Tuesday, December 31, 2013

மதுவை ஒழிக்கவும், மாற்றம் காணவும் ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்போம்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சோதனைகளுக்குப் பின்னே சாதனைகள் தான் அணிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் 2014&ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டாவது ஏமாற்றத்தைத் தராமல் மாற்றத்தைத் தராதா? என்ற எதிர்பார்ப்புடன் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2013ஆம் ஆண்டு புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் தான் பிறந்தது என்றாலும், கிடைத்தவை என்னவோ ஏமாற்றங்கள் தான். 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, காவிரி ஆற்றை நிர்வகிப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தின் நலனில் மட்டுமே அக்கறை காட்டி வரும் மத்திய அரசு, இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சம்பா சாகுபடிகள் முழுமையாக நடைபெறவில்லை.  கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களுக்கு இந்த ஆண்டும் நியாயமான விலை கிடைக்காததால் உழவர்களின் துயரம்  தொடருகிறது.
144 தடை உத்தரவு, அப்பாவிகள் மீது பொய் வழக்குகள், அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள் என சட்டம் & ஒழுங்கும் சந்தி சிரித்தது. நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தடுக்கும்  நோக்கத்துடன் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் தொடர்ந்து கடைகளை நடத்தும் அநீதியும், அதனால் சாலை விபத்துகள் அதிகரிக்கும் அவலமும் தான் தொடர்கின்றன. மதுவால் பாதிக்கப்பாடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மதுவின் தீமைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழக அரசோ மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, அதை வெள்ளமாக ஓடவிட்டு மக்களை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி, எல்லா தீமைகளுக்கும் தாயான மதுவை ஒழித்து மக்களைக் காப்போம் என்று இந்த புத்தாண்டின் முதல் நாளில் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.
விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலைவாய்ப்பில் மந்த நிலை என இந்த ஆண்டில் எதுவுமே மகிழ்ச்சி அளிப்பவையாக இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமானால் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றப்படவேண்டும். விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழகத்திலிருந்து நல்லவர்களையும், திறமையானவர்களையும் தேர்ந்தெடுக்கவும் மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: