சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிட, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு கூடுதல் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:''சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931ஆம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்தியா விடுதலை அடைந்தபிறகு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், உண்மையான சமூகநீதியை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரேவழி என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.2010ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதி வாரியாக நடத்தப்படாத நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிட, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு கூடுதல் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து, அதன்படி இட ஒதுக்கீடு வழங்குவது தான் முறையானதாக இருக்கும். இல்லாவிட்டால், ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, அந்த வகுப்பில் பெரும்பான்மையாக உள்ள சாதியினரை புறக்கணித்து விட்டு, சிறுபான்மையாக உள்ள சமூகத்தினர் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது.தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இது நடந்து கொண்டிருக்கிறது. இந்த அநீதியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைவராலும் எழுப்பப்படுகிறது.சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது, அதை ஒழுங்குபடுத்துவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்பது முரண்பாடாக உள்ளது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, ‘‘தமிழ்நாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், இடஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும்'' என்று தெளிவாக ஆணையிட்டிருந்தது.இவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான இந்தத் தீர்ப்பை குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட சாதாரண அமர்வு எந்த அடிப்படையில் வழங்கியது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், இந்த கணக்கெடுப்பே சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிய சமூகநீதியாளர்களை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மோசடியாகும். இதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வகை செய்யப்படவில்லை என்பதுதான் இந்த முடிவுக்கு காரணம் என்றால் அதுவும் சரியல்ல.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு வகைசெய்யும் விதத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்குமே தவிர, அதில் உள்ள குறையை காரணம் காட்டி சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பு செருப்புக்கு ஏற்ப கால்களை வெட்டும் செயலாகும்.உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் இந்த தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டையே ரத்து செய்யும் நிலை ஏற்படலாம். எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்தோ, வேறு சட்ட ஏற்பாடுகளை செய்தோ சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
Friday, November 7, 2014
சாதிவாரி கணக்கெடுப்பு… உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment