Thursday, January 1, 2015

திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாதையில் அரசு செல்லக்கூடாது: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில்  65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப் படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற வினா எழுந்தபோது, அதற்கான விடையாக 1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான அப்போதைய அரசு  ஏற்படுத்தியது தான் திட்டக் குழு ஆகும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.

இதுவரை நடைமுறையில் இருந்த மத்திய திட்டக் குழு வளர்ச்சிக்கு வழி வகுத்தது ஒருபுறமிருக்க, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சமநிலையை பராமரிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஆயோக், வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக திகழுமே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதுமட்டுமின்றி, கொள்கை வகுக்கும் நடைமுறையில் தனியாரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருவதால், இந்த அமைப்பின் முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்களாகவே இருப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

 தனியார் துறையினர் அல்லது பெரு நிறுவனங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று கருதும் மெத்தப்படித்த வல்லுனர்கள் நிதி ஆயோக்கில் இடம் பெறும் பட்சத்தில், அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரியவில்லை. மேலும் இத்தகைய வல்லுனர்கள் பொதுவாக மானியங்களுக்கு எதிரானவர்களாக இருப்பர் என்பதால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான மானியங்களையும் குறைக்கும்படி நிதி ஆயோக் நெருக்கடி எழும். அதற்கு அரசு பணிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. 

மத்திய திட்டக்குழு இருந்தவரை அதன் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டை திட்டக்குழு தான் தீர்மானிக்கும். இதில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்காக நிலையான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஆனால், புதிய அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும் பிரதமரின் முடிவு தான் இறுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மேலாக எல்லா அதிகாரங்களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டால், அது நன்மைக்கு வழி வகுக்காது; மாறாக, நாட்டில் சர்வாதிகாரம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும்.

மொத்தத்தில், மத்திய அரசு நிர்வாகத்தில் இதுவரை மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தனியார் பெரு நிறுவனங்கள் இனி நேரடியாக தலையிட வேண்டும்; அனைத்து அதிகாரங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தமது இரட்டை நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வவே  இப்படி ஒரு மாற்றத்தை பிரதமர் செய்திருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கும் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது ஆகும்.

எனவே, மத்திய திட்டக்குழுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கும் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை சீரமைத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: