பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பது சென்னை மாநகர மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
‘‘அம்மா குடிநீர் திட்டம் சென்னை மாநகரில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் 100 இடங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக அந்த பகுதிகளில் மணிக்கு 2,000 லிட்டர் நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரித்து வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஏழை மக்கள் குடிநீர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எதையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியாது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக அறிந்திருப்பது தான்.
இலவசக் குடிநீர் திட்டத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறாரே தவிர அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான செலவு குறித்த மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. இன்றே திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் விதிகளின்படி செய்யப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். இன்னும் 15 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டால் அதன்பிறகு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு காரணம், இப்படி ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டு விட்டால் 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக அவர் அறிவித்திருப்பதே, தேர்தல் வாக்குறுதியிலிருந்து பிறழ்ந்து மக்களை ஏமாற்றும் செயல் தான்.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 5 ஆம் பக்கத்தில்,‘‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம். இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத் திருப்பதுடன், 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும்.
ஆனால், ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு, இலவசக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர் 5 ஆண்டுகளாக ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, ஆட்சியை விட்டு அகற்றப்படவிருக்கும் நேரத்தில் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது போன்று அவர் நாடகமாடுகிறார்.
சிலரை சில நேரத்தில் ஏமாற்றலாம்... ஆனால், அனைவரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. ஜெயலலிதாவின் இத்தகைய நாடகங்களைப் பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஜெயலலிதா அரசுக்கான மதிப்பெண் மைனசில் தான் இருக்கும் என்பதை விரைவில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்ற தேர்வில் தமிழக மக்கள் நிரூபிக்கப் போவது உறுதி!’’
No comments:
Post a Comment