Sunday, December 7, 2014

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கூடாது : ராமதாஸ்


’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:  ’’இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப் படும் வேண்டாம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சுவராஜ் கூறியிருக்கிறார். 

ஒரு தரப்பு மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்த இந்தியா மீதும் திணிக்கும் நோக்குடனான சுஷ்மா சுவராஜின் இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தில்லியில் நேற்று நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான விழாவில் பேசிய விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை சுஷ்மா வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சுஷ்மா இப்போது தமது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அதற்கு செயல் வடிவம் கொடுக்கத் துடிக்கிறார். மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாகவும் திகழும் இந்தியாவில் ஒரு சாராரின் புனித நூலாக கருதப்படும் கீதையை அனைத்துத் தரப்பினர் மீதும் திணிப்பது சரியானதாக இருக்காது.

அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதால் தான் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகவத் கீதையில் பல நல்ல கருத்துக்கள் இருப்பதை மறுப்பதற்கானதல்ல. அதே கருத்துக்கள் திருக்குர் ஆனிலும், பைபிளிலும் உள்ளன. கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றும் வெவ்வெறு மதங்களை பின்பற்றுபவர்களின் புனித நூலாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன. இந்த சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி கடந்த 13.04.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கீதையுடன் ஒப்பிடும் போது திருக்குறளில் ஏராளமான முற்போக்குக் கருத்துகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், மனிதநேயம், உணவு முறை, தாய் அன்பு, போர், பெரியோ ரை மதித்தல், ஆட்சி முறை, எதிர்க்கட்சிகளுக்கான இலக்கணம் என திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்ற ஒன்றே முக்கால் அடியில் உலகப் பொதுவுடமைக் கொள்கையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இந்த உலகிற்கு வடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

’கடமையை செய்... பலனை எதிர்பாராதே’ என்ற நிலக்கிழாரியக் கொள்கையை பகவத் கீதை வலியுறுத்துகிறது. ஆனால், திருக்குறளோ,‘‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’’ என்று எந்த முயற்சிக்கும் பயன் உண்டு என்ற நம்பிக்கையை விதைக்கிறது. ‘‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது... எது நடக்குமோ அதுவும் நன்ற�® �கவே நடக்கும்’’ என்று கூறுவதன் மூலம் விதிப்பயனை நம்ப வேண்டும் என்று கீதை போதிக்கிறது. ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’ என்பதன் மூலம் சோர்வின்றி உழைத்தால் விதியையும் வெற்றி கொள்ளலாம் என்கிறது திருக்குறள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவையும் போதித்த திருக்குறளுக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் தகுதி உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மொழித் திணிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சுஷ்மா கூறும் நிலையில், இன்னொருபுறம் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தி கற்றுக்கொளள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

 மொழித்திணிப்பையும், கலாச்சாரத் திணிப்பையும் தமிழகம் மட்டும் தான் கடுமையாக எதிர்க்கிறது என்பதால் ஒரு புறம் திருவள்ளுவரின் பிறந்த நாள் வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கான கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட்டிருக்கும் போது கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது மோசடி அரசியலக்க பார்க்கப்படும். எனவே, கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை கைவிட்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: