Friday, December 5, 2014

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வு கூடாது: ராமதாஸ்

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப் படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, இசை, தையல், ஓவியம் ஆகிய  கலைகளை கற்றுத்தருவதற்காக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 17.11.2014 ஆம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை  தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூகநீதியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல. 

இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 

இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கடினமானதாகும். 

அதுமட்டுமின்றி, ஆசிரியர் பணியிலிருந்து சிறப்பாசிரியர் பணி பல வழிகளில் மாறுபட்டதாகும். ஆசிரியர் பணி என்பது ஏட்டுக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதாகும். ஆனால், சிறப்பாசிரியர் பணி என்பது கலையை பயிற்றுவிப்பதாகும். இப்பணிக்கு கலை அறிவும், கற்பிக்கும் திறனும் தான் மிகவும் முக்கியமானது ஆகும். இவற்றைத் தகுதித் தேர்வின் மூலம் அளவிட முடியாது என்பதைக் கூட உணராமல் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகவே இந்த தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு கூறுவதையும் ஏற்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக இருப்பதாக கருதினால், உடனடியாக அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டியிருக்கவேண்டும். 

ஏதேனும் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு, சிறப்பாசிரியர்களுக்கு எதிரான இந்த வழக்கில் மட்டும் அவ்வாறு செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்தியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

தகுதித் தேர்வுக்கான நேர்காணலுக்கு 5 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்  வழங்கப்படும் விதம் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். ஆளுமை மற்றும் தோற்றப்பொலிவுக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுமைக்கும், தோற்றப் பொலிவுக்கும் துல்லியமான வரையறை இல்லாத நிலையில், எந்த அடிப்படையில் இதற்கான மதிப்பெண் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. 

ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு கூடுதலான மதிப்பெண் வழங்கி, அவர்களை பணியில் அமர்த்தவே இந்த முறை பயன்படும். ஆசிரியர்களுக்கான உடை விதியையும், கண்ணியத்தையும் அப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கடைபிடித்தாக வேண்டும் என்ற நிலையில், தோற்றப்பொலிவை பார்த்து மதிப்பெண் வழங்கப்போவதாகக் கூறுவது முறையல்ல. 

அறிவுசார்ந்த பணிக்கு புற அழகின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது புனிதமான ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைத்துவிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும். 

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 16,000 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணிநிலைப்பு வழங்குவதுடன், இனி வரும் காலங்களிலும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவிக்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: