Thursday, December 4, 2014

உலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலர் கிருஷ்ணய்யர்


 


முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் :

’’உலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலரும், நீதியரசருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் உடல்நலக் குறைவால் கொச்சியில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி மற்றும் துயரத்தில் நிலை குலைந்து போனேன்.

கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தாலும் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் முறையே அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் தான் கிருஷ்ணய்யர் நிறைவு செய்தார். சுதந்திரத்திற்கு பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இப்போது கேரளத்தில் உள்ள குதுபரம்பா தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1957 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த இந்தியாவின் முதல் இடதுசாரி அரசில் சட்டம், நீதி, மின்சாரம், நீர்ப்பாசனம், உள்துறை, சமூகநலன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக திறம்பட பணியாற்றினார். 

இந்தக் காலகட்டத்தில் மக்கள் நலனுக்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு அடிப்படை காரணமாக விளங்கினார். 1965ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் வழக்கறிஞர் பணியை தொடர்ந்த கிருஷ்ணய்யர் கேரள உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நீதியரசராக மொத்தம் 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

 சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். நீதியரசராக பணியாற்றிய காலத்தில் இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் இன்றும் நீதிபதிகளுக்கு வழிகாட்டியாகவும், சட்டப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு வேதமாகவும் விளங்குகின்றன. சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்த போது இவர் அளித்த பரிந்துரைகள் முற்போக்கு சட்டங்கள் இயற்றப்பட காரணமாக அமைந்தன.

உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்தார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடினார். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 2002 ஆம் ஆண்டு எனது தலைமையில் நடத்தப்பட்ட நீர்வளம் தொடர்பான கருத்தரங்கில் கிருஷ்ணய்யர் பங்கேற்றார். 

ஈழத் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் எனக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். 100 ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவை செய்த கிருஷ்ணய்யர் இன்னும் பல ஆண்டுகள் சேவை யாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி நம்மை தாக்கியிருக்கிறது.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: