டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்படுவதாகவும், டீசல் விலை ரூ.1.51 உயர்த்தப்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.56.08 ஆக குறைந்துள்ள நிலையில், டீசல் விலை ரூ.47.13 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலைக்குறைப்பு ஓரளவு நிம்மதி அளிக்கும் போதிலும், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் வெளிப்படை தன்மையற்ற முறையும், அவற்றின் மீதான வரிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடைபிடிக்கும் மனிதநேயமற்ற அணுகுமுறையும் இயற்கை அறத்திற்கு எதிரானவை ஆகும். பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் என அறிவித்தது. இதை மத்திய அரசே கடைபிடிக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை சரியும் போது அதன் பயனை மக்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், விலைக் குறைப்பு செய்யப்படுவதற்கு முன்பே கலால் வரியை உயர்த்தி, விலைக் குறைப்பை மத்திய அரசு தடுப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற, முழுக்க வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.
உலக சந்தையில் நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 32.53 டாலர் ஆகும். இது பிப்ரவரி 15 ஆம் தேதி விலையான 30.48 டாலரை விட 2.05 டாலர் அதிகமாகும். இந்த அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதாக இருந்தால், டீசல் விலையைப் போல பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டீசல் விலையை உயர்த்தி விட்டு, பெட்ரோல் விலையை குறைப்பதென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை பெட்ரோல் விலை ஏற்கனவே அதிகமாக உயர்த்தப்பட்டு இப்போது பெயரளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் விளக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 33 ரூபாய், டீசல் 24 ரூபாய் என்ற விலைக்குத் தான் விற்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு மத்திய அரசின் ஆசை தான் காரணமாகும்.
மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். இவ்வளவு வருமானத்தை கூடுதலாக ஈட்டும் மத்திய அரசு இப்போது டீசல் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. லிட்டருக்கு ரூ.13.47 கூடுதல் வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அதில் பத்தில் ஒரு பங்கை குறைப்பதால் எதுவும் குறைந்து விடாது. ஆனால், அனைத்து செலவுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரியிலிருந்து தான் வருவாய் திரட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆசை தான் இந்த நிலைக்கு காரணமாகும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது. டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட அதிக தொகையை வரியாக வசூலிப்பது கந்து வட்டிக்கடை நடத்துவதை விட மிக மிக மோசமான செயலாகும். இது போன்ற வணிக நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படக்கூடாது.
டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், அதற்கு இணையாக சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
No comments:
Post a Comment