Monday, December 1, 2014

மோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல: சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘‘ இராமதாசு, வைகோ போன்றோர் மோடியை விமர்சிக்கக்கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்கள் போல செயல்படக்கூடாது’’ என்று பேசியிருக்கிறார். இதற்கு முன் நடத்திய பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம் குறித்தும் அவர் பாடம் நடத்தியுள்ளார்.

கூட்டணிக்கான இலக்கணம் குறித்தெல்லாம் மற்றவர்கள் பாடம் நடத்தித் தெரிந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அதேநேரத்தில் ‘கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல’ என்பதை எனது பாசத்திற்குரிய தமிழிசை சவுந்தரராஜனும், கூட்டணி இலக்கணம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 
நட்புக்கு அழகு தவறுகளைத் திருத்துதல் என்ற உண்மையை புரிந்து வைத்திருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் தவறு செய்யும்போது அதை முதல் ஆளாக சுட்டிக்காட்டுகிறோம்; தவறை சரி செய்யும்படி வலியுறுத்துகிறோம். இது கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டது தான்; இது இலக்கணத்தை மீறிய செயல் என்று எவரேனும் நினைத்தால் அவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்று தான் கருத வேண்டும்.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி தான் வெற்றி பெற்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தி.மு.க. தலைவர் கலைஞரை அ.தி.மு.க. அரசு கைது செய்த போது, கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தேன். அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை சகித்துக் கொள்ள முடியாமல் 3 மாதங்களில் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, அடுத்த நான்கே முக்கால் ஆண்டுகளுக்கு முதன்மை எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டது. 

2006 ஆம் ஆண்டில் தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ம.க. தான் முதன்முதலில் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகக் கூறி கடிதம் கொடுத்தது. அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தி.மு.க. அணியில் இருந்த போதிலும், அதன் தவறுகளுக்கு மவுன சாட்சியாக இருக்கவில்லை. தி.மு.க. தவறு செய்த போதெல்லாம் எதிர்த்தோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கொடநாட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்த நிலையில் பேரவையிலும், வெளியிலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். 

பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை பறித்தும், பல லட்சக்கணக்கானோரின் வாழ்விடங்களை அழித்தும் துணை நகரங்களை அமைக்க தி.மு.க. அரசு முனைந்த போது அதை கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். மக்கள் நலனுக்கு எதிரான தி.மு.க. அரசின் பலத் திட்டங்களை தடுத்து நிறுத்தி, மக்கள் நலனைக் காத்தோம். அப்போதெல்லாம் கூட்டணியிலிருந்து கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்று யாரும் கூறவில்லை. மாறாக தைலாபுரத்திலிருந்து தலைவலிக்கு தைலம் வந்திருக்கிறது என்று தான் கலைஞர் கூறுவார். ஆரோக்கியமான விமர்சனங்களை இந்த வகையில் தான் எதிர்கொள்ள வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பா.ம.க. அங்கம் வகித்த போதும் கூட அந்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட நான் தயங்கியதில்லை. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடந்த 15 ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தபோது அதை முதலில் எதிர்த்தது நான் தான்.

இலங்கைப் போர் குறித்த இந்தியாவின் அணுகுமுறை தவறானது என்பதை அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எந்தக் கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி நலனுக்காக மக்கள் நலனில் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் எனக்கு  இல்லை. அதேநேரத்தில் எந்த தருணத்திலும் அரசியல் நாகரீகமின்றி யாரையும் நான் விமர்சித்ததில்லை; இனியும் விமர்சிக்கப் போவதில்லை.

திருச்சியில் கடந்த 26.09.2013 அன்று நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் பேசிய அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும்; இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். அவர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதும் நரேந்திர மோடி இதே வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் இவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதை சுட்டிக்காட்டுவது தவறா?

ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொண்டு குவித்த சிங்களப்படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வலியுறுத்தின; தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான தமிழக பாரதிய ஜனதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்றதா? சிங்களப்படையினருக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், இலங்கை அரசு நடத்தும் அனைத்து இராணுவ மாநாடுகளிலும் இந்தியா தான் முதலில் பங்கேற்கிறது. 
ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; இந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தியது. மத்திய அரசின் செவிகளில் தமிழக மக்களின் குரல் ஏறியதா?

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 41 ஆவது பக்கத்தில் ,‘‘ அறிவுசார் சமுதாயத்தை படைப்பதற்கான வாகனங்களாக மொழிகள் உருவெடுக்கும் வகையில் அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அனைத்து வழிகளிலும் திணிப்பதைத் தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான இந்த செயலை சுட்டிக்காட்டினால் அது என்ன தேசத் துரோகமா?

அரசுத்துறை நிறுவனங்களின்பங்குகளை தனியாருக்கு விற்பது, வங்கிகள் தனியார் மயமாக்கல்,  பொது வினியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் நோக்குடன் உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தில் வழங்குதல், நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தல், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை குறைத்தல், மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு ஆகியவற்றை பா.ம.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் இவற்றை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

இதற்கெல்லாம் மேலாக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடியவன் போர்குற்றவாளி இராஜபக்சே, இலங்கை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது  முறையாக அதிபராக பதவியேற்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துவதை எப்படி ஏற்க முடியும்? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இப்படி மோடி வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்பதை தமிழிசை சவுந்தரராஜனுக்கு மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உணர்வுள்ள எந்த தமிழனும் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டான். இந்த உணர்வுடன் பிரதமரை விமர்சித்தார் என்பதற்காக, அரசியல் நாகரீகமின்றி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களின் கோரிக்கையை பாரதிய ஜனதாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் கருத்துப் பகிர்வுக்காக  ஒருங்கிணைப்புக்குழு போன்ற ஏதேனும் ஓர் அமைப்பை பாரதிய ஜனதா உருவாக்கியுள்ளதா? அத்தகைய அமைப்பு இல்லாத நிலையிலும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்து அத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா உள்ளிட்டோரிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் அளித்த மனுக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அவ்வாறு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இப்படி ஒரு யோசனையை தமிழிசை கூறுகிறார்?
தங்கள் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பது பாரதிய ஜனதாவுக்கும், தமிழிசை போன்றவர்களுக்கும்  பெருமையாக இருக்கலாம்.

 ஆனால், பிரதமர் என்பவர் 122 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானவர். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.  பிரதமர் குறித்து விமர்சனமே செய்யக்கூடாது என்பது புண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் மூடி வைத்து புரையோடிப் போகச் செய்வதற்கு சமமானதாகும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மனதில் கொண்டு, ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை திருத்திக் கொள்ள பா.ஜ.க. முன்வர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலன் தான் முதன்மையானதாகும். அதைக் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி  திருத்தும் ஆரோக்கியமான அரசியலை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: