Sunday, February 7, 2016

பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும்: ராமதாஸ்



கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலும், சீர்கேடுகளும் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடைபிடிக்கப்படும் முறை அவற்றில் முதன்மையானதாகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப் படவில்லை. ஆய்வக உதவியாளர் தேர்வில் நடந்த ஊழலும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம். ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிடுவதிலேயே குளறுபடிகள் தொடங்கி விட்டன. ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை பெற்று  பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் வழக்கம். கடந்த காலங்களில் இவ்வாறு தான் நியமனம் நடைபெற்றது. இப்பணிக்கு இதுவரை போட்டித் தேர்வு நடத்தப்பட்ட வரலாறு இல்லை.

ஒருவேளை போட்டித்தேர்வு மூலம் தான் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என  அரசு விரும்பினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகமே இந்த போட்டித் தேர்வுகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகளை வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், எழுத்துத் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும்;  இந்த தேர்வுகளில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்; நேர்காணலில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது தான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவலாகும்.

இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்திற்கு தடை விதித்தது. இதையே காரணம் காட்டி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இவ்விஷயத்தில் தொடக்கம் முதலே அடுத்தடுத்து தவறுகளை செய்து வந்தது தமிழக அரசு தான். தமிழகத்தைப் பொருத்தவரை கல்வித்துறை பணி நியமனங்கள் வேலைவாய்ப்பக  பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நடைபெறுவது வழக்கம். ஒருகட்டத்தில் மத்திய அரசு ஆணைப்படி ஆசிரியர்கள் நியமனம் போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெற்றது. ஆய்வக உதவியாளர் பணிகளையும் அதே முறையில் நிரப்புவதில் சிக்கல் இல்லை. மாறாக, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை புறக்கணித்து விட்டு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவதாக கூறுவது ஊழலுக்கே வழி வகுக்கும்.

போட்டித்தேர்வு நடத்தப்பட்டால் அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வக உதவியாளர் பணியை விட உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர் பணிக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 3 மற்றும் 4 ஆம் நிலை பணிகளுக்கோ நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறு இருக்க இப்பணிக்கு நேர்காணல் நடத்தி அதன் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செய்ய முயல்வது அநீதி ஆகும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். அவ்வாறு பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே நேர்காணல் என்ற குறுக்குவழியை ஜெயலலிதா அரசு கடைபிடிப்பதாக தோன்றுகிறது.

நேர்காணலில் மதிப்பெண்களை வழங்க வரையறுக்கப்பட்ட எந்த நெறிமுறையும் இல்லாத நிலையில்,  நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பது என்பது தகுதியுள்ளோரை  புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களை நியமிப்பதற்கு மட்டுமே உதவும். இந்த திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது என்பதால் தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நடத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு. கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும். எனவே,  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: