Sunday, December 28, 2014

உரிமை கேட்டு போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதா? ராமதாஸ் கண்டனம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ள அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுடன் கூடிய புதிய ஊதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத நிலையில், உடனடியாக அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்; வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தங்கள் கணக்கில் செலுத்தாமல் வேறு செலவுகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அவர்களின் மற்ற கோரிக்கைகளும் நியாயமானவையே. கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழக அரசும் இதுவரை மறுக்க வில்லை; தமிழக அரசால் மறுக்கவும் முடியாது.

இத்தகைய சூழலில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசி இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய தீர்வை காண்பது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். ஆனால், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர  அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை முரட்டுத்தனமான முதலாளிகள் கையாளும் உத்திகளைப் போன்றதாக உள்ளன. தொழிலாளர்களை மிரட்டியும், ஒடுக்கியும் பணிய வைத்து விடலாம் என்று கருதும் ஆட்சியாளர்கள், அமைதி வழியில் போராடும் தொழிலாளர்களை காவல்துறை மூலம் கைது செய்து வருகின்றனர். ஒருவரின் விரலைக் கொண்டு அவரின் கண்களையே குத்துவதைப் போல அ.தி.மு.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை மற்ற தொழிற்சங்கங்கத்தினருக்கு எதிரான தூண்டி விட்டு, இருதரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கி வருகிறது தமிழக அரசு. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.

மதுரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் சென்றவர்கள் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டியுள்ளனர். கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான வேதாரண்யம் பணிமனைக்குள் நேற்று பிற்பகலில் இரு வாகனங்களில் அடியாட்களுடன் சென்ற வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என்.வி. காமராஜ் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அவருடன் சென்ற அடியாட்கள் அங்கிருந்த பொருட்களையும், கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். நடத்துனர் ஒருவரின் முகத்தில் கண்ணாடி குத்தி படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் மீது தொழிலாளர்கள் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.

சென்னை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல நகரங்களில் அறவழியில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இன்னொருபுறம் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நோக்குடன் தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்ந்தெடுக்கும் பணியில்  அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை விடுத்து அனுபவம் இல்லாதவர்களை பணியில் சேர்ப்பதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மதுரை அருகே நேற்று தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேரூந்து மோதி பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த காலங்களில் இத்தகைய அணுகுமுறையை கடைபிடித்ததால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், அந்த கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் பிடிவாதத்துடன் தமிழக அரசு செயல்படுவது நல்லதல்ல.

தொழிலாளர் சக்தியை அடக்குமுறை மூலம் ஒடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்; மே தினம் உருவான வரலாற்றை படித்தாவது தொழிலாளர்களின் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். வீணான அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை கைவிட்டு, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: