Saturday, January 31, 2015

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும்; ராமதாஸ்

 
சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் வடலூர் இராமலிங்க அடிகளார். அன்பு மற்றும் கருணையை அடையாளமாகக் கொண்டிருந்த வள்ளலாருக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பதாக அரசு அளித்த வாக்குறுதி 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பது தான் சோகம்.

வள்ளலார் என்றதுமே நினைவுக்கு வருவது வடலூர் சத்திய ஞான சபை தான் என்ற போதிலும்,  அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடம் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற எண் கொண்ட இல்லம் தான். வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்த போதே அவரது  தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான்  எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டதும் இந்த வீட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின் வழிநடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.  

எந்த உயிரையும் கொல்லக் கூடாது, புலால் உண்ணக்கூடாது, யாரையும் துன்புறுத்தக் கூடாது, பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வள்ளலாரின் போதனைகள் உலககெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் சமயங்களைக் கடந்து வள்ளலாரின் வழி நடப்பவர்கள் அவரது நினைவாக எண்ணற்ற பணிகளை செய்துவருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்கவருக்கு நினைவிடம் அமைத்து பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வள்ளலாரின் நினைவாக  அவரால் உருவாக்கப்பட்ட வடலூர் சத்திய ஞான சபையில் உணவு வழங்குவதற்காக மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குதல், அவர் முக்தியடைந்த தைப்பூச நாளில் மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்ற போதிலும் அவற்றைவிட அவருக்கு நிணைவிடம் அமைப்பது முக்கியம் ஆகும். எனவே, 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், வள்ளலார் முக்தியடைந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அவரது ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். இதுவே வள்ளலாரின் நினைவு நாளில் நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Friday, January 30, 2015

தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் பிப்.4ல் மனு: பா.ம.க. அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்கள் அதிகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணைகளில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவை தவிர மற்ற ஊழல்கள் குறித்த தகவல்களையும் திரட்டியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் 04.02.2015 புதன்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை  உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பா.ம.க. குழு சென்னை கிண்டியிலுள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை அளிக்க உள்ளது. இவ்வாறு பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை திருத்த வேண்டும்; ராமதாஸ் அறிக்கை


தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கருநாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடத்தை பயிற்று மொழியாக்குவதற்காக கல்வி பெறும்  உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான மசோதா நாளை மறுநாள் தொடங்கும் கருநாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்வதற்கான கருநாடக அரசின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது.

கருநாடகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கடந்த 1994 ஆம் ஆண்டு அம்மாநில அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கன்னட பயிற்று மொழி ஆணை கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்து விட்டன. ஆனாலும், அத்தீர்ப்பில் விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்த கருநாடக அரசு கன்னடத்தையே தொடர்ந்து பயிற்று மொழியாக கடைபிடித்து வருகிறது. இதற்கு சட்டப்பாதுகாப்பு  பெறும் நோக்கத்துடன் தான் சட்டத்திருத்தம் செய்ய கருநாடக அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 29(எஃப்) பிரிவில் இடம் பெற்றுள்ள, ‘‘நடைமுறைக்கு சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்’’  என்ற வாசகத்தில் நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் என்ற சொற்களை நீக்குவதன் மூலம் தாய்மொழியை, அதாவது கன்னடம் பயிற்று மொழியாகிவிடும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் போதிலும், தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்வதில் தீவிரமாக இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் தான் நிலவுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்& தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக சட்டம் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.  இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்த அப்போதைய கலைஞர் அரசு அதன்பின் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது. தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்காக மட்டும் அரசாணை பிறப்பித்த அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி, முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை வலிந்து திணிக்கப்பட்டது. அதன்பின் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் போராட்டம் நடத்திய போது, தமிழ்நாட்டில் 2122 பள்ளிகளில் மட்டும் தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆனால், இன்றோ தமிழகத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழை வாழ வைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்  எவ்வாறு திட்டமிட்டு வீழ்த்தப்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைச் சுட்டிக்காட்ட முடியாது.  

தாய்மொழி வழிக் கல்வி தான் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும். தாய்மொழியில் அல்லாமல் பிறமொழியில் குழந்தைகளை பயிற்றுவிப்பது என்பது நீச்சல் தெரியாத குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சு திணற வைப்பதற்கு ஒப்பானதாகும் என்று ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ கூறியிருக்கிறது. இதன்பிறகாவது தாய்மொழி வழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து, கருநாடகத்தை பின்பற்றி தமிழ்நாட்டில் தாய்மொழி வழிக் கல்வி முறையை கொண்டுவர கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் தேவையான திருத்தங்களைச் செய்து அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இம்முயற்சிக்கு ஏதேனும் முட்டுக்கட்டை போடப்படுமானால், ஒத்தக் கருத்துடைய முதலமைச்சர்களை ஒன்று திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தாய்மொழி வழிக் கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Tuesday, January 27, 2015

7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்: ராமதாஸ்

 

இராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் 7 தமிழர்களை விடுவித்து, அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால் பல முக்கியப் பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்த வழக்கு அவற்றில் முக்கியமானது.

ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே & ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் 25 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. 

இவர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த ஆண்டு பிப்ரவரி  18-ஆம் தேதி குறைக்கப்பட்டது. இவர்கள் 14 ஆண்டு சிறை தண்டனைக் காலத்தை ஏற்கனவே நிறைவுசெய்து விட்ட நிலையில், அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால்  7 தமிழர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இவர்களின் விடுதலை குறித்து அரசியல் சட்ட அமர்வு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், இதற்கான விசாரணையை அடுத்த 3 மாதங்களில்  அரசியல் சட்ட அமர்வு தொடங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 

அதனடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, கடந்த ஜூலை 9 ஆம் தேதி கூடி, இந்த பிரச்சினையில் அனைத்து மாநில அரசுகளும் தங்களது நிலைப்பாட்டை ஜூலை 18-ஆம் தேதிக்குள் பதில் மனுவாக  தாக்கல் செய்ய வேண்டும்; அதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தது.

ஆனால், அறிவித்தவாறு ஜூலை 22 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதன்பின் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கை விசாரித்த அரசியல் சட்ட அமர்வின் தலைவரான தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அதற்கு பதிலாக புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவில்லை. 

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு அடுத்த மாதம் 19&ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது. 7 தமிழர்களும் சுமார் 25 ஆண்டுகளாக சிறைவாழ்க்கையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பதை தீர்மானிப்பதில் ஏற்பட்ட தாமதம்  காரணமாக அவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது முறையல்ல; இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

7 தமிழர்களையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இதற்கான வேண்டுகோளை முன்வைத்தாலே, கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வில்லை. 

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கிலும் இதேபோன்ற அலட்சியமான அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்ததால் தான் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை நடப்பாண்டில் நடத்த முடியவில்லை. தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் பாதுகாப்பதில் தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கு இந்த இரு பிரச்சினைகளை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இந்தப் பிரச்சினையில் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் அவர்களை விடுவித்து இயல்பான வாழ்க்கையை வாழ தமிழக அரசு வகை செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Monday, January 26, 2015

சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்; ராமதாஸ்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக தொகுத்து  தமிழ் சமுதாயத்திற்கு பரிசளித்தவர். 1874 ஆம் ஆண்டு தமது 19 ஆவது வயதில் ஓலைச்சுவடிகளை புத்தகமாக்கும் பணியைத் தொடங்கிய உ.வே.சா. தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சுமார் 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் தாத்தா சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய போது முதலில் வாடகைக்கு இருந்து பின்னர் விலைக்கு வாங்கிய வீடு தான் இடிக்கப்பட்டிருக்கிறது.

உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2012 செப்டம்பர் மாதத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அப்போது பாதி இடிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் காப்பாற்றப்பட்டது. அப்போதே அந்த வீட்டை உ.வே.சா அவர்களின் நினைவு இல்லமாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதை தமிழக அரசு ஏற்றிருந்தால் தமிழுக்கு தொண்டு செய்த தமிழ் தாத்தாவின் இல்லம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசின் அலட்சியத்தால் உ.வே.சா.வின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

இதன்பிறகாவது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் தமிழ் தாத்தாவின் இல்லம் அமைந்திருந்த இடத்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப் பட்டிருக்கும் போதிலும் சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு  வாங்கி நினைவு இல்லம் அமைத்திருக்கிறது. 

அதேபோல், தமிழ் தாத்தா பிறந்த உத்தமதானபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற போதிலும் திருவல்லிக்கேணியில் அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவதே சரியானதாக இருக்கும்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கர் லண்டனில் சில காலம் வாழ்ந்த இல்லத்தை வாங்கி அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்று மராட்டிய மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, லண்டன் வீட்டை ரூ.35 கோடிக்கு வாங்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் லண்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை தமிழக அரசு வாங்கி, அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். உ.வே.சா அவர்களின் 160 ஆவது பிறந்த நாள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அந்த நாளில் அவரது நினைவு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது இந்தியாவுக்கு இழுக்கு : ராமதாஸ்

 

இந்திய குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரீனாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கவர்னர் ரோசைய்யா கொடி ஏற்றினார்.   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீர,தீர செயல் புரிந்தோருக்கு அண்ணா விருது வழங்கினார்.

இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகளூம், கண்கவர் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றன.  இந்த ஊர்திகளில் தற்போதைய முதல்வர் படம் இருக்க வேண்டிய இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருந்தது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமான கரமானது; இந்தியாவுக்கு இழுக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் கிராமசபை கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு: மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்

 

இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளையொட்டி தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பந்தார அள்ளி ஊராட்சியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் கோ. மாதன் தலைமையேற்றார். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

 பெண்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:

1. பந்தார அள்ளி கிராமத்திற்கு வருவதற்கான பாதையில் அமைந்துள்ள 2 மதுக்கடைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

2. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு பிப்ரவரி  17 ஆம் தேதிக்குள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மதுக்கடைகள் அனைத்தையும் மூடி அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

3. தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ரூ.2000 கோடியில் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அத்திட்டத்தால் தண்ணீர் கிடைக்கவில்லை. பல கிராமங்களில் ஒருநாள் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் படி தண்ணீர் வழங்கப்பட்டால் அடுத்த நாள் கலங்கலான, அசுத்தமான நிலத்தடி நீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் இந்த திட்டத்தின் நோக்கமே சிதைந்து விட்டது. எனவே, கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழு அளவிலும், மக்களுக்கு பயன்தரும் வகையிலும் செயல்படுத்த வேண்டும்.

4. பந்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பல ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தருமபுரி மாவட்டத்தில் யாருக்கும் புதிய குடும்ப அட்டைகள்  வழங்கப்படவில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக குடும்ப அட்டைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-& இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களிடம் அப்பகுதி மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Sunday, January 25, 2015

காற்றில் பறக்கும் விதிகள்: தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துக!: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன. சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ&இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்& மே மாதங்களில் தான் மேற்கொள்ளப் பட வேண்டும். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கைத் தொடங்கும். 

மெட்ரிக் பள்ளிகளில்  ஏப்ரல்     4 &ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் கூட வழங்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் இம்மாதம் 03 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியார் பள்ளிகள் இப்போதிலிருந்தே மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல்நாள் இரவிலிருந்தே பள்ளிக்கூட வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெற்றோர்கள்      காத்துக் கிடக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு விண்ணப்பத்திற்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி என பல்வேறு  பெயர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பிடுங்கப்படுகிறது. இதுதவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.75 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்காக அக்குழந்தைகளிடமும், அவர்களின்  பெற்றோர்களிடமும் நேர்காணலும், ஆண்டு வருவாய் குறித்த விசாரணையும் நடக்கின்றன. 

இந்த விதிமீறல்களும், கல்விக் கட்டணக் கொள்ளைகளும் வெளிப்படையாகவே நடக்கும் போதிலும் இதையெல்லாம் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்பது தான் வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும். அது என்ன மாயமோ.... மந்திரமோ.... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இதுவரையிலான 45 மாதங்களில் ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த பள்ளியும் தவறே செய்யவில்லை என்று கூறமுடியாது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை வெளிப்படையாகவே நடப்பது அனைவருக்கும்  தெரிகிறது. அதன் பிறகும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததன் மர்மத்தை அரசு தான் விளக்க வேண்டும்.

விதிகளை மீறும் பள்ளிகள் மீதும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பல இடங்களில் பள்ளி நிர்வாகங்கள் மீது புகார் கொடுத்த பெற்றோர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கண்ணுக்கு நேராக கட்டணக் கொள்ளை நடைபெறும் போது பெற்றோர் புகார் கொடுத்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அரசு அதன் கடமைக் கண்ணை மூடிக்கொள்வது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். தவறு செய்யும் பள்ளி நிர்வாகங்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளின் விதிமீறல்கள் மற்றும் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை என்ற அமைப்பு இருந்தாலும் அது ஊழலில் திளைக்கிறது; செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தி 100% இடங்களும் நிரப்பப்படுவதால் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறி போகின்றன. இது ஏழைக் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயலாகும். இதைத் தடுக்க அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திலும், மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 

ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வி மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் பள்ளிக் கல்வித்துறையே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; பள்ளிக்கு அருகில் எவ்வளவு தொலைவில் மாணவர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை அளவீடாக இருக்க வேண்டும்; இந்த விதிமுறைகளை ஏற்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தயங்கக்கூடாது.

Saturday, January 24, 2015

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? பிப்.15-ல் முடிவு: டாக்டர் ராமதாஸ்

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெறும் தமது கட்சியின் செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னையில் இன்று கோகுல மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:கே: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?ப: நான் ஏற்கனவே சொன்ன பதிலைதான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தலில் போட்டியிடவும் இல்லை.கே: அப்படியானால் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா?ப:- சேலத்தில் பிப்ரவரி 15-ந் தேதி நடைபெறும் பா.ம.க. செயற்குழுவில் இது பற்றி முடிவு செய்கிறேன்.கே: 2016-ல் நீங்கள் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?ப:- தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று கூட்டணி, புதிய கூட்டணி அமைப்போம்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Tuesday, January 20, 2015

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் கிடையாது: பாமக அறிவிப்பு

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இடைத் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்றும் பாமக அறிவித்துள்ளது.பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பாமக தலைமை நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டதால் திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.இதையடுத்து காலியாகியுள்ள திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் இன்று (20.01.2015) செவ்வாய்க் கிழமை மாலை நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். அந்தக் கூட்டத்தில் திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; இடைத் தேர்தல்களை நடத்துவதால் மக்களின் வரிப்பணமும், நேரமும் தான் வீணாகிறது என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி கடைபிடித்து வருகிறது. இதுவரை நடந்த இடைத் தேர்தல்களில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலைத் தவிர வேறு எதிலும் பா.ம.க. போட்டியிட்டதில்லை.ஏதேனும் ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியோ அல்லது மக்களவை உறுப்பினர் பதவியோ காலியானால், அங்கு இடைத் தேர்தல் நடத்துவதை விடுத்து, ஏற்கனவே அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே அப்பதவிக்கு நியமிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சியினர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். அரசு எந்திரமும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முடுக்கி விடப்பட்டிருக்கிறது.ஏற்கனவே அரசு நிர்வாகம் செயலிழந்துள்ள நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பணத்தை வாரியிறைப்பார்கள் என்பதால் நிர்வாகம் முற்றிலுமாக செயலிழக்கும். மேலும், ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.2000 முதல் ரூ. 5000 வரை பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி இடைத் தேர்தல் என்ற பெயரில் ஜனநாயக படுகொலை நடத்த ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.திருமங்கலம் முதல் ஆலந்தூர் வரை அனைத்து இடைத்தேர்தல்களும் இத்தகைய ஜனநாயகப் படுகொலைகளுக்கு அழிக்க முடியாத சாட்சியங்களாக விளங்குகின்றன.இத்தகைய சூழலில் திருவரங்கம் தொகுதி இடைத் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே, திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இதில் போட்டியிடும் எந்தக் கட்சி வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.அவதூறு வழக்கில் கோர்ட்டில் ராமதாஸ்முன்னதாக இன்று சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஜரானார்.பருப்பு கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராமதாஸ் இன்று நேரில் ஆஜரானார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார். சட்ட ரீதியாக அதை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

Friday, January 16, 2015

மக்களின் உணர்வுகளை தமிழக அரசு அவமதித்து விட்டது : ராமதாஸ்

 
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வந்த போதிலும், அத்திருநாள் முழுமையடையவில்லை. எந்த சக்தியாலும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொங்கல் திருநாளுடன் பின்னிப் பிணைந்த அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டிருப்பது தான் வருத்தம் தரும் இந்த சூழலுக்குக் காரணமாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். கடந்த 7 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு பல்வேறு வடிவங்களில் முட்டுக்கட்டைப் போடப்படுவதும், அதை சட்டப்போராட்டத்தின் மூலம் முறியடித்து போட்டிகளை நடத்துவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான சட்டப்போராட்டம், போட்டி நாளுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். சாதாரண காலத்திலேயே இவ்வளவு நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டதைக் கருத்தில் கொண்டு சட்டப்போராட்டத்தை இன்னும் முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ததுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக கருதி முந்தைய முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஒதுங்கி, உறங்கி விட்டது தான் இன்றைய நிலைக்கு காரணமாகும்.

சிந்து வெளி நாகரிக காலத்திலேயே, அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘ஏறுதழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பாரம்பரியம் மிக்க போட்டிகளுக்கு எதிராக எவ்வளவு வலிமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதையேற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்திருக்கக்கூடாது. இல்லாத அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வாதங்களையெல்லாம்  ஏற்றுக் கொண்டு வளர்ச்சிக்கு தடை போடப்படும் சூழலில், 4000 ஆண்டு கால பாரம்பரியத்தை வலுவில்லாத வாதங்களின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வந்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எண்ணற்ற காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நீதிபதிகள் முன்பு எடுத்துரைத்து தடையை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால்,  மற்ற வழக்குகளில் காட்டிய ஆர்வத்தில் ஒரு துளியைக் கூட இவ்வழக்கில் காட்ட ஆட்சியாளர்கள் முன்வராதது தான் மிகப்பெரிய துரதிருஷ்டமாகும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 8 மாதங்கள் எதுவும் செய்யாமல், கடைசி 8 நாட்களில் தீவிரமாக செயல்படுவதைப் போல தமிழக அரசு காட்டிக் கொண்டது. அப்போது கூட தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தில்லி சென்று பிரதமரை சந்தித்து இந்தப் பிரச்சினையை விளக்கி தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வர வேண்டும் என்று அண்மையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக முதலமைச்சரோ வழக்கம் போல் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக முதலமைச்சரின் அனைத்துக் கடிதங்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையையே அந்தக் கடிதத்திற்கும் மத்திய அரசு அளித்ததன் பயனாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகிவிட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இல்லாத பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்காததால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் களையிழந்து கிடக்கின்றன. அதுவும் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் இந்த அவலம் நடந்திருப்பது கொடுமையானது. எந்த ஒரு நிகழ்வாலும் ஏற்படாத அளவுக்கு, மிகப்பெரிய மனக்காயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காதது மக்களின் உணர்வுகளை மதிக்காத செயல் என்றால், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும். இனிவரும் நாட்களிலாவது மக்களின் மனக்காயங்களுக்கு  மத்திய, மாநில அரசுகள்  மருந்து போட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Tuesday, January 13, 2015

ஜல்லிக்கட்டு போட்டியை எப்படியாவது நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற வினா எழுந்துள்ளது.

விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக 2007 ஆம் ஆண்டிலிருந்தே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது சிக்கலானதாக இருந்து வருகிறது. எனினும், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெறுதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் உதவியால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில்  07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமும் செல்லாது என்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உருவானது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை கோருவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவ்வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இதனால் இவ்வழக்கில் ஒருமுறை மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி,  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை யாருக்கும் ஆபத்து இல்லாமல்  பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாட்டில் செய்யப்பட்டிருக்கும் போதிலும், இந்தப் போட்டிகளை நடத்த எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்பது தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் காலம்காலமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், அதை அகற்றுவதற்காகவும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை கடந்த 19.05.2014 அன்று தாக்கல் செய்த தமிழக அரசு, அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் அம்மனுவை விசாரணைக்கு கொண்டு வந்து சாதகமான தீர்ப்பைப் பெறவும், அதனடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசியல் பழிவாங்கல் வழக்குகளாக இருந்தால்  நீதிபதிகளின் வீடுகளுக்கே அரசு வழக்கறிஞர்கள் படையை அனுப்பி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசு, இந்த வழக்கில் நீதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதில் அதற்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் அரசு  செயல்படவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக 8 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு, இப்போது அதிகாரிகள் குழுவை தில்லிக்கு அனுப்பி, பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்துதல் என்ற பிரிவில் இடம்பெற்றிருக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது. ஆனால், காலம் கடந்து விட்டதாகக் கூறி தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேநேரத்தில் இன்னும் கூட காலம் கடந்து விடவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஒருநாள் முன்பாக 15.01.2008 அன்று தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது. அடுத்த நாளே பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. 

அதேபோல், இப்போதும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இப்பிரச்சினையை நேரடியாக தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டு உடனடியாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; மற்றொரு புறம் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து சாதகமான தீர்ப்பை பெற முயல வேண்டும் என்பன உட்பட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Saturday, January 10, 2015

இப்போதே விமர்சிப்பது சரியாக இருக்காது! படகுகளையும் இலங்கை விடுவிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்!

 

தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேனா முதல் வெளிநாட்டுப் பயணமாக அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையொட்டிய நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அவர் ஆணையிட்டிருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து புதிய அதிபர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இதுகுறித்து அவர் பின்னர் முடிவெடுப்பார் என்றும் அரசின் செய்தித்தொடர்பாளர் ரஜித செனரத்ன கூறியிருக்கிறார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையோ அல்லது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையோ விடுவிப்பது முழுக்க முழுக்க இலங்கை அதிபரின் அதிகார வரம்புக்குட்பட்டதாகும். இதற்காக யாரிடமும் சட்ட ஆலோசனையோ - அரசியல் ஆலோசனையோ கேட்கத் தேவையில்லை. அவ்வாறு இருக்கும்போது இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க ஆணையிட்டுள்ள புதிய அதிபர் சிறிசேனா, மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்காததைப் பார்க்கும் போது, இராஜபக்சேவின் கொள்கைகளையே இவரும் கடைபிடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, கடந்த மாத இறுதியில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 66 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் படகுகள் விடுவிக்கப் பட வில்லை. அதன்பின்னர் தமிழக மீனவர்கள் 15 பேர் புதிதாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை ஊர்க்காவல் படை  அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.

படகுகள் இல்லாததால் சுமார் 500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட மிகவும் முக்கியமானது தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தான். தமிழக மீனவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில் அவர்களை விடுவிப்பது; அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அதேநேரத்தில் இலங்கையில் புதிய அதிபர் இப்போது தான் பதவியேற்றிருக்கிறார் என்பதாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதாலும், அவரது செயல்பாடுகளை இப்போதே விமர்சிப்பதோ அல்லது உள்நோக்கம் கற்பிப்பதோ சரியானதாக இருக்காது. எனினும், தமிழக மீனவக் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களுடன் சேர்த்து , கடந்த 6 மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சொந்தமான படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதுதான் இலங்கை காட்டும் உண்மையான நல்லெண்ணமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இலங்கை அதிபர் இந்தியா வரும்போது, அவருடன் விரிவாக பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Friday, January 9, 2015

சர்வதேச சட்டத்தின் முன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இலங்கையில் மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்சே சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்சே இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அதைக் காட்டிலும் மன நிறைவளிக்கும் மற்றொரு விஷயம் இத்தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது தமிழர்கள் என்பது தான்.அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்ற போதிலும் சிங்களர்கள் அதிகம் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ராஜபக்சே தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார். இதனால் ராஜபக்சே பெற்ற முன்னிலையைக் கடந்து மைத்ரிபாலா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது.தமிழர்களுக்கு நன்றிமகிந்த அதிபராவதற்கு காரணமாக இருந்த தமிழர்களே இப்போது அவரை தண்டித்திருப்பது இனிமையான பழிவாங்கல் தான். இதை உணர்ந்து ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எச்சரிக்கையுடனும், நன்றியுடனும் மைத்ரிபால சிறிசேனா நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.ரணில் விக்ரமசிங்கேஅதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிபராக்கப்பட்டுள்ள சிறீசேனாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லை. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 100 நாட்களுக்குள் இவர் அதிகாரம் இல்லாத பொம்மை அதிபராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே அதிகாரம் கொண்ட பிரதமராகவும் மாறிவிடுவார்கள்.சர்வதேச சமுதாயத்தின் கடமைஇத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும். இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான இராஜபக்சே உள்ளிட்டோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.படைகள் வெளியேற வேண்டும்வடக்கு மாநிலத்திலிருந்து சிங்களப்படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கண்ணியமாக வாழ வகை செய்யப்பட வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தனித்தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் இலங்கையின் புதிய நிர்வாகம் நிறைவேற்றுவதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். says-ramadoss-218677.html

ராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்டர்களுடன் கொண்டாடிய அன்புமணி!

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.சைதாப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஏ.கே.மூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், வி.ஜே. பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொண்டனர்
இதேபோல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞர் தலைவருமான அன்புமணி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.ராஜபக்சே தோல்வியை பல்வேறு கட்சியினர் பட்டாசு வெடித்து தமிழகத்தில் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டையில் ஏராளமானோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் திருக்கோவிலூரிலும் தேமுதிக, திமுக, விசி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
 

Monday, January 5, 2015

ஜெயலலிதா மீது புதிய சொத்து குவிப்பு வழக்கு: கவர்னரிடம் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவரை மாற்ற வேண்டும் என்று இப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மனு போட்டு உள்ளார்.

அவரையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ளும்படியாக மனு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இயல்பான முடிவை எட்டுவதற்கு அன்பழகனையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதுதான்.

ஜெயலலிதா எந்த பதவியையும் வகிக்க தகுதியில்லை என்ற நிலையில் தனது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன தேவை? என்பதற்கு ஜெயலலிதாதான் விளக்கம் கூற வேண்டும்.

ஜெயலலிதா மீது இன்னொரு சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.

மத்திய பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக கூறுகிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எதிர்க்கட்சிகளின் கடமை தவறை சுட்டிக் காட்டுவதுதான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளை எடுத்துச் சொல்வோம். அதற்கு தீர்வையும் சொல்வோம்.

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும். எங்கள் தலைமையை யார் ஏற்றார்களோ அவர்களை ஏற்றுக் கொள்வோம்.

பா.ஜனதா தலைமையில் கூட்டணி ஏற்படும் என்பது அது அவர்களுடைய கருத்து. ஒருவேளை அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகலாம். நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பது பற்றி விரைவில் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம்.

அன்புமணிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காதது பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறிப்பிட்டு சொன்னால் அவர் அமைச்சர் ஆக கூடாது என்றுதான் நாங்கள் விரும்பினோம்’’கூறினார்.

Sunday, January 4, 2015

சாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முடிவெடுப்பது அவசியம் - ராமதாஸ்

சென்னை: சாப்ட்வேர் நிறுவனத்தின் தொழிலாளர் குறைப்பு நடவடிக்கையை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில், "ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டதால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாப்ட்வேர் நிறுவன ஆட்குறைப்பில் அரசு தலையிட்டு முடிவெடுப்பது அவசியம் - ராமதாஸ்

இப்போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், அதைவிட பெரிய துரோகத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செய்ய முடியாது.
சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக்கூடாது.
ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. எனவே, சாப்ட்வேர் நிறுவன தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளும் தலையிட்டு இந்த அநீதியை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Thursday, January 1, 2015

பணம் காய்க்கும் மரமா பொதுமக்கள்? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று மீண்டும் உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியதன் மூலம் உலக சந்தையில் எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வரும் நிலையில் அதன் பயன்களை மக்களுக்கு அளிப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை  மத்திய அரசு குறைக்க வில்லை. அதுமட்டுமின்றி, அவ்வப்போது கலால் வரியை உயர்த்துவதன் மூலம், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. 

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நேற்று முதல் பெட்ரோல் விலை 3.22 ரூபாயும், டீசல் விலை 3.00 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை குறைக்காத மத்திய அரசு இரு எரிபொருட்களின் மீதான கலால் வரியையும் தலா ரூ.2 உயர்த்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கலால் வரி உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு 3.75 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கலால் வரி உயர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் குறைக்க முடியும் என்ற போதிலும் அதை செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் குவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110.42 அமெரிக்க டாலராக ( ரூ.6636) இருந்தது. நேற்றைய நிலவரப்படி அதில் பாதிக்கும் குறைவாக, அதாவது 53.53 அமெரிக்க டாலராக (ரூ.3390) குறைந்திருக்கிறது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.93 ஆகவும், டீசல் விலை ரூ.61.12 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்து விட்டதால் பெட்ரோல் விலை ரூ.38 ஆகவும், டீசல் விலை ரூ.30 ஆகவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இரு எரிபொருட்களையுமே அவற்றின் இயல்பான விலையை விட லிட்டருக்கு ரூ.25 அதிக விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. இதுதான் மக்கள் நலன் விரும்பும் மத்திய அரசுக்கு அழகா?

எரிபொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 68,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். மறைமுகமான விலை உயர்வுகளையும் கருத்தில் கொண்டால், மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி வரை கூடுதலாக லாபம் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை செய்யாமல் ரூ. 3 லட்சம் கோடி லாபம் ஈட்ட மத்திய அரசு துடிக்கிறது. மக்களை பணம் காய்க்கும் மரமாக கருதி அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது தேவையில்லாமல் வரிகளை சுமத்தி மக்களை வதைப்பதை தவிர்க்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 25 குறைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக்: ஆபத்தான பாதையில் அரசு செல்லக்கூடாது: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில்  65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக நிதி ஆயோக் எனப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அமைக்கப் படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற வினா எழுந்தபோது, அதற்கான விடையாக 1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையிலான அப்போதைய அரசு  ஏற்படுத்தியது தான் திட்டக் குழு ஆகும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.

இதுவரை நடைமுறையில் இருந்த மத்திய திட்டக் குழு வளர்ச்சிக்கு வழி வகுத்தது ஒருபுறமிருக்க, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சமநிலையை பராமரிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஆயோக், வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக திகழுமே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதுமட்டுமின்றி, கொள்கை வகுக்கும் நடைமுறையில் தனியாரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருவதால், இந்த அமைப்பின் முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்களாகவே இருப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

 தனியார் துறையினர் அல்லது பெரு நிறுவனங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று கருதும் மெத்தப்படித்த வல்லுனர்கள் நிதி ஆயோக்கில் இடம் பெறும் பட்சத்தில், அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரியவில்லை. மேலும் இத்தகைய வல்லுனர்கள் பொதுவாக மானியங்களுக்கு எதிரானவர்களாக இருப்பர் என்பதால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான மானியங்களையும் குறைக்கும்படி நிதி ஆயோக் நெருக்கடி எழும். அதற்கு அரசு பணிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. 

மத்திய திட்டக்குழு இருந்தவரை அதன் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டை திட்டக்குழு தான் தீர்மானிக்கும். இதில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்காக நிலையான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஆனால், புதிய அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும் பிரதமரின் முடிவு தான் இறுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மேலாக எல்லா அதிகாரங்களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டால், அது நன்மைக்கு வழி வகுக்காது; மாறாக, நாட்டில் சர்வாதிகாரம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும்.

மொத்தத்தில், மத்திய அரசு நிர்வாகத்தில் இதுவரை மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தனியார் பெரு நிறுவனங்கள் இனி நேரடியாக தலையிட வேண்டும்; அனைத்து அதிகாரங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தமது இரட்டை நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வவே  இப்படி ஒரு மாற்றத்தை பிரதமர் செய்திருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கும் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது ஆகும்.

எனவே, மத்திய திட்டக்குழுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கும் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை சீரமைத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

நிலை குலைந்த தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில், தமிழகத்தின் நிதி நிலைமை முதலமைச்சர் குறிப்பிட்டதை விட பல மடங்கு மோசமாக இருப்பதை உணர முடிகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், ரூ.289 கோடி உபரி நிதி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.91,835 கோடியாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 45,917.5 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.8861.5 கோடி குறைவாக ரூ.37,056 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாய் ஈட்டியிருக்கிறது.

அதேபோல், வணிக வரி வசூல் 23.35% அதிகரிப்பதற்கு பதிலாக 1.48% மட்டுமே அதிகரித்துள்ளது. மாநில கலால் வரி வசூல் 28.75% என்ற இலக்கிற்கு பதிலாக 10.87% மட்டுமே உயர்ந்திருக்கிறது. முத்திரை மற்றும் பதிவுத்துறை வருவாய் 28.75% அதிகரிக்க வேண்டியதற்கு பதிலாக மைனஸ் 2.49 விழுக்காடாக குறைந்திருக்கிறது. வாகனங்கள் மீதான வரி 39.71% என்ற இலக்கில் 7 விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. நடப்பாண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்கையுமே எட்ட்ட முடியாமல் தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மையாகும். மாநில கலால் வரி வருவாய் மட்டும் தான் ஆறுதல்  தரும் வகையில் இருக்கிறது. இதற்குக் காரணம் அரசின் நிர்வாகத் திறமையில்லை; மது விற்பனை தான் என்பது இன்னொரு அவலமான உண்மை.

தமிழக அரசின் இந்த நிலை வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்தால், தமிழகத்தின் வரி வருவாய்  சுமார் ரூ.18,000 கோடி குறைவாக இருக்கும். இதை சமாளிக்க கடன் வாங்குவதை விட வேறு எந்த வழியும் இருக்காது. ஏற்கனவே தமிழக அரசு ரூ.1,78 லட்சம் கோடி கடன் வாங்கிக் குவித்துள்ள நிலையில், வரி வருவாய் வீழ்ச்சியை சமாளிக்க வாங்க வேண்டிய கடனையும் சேர்த்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ. 2 லட்சம் கோடியை எட்டிவிடும் ஆபத்து இருக்கிறது. தமிழக அரசின் கடன் தவிர தமிழ்நாட்டு மின்சார வாரியத்திற்கு ரூ. 1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்குள்ள உள்ள மற்ற கடன்களையும் சேர்த்தால் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடியைத் தாண்டும். இது நடப்பாண்டில் தமிழகத்தின்  ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (நிஷிஞிறி)  42 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். தமிழகத்தின் இந்த கடன்சுமையில் 60 விழுக்காட்டிற்கும் அதிக அளவை கடந்த 4 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தான் வாங்கிக் குவித்திருக்கிறது. கடன் சுமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருப்பதற்குக் காரணம் அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழலும், முறைகேடுகளும் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அரசுக்கு வர வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களுக்கும், சில தனியார் பண முதலைகளுக்கும் சென்று விடுவதால் தான் அரசின் கருவூலம் வறண்டு கிடக்கிறது என்று ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரிகளும். மூத்த பொருளாதார வல்லுனர்களும் எழுப்பியுள்ள குற்றச்சாற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது எவ்வளவு அதல பாதாளத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.  இந்த நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் எவ்வாறு மீட்கப் போகிறார்கள்? கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்தது ஏன்? என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். அது அவர்களின் உரிமையும் கூட.

எனவே, தமிழகத்தின் நிதி நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கான காரணங்கள் என்ன?  இதை சரி செய்து பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னென்ன செயல்திட்டங்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: