Thursday, January 13, 2011

கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு, அதை ஒழிக்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை : பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத வேறுபாடு இன்றி பொங்கல் வைத்தனர். விழாவில் தமிழர்களின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்தும் கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், மான் கொம்பு ஆட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழர்களின் வாழ்வு முழுவதும் கலையோடு தொடர்புடையது. தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது மகிழ்ச்சி, சோகம், களைப்பு என எல்லா சூழல்களிலும் பாட்டுகளை பாடும் மரபு, தமிழர்களுடையது.

அதேபோல் எவ்வளவோ வீர விளையாட்டுகள் இருந்திருக்கின்றன. பெண்களுக்காக மட்டுமே 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. ஆனால், இன்று தமிழர்கள் தங்கள் கலைகளை, வீர விளையாட்டுகளை இழந்திருக்கிறார்கள். நாம் நமது பண்டைய கலைகளை காப்பாற்றியாக வேண்டும்.

எனவே, குழந்தைகளை மாலை நேரங்களில் கட்டாயம் விளையாடச் செய்யுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதேபோல் நம் வீர விளையாட்டுகளெல்லாம் மறைந்து, இப்போது ஊரெல்லாம், தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இங்கே கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இந்த போராட்டத்திற்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும். நானே நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

விழாவில் கிருஷ்ணமூர்த்தி ஆதீனம், கத்தோலிக்க பேராயர் சின்னப்பா, இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம், புதுப்பேட்டை பள்ளிவாசல் இமாம் தாஜீதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: