Tuesday, December 16, 2014

பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியல் ஜனவரியில் வெளியிடுவோம்: ராமதாஸ்



பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்,  கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியல் ஜனவரியில் வெளியிடுவோம்: ராமதாஸ்
ஈரோட்டில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ’’காவிரியின் குறுக்கே கர்நாடகமும், பாம்பாற்றின் குறுக்கே கேரளமும் முயற்சி செய்து வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அமராவதி நதியின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டுச்சேரி என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கான அடித்தளம் அமைக்க மத்திய புவியியல் வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

புதிய அணை கட்டப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பாமக தயாராகி வருகிறது.இந்திய அளவில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தொழில்வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி இறங்குமுகமாக இருந்து வருகிறது. மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் இருக்கும் தொழில்நிறுவனங்கள், பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

2016-ம் ஆண்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த திமுக, அதிமுக இல்லாத மாற்று அணியை பாமக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே, சில கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.பாமக தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம். மது, ஊழல் ஆகியவற்றை எதிர்த்து தான் புதிய கூட்டணி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாவட்டங்களில் மட்டுமன்றி மேற்கு, தென்மாவட்டங்களிலும் பாமக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் கோவில்பட்டி, சோழவந்தான், ஆலங்குடி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டோம். மேற்கு மாவட்டங்களில் பவானி, அந்தியூர், தாராபுரம் தொகுதிகளில் ஏற்கெனவே பாமக போட்டியிட்டுள்ளது.

பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளின் பெயர் பட்டியலை ஜனவரியில் வெளியிடுவோம். மக்களவைத் தேர்தலை போலவே, சட்டப்பேரவைத் தேர்தலிலும் முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்குவோம்.

தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் நடந்துள்ள ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் 2014–15ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் பல வாரங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. ஆனால் கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

 2013–14–ம் ஆண்டில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ.2250 ஆக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கவில்லை. இதுவரை தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.700 கோடி கரும்பு பாக்கி தொகை வைத்துள்ளது. கரும்பு சாகுபடி செலவு மற்றும் கூலி உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.இதேபோல் மஞ்சள் கொள்முதலை தமிழக அரசு நேரிடையாக செய்ய வேண்டும். மஞ்சளுக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: