர்களை விடுவிப்பது; அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அதேநேரத்தில் இலங்கையில் புதிய அதிபர் இப்போது தான் பதவியேற்றிருக்கிறார் என்பதாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதாலும், அவரது செயல்பாடுகளை இப்போதே விமர்சிப்பதோ அல்லது உள்நோக்கம் கற்பிப்பதோ சரியானதாக இருக்காது. எனினும், தமிழக மீனவக் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களுடன் சேர்த்து , கடந்த 6 மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சொந்தமான படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதுதான் இலங்கை காட்டும் உண்மையான நல்லெண்ணமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இலங்கை அதிபர் இந்தியா வரும்போது, அவருடன் விரிவாக பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: