Tuesday, December 30, 2014

ஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் கூடாது: ராமதாஸ்


ஆவின் பால் ஊழல்: அமைச்சர், அதிகாரிகளை தப்ப விடக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆவின் பால் கலப்பட ஊழலில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், ஆவின் ஊழல் குறித்து சிபி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பால் கலப்பட ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக காவல்துறை முயல்வதை இது அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆவின் பால் கலப்பட ஊழல் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த ஊழலின் பின்னணியில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.  ஆரம்பத்தில் இதை ஏதோ சாதாரணமான விஷயம் போல காட்டி, மூடிமறைக்க முயன்ற தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் அளித்த கடுமையான நெருக்கடி காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு ஆணையிட்டது. ஆனால், கலப்பட ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு 135 நாட்களாகிவிட்ட போதிலும்,இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்? என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் பெயரளவில் வழக்கு நடத்திவிட்டு, இதில் தொடர்புடைய பெரும்புள்ளிகளை காப்பாற்றவே தமிழக காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது.

ஆவின் நிறுவனத்தில் பொது மேலாளர் நிலையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகி வைத்தியநாதனுக்கு உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை வாகனம்  மூலம் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விதிகளை மீறி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. பால் கலப்பட ஊழல் வெளியான சில நாட்களில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி திடீரென நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பால் கலப்பட ஊழலில் உள்ள தொடர்பு காரணமாக அவர் பதவி நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற இயல்பான ஐயம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்; அதனடிப்படையில் அவரிடமும், ஆவின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லை என்பதிலிருந்தே அவர்களைக் காப்பாற்ற காவல்துறை முயற்சி செய்கிறது என்பதை உணர முடியும்.

அதேபோல், பால் கலப்படம் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ரூ.2.89 லட்சம் மட்டுமே இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதும் உண்மையை மூடி மறைக்கும் செயலாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சம் லிட்டர் வீதம் பால் திருடப்பட்டதாகவும், இந்த வகையில் ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடி தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில், வெறும் ரூ. 2.89 லட்சம் மட்டுமே இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணையில் நடந்த தவறுகளை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

பால் கலப்பட ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர குற்றப்புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அரசியல் குறுக்கீடு காரணமாக தங்களால் அதை செய்ய முடியவில்லை என்றால், அதை உயர்நீதிமன்றத்திடம் ஒப்புக்கொண்டு இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்றலாம் என்று தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: