தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டு முறையை தடம் புரளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அரசு வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் இது தொடர்பான வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, "தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்" என்று ஆணையிட்டது.
ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமலேயே தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு தொடரும் என ஜெயலலிதா அறிவித்தார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை நிர்ணயிக்காத நிலையில், 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதனால் தமிழகத்தில் இடஒதுக்கீடு தொடருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு தேவையே இல்லை என்ற போதிலும் முழுமையான சமூக நீதியை நிலை நாட்டும் நோக்குடன் கர்நாடகத்தில் இம்மாத இறுதியில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு 2 மாதங்களில் முடிவடைந்த பின் கர்நாடகத்தில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், முழுமையான சமூக நீதியை நிலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் வகையில் கர்நாடக அரசை பின்பற்றி தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது" என ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment