Tuesday, December 30, 2014

சட்டத்தை நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்தும் பெங்களூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு; ராமதாஸ்

 

ஏமாற்றங்கள் மறைந்து மாற்றம் காண ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

ஒவ்வொரு புத்தாண்டும் புதிய நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது. கடந்து போன ஆண்டில் எத்தனையோ ஏமாற்றங்களைச் சந்தித்தாலும் அவையும் கடந்து போகும் என்ற மன உறுதியுடன் தான் புத்தாண்டை நாம் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் சோதனைகள் நிறைந்த 2014 ஆம் ஆண்டு முடிந்து சாதனைகள் நிகழக் கூடிய 2015 ஆம் ஆண்டை வரவேற்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே 2014 ஆம் ஆண்டும் நம்பிக்கையுடன் தான் பிறந்தது. ஆனால், அந்த ஆண்டின் மாற்றங்கள் நிகழ்ந்ததைப் போலவே ஏமாற்றங்களும் மக்களை வாட்டின. மக்களின் துயரங்கள் தீர மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அதன்படியே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாற்றம் தான் ஏற்பட்டதே தவிர மலர்ச்சி ஏற்படவில்லை; மாறாக எல்லா முனைகளிலும் மக்களுக்கு ஏமாற்றம் தான் தொடர்ந்தது. 

ஊழல் செய்துவிட்டு சட்டத்தை சில நாட்கள் ஏமாற்றலாம்; சில மாதங்கள் ஏமாற்றலாம்; நிரந்தரமாக ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்தும் வகையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தது. ஆனால், அதன் பிறகும் ஊழல் குறையவில்லை. அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதுடன், அரசு நிர்வாகம் என்று ஒன்று நடக்கிறதா? என்பதே தெரியாத அளவுக்கு தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. 

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், சர்க்கரை ஆலை பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் கரும்பு விவசாயிகளும் தவிக்கும் நிலையிலும் இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழக நிர்வாகம்.

இன்னொரு புறம் கனிமவளக் கொள்ளை குறித்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் நிலையில், கொள்ளைக்கு காரணமானவர்களை காப்பாற்ற அரசே முயல்வது கவலை தருகிறது. 

முல்லைப்பெரியாற்று அணை வழக்கில் தீர்வு கிடைத்தால், காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் உழவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. மின்சாரத்தைப் பொறுத்தவரை இயற்கை அன்னை கை கொடுத்த ஒருசில நாட்களைத் தவிர்த்து மீதமுள்ள நாட்கள் அனைத்தும் தமிழகத்திற்கு இருண்ட காலமாகவே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு சோகங்களுக்கும் குறைவைக்கவில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்  நடத்திய முறைகேடுகளால் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் தகர்ந்து விழுந்து அப்பாவி மக்கள் 61 பேர் உயிரிழந்தனர். ஆட்சியாளர்களின் வருமான வேட்கை காரணமாக அரசு விற்கும் மதுவைக் குடித்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்; 2 லட்சம் குடும்பங்கள் ஆதரவற்றவை ஆகின்றன.ஆனாலும், ஆட்சியாளர்கள் இலக்கு வைத்து மது விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றங்களையும், துயரங்களையும் விரட்டி, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான மந்திரம் மக்களின் ஆள்காட்டி விரலின் நுனியில் தான் இருக்கிறது. மக்கள் விரும்பும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தாண்டில் அடித்தளம் அமைத்து அடுத்த ஆண்டில் செயல்படுத்திக் காட்ட இந்த புத்தாண்டுநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் ஒரு முறை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: