Wednesday, December 17, 2014

வேலூர் அருகே கொலை செய்யப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ராமதாஸ் பேட்டி

 

பா.ம.க.வின் சேலம் மாவட்ட ஆலோனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சேலம் வந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சுப்ரமணிய கவுண்டர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் அல்லாத ஒரு கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உண்டு. மேலும், வாக்குகளை விலைக்கு வாங்கி மது மற்றும் ஊழலை மையமாக கொண்டு ஆட்சி நடத்தும் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைப்பதை அவமானமாக கருதுவதாகவும் தெரிவித்த ராமதாஸ் ஏற்கனவே கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளதாக  தெரிவித்தார்.

பா.ம.க தலைமையில் அமையும் கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மது மற்றும் ஊழலுக்கு எதிரான விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாக ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வண்கொடுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 2835 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், 5432 பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினரின் பொறுப்பின்மையால் ஒவ்வொரு 2 நாட்களுக்கும், 5 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், 9 பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகின்றனர். குடியாத்தத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் பெண் பாதுகாப்பிற்காக கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையங்களில் சாதாரண உடையுடன் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கிரானைட் ஊழலை விசாரிக்கும் சகாயம் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அரசு பணியாளர் நியமனம் பெரியார் பல்கலை கழகத்தில் பணிநியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள குற்றசாட்டு ஆகியவை குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர் தலையிலும் 24,711 ரூபாய் கடன் சுமையை சுமத்தியுள்ளது. தேவைக்கு அதிகமாக கடன் வாங்கி குவிக்கிறது என்றும் அவர் மாநில அரசை குற்றம் சாட்டினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: