Sunday, January 30, 2011

திமுக கூட்டணியில் பாமகவும் இருக்கிறது-டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருப்பதாக முதல்வர் கருணாநிதி டெல்லியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது எந்தெந்த கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, இப்போதைக்கு திமுக, காங்கிரஸ் தவிர, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகியவையும் உள்ளன என்றார்.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து விடுமா என்று கேட்டதற்கு ஜனவரி 31ம் தேதி சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளேன். பேசிய பிறகுதான் அதுகுறித்துக் கூற முடியும். இப்போதே கூற முடியாது என்றார் முதல்வர்.

காங்கிரஸ் தலைவர்களுடன் பேசப் போவது என்ன என்ற கேள்விக்கு, எத்தனை தொகுதிகளில் கட்சிள் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளை யார் யார் எடுத்துக் கொள்வது என்பது குறித்து பேசுவோம், நாளைதான் (இன்று) அது முடிவாகும் என்றார் கருணாநிதி.

தனது பேட்டியின் மூலம் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளை அறிவித்துள்ளார் கருணாநிதி. அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

சரத் பவார், வயலார் ரவியுடன் சந்திப்பு

டெல்லி வந்து சேர்ந்த பின்னர் முதல்வர் கருணாநிதியை வேளாண் அமைச்சர் சரத் பவார் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழக மழை, வெள்ள நிவாரண நிதியை விரைவில் விடுவிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதேபோல அமைச்சர் வயலார் ரவியும் முதல்வரை வந்து சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான ங்கள் வந்து போகும் வகையில் தரம் உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் விமானப் போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதல்வர் விவாதித்தார்.

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் கருணாநிதி. அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யப்படவுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸாருடன் திமுக பேசும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: