Wednesday, November 12, 2014

நீதிபதி குன்ஹா மீதான அவதூறு: அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும் : ராமதாஸ்


 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :

’’வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை கடுமையாக விமர்சித்து  தீர்மானம் நிறைவேற்றியதற்காக வேலூர் மாநகராட்சி மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நீதிபதியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவும் ஆணையிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மூலம் சட்டத்தின் மாண்பு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. 
       
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவுடன், அவரிடம் தங்களின் போலி விசுவாசத்தை காட்டுவதற்காக நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் அ.தி.மு.க.வினர் எண்ணற்ற அவதூறுகளைப் பரப்பினர். 

சட்டத்தையும், நீதியையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக தமது கடமையை செய்த நீதிபதியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், தீர்ப்புக்கு மொழி அடிப்படையில் உள்ளர்த்தம் கற்பிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். அதிலும் குறிப்பாக அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளில் நீதிபதியை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றுவதும், பேசுவதும் மன்னிக்க முடியாத  குற்றம் ஆகும். வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் அவரை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தச் செயல்களுக்கு நான் அப்போதே கடும் கண்டனம் தெரிவித்திருந்தேன்.

நீதித்துறைக்கு எதிரான வேலூர் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இதற்காக மன்னிப்புக் கேட்டு நீதிபதி குன்ஹாவுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளையும், சட்டம் இயற்றும் அமைப்புகளையும் போர்வையாக பயன்படுத்திக்கொண்டு நீதித்துறையை அவமதிக்கும்  செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், நீதித்துறையை அவமதித்ததாக உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட சிலர் மட்டும் தான் கண்டிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் கண்டிக்கப்படாததுடன், அரச பதவிகளையும் அனுபவித்து வருகின்றனர்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டியில், குன்ஹாவை சட்டம் தெரியாத முட்டாள் நீதிபதி,   கன்னட வெறியன் என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது.  சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில், ‘‘அம்மாவை விடுதலை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்’’ என்று நீதித்துறையை எச்சரிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கிடையிலான  உறவை சீர்குலைக்கும் வகையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த  46 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 118 சட்டப்பேரவை உறுப்பினர்களும் நீதித்துறையைக் கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாமன்றக் கூட்டத்திலேயே நீதிபதி குன்ஹாவை விமர்சித்தார். அதை எதிர்த்த தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை சட்டப்பேரவையில் பேசும்போது, நீதிபதிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல என்று கடுமையாக விமர்சித்தார். அவரது வழியில் செயல்படும் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேவழியில் நீதிபதிகளை விமர்சிக்கின்றனர். இந்த போக்கை அனுமதித்தால், தமிழ்நாட்டில் தவறு செய்யும் ஆளுங்கட்சியினரை நீதித்துறை தட்டிக்கேட்க முடியாமல் போய்விடும். 

நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்கப்படவில்லை என்ற போதிலும், வேலூர் மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் இவர்களுக்கும் தார்மீகரீதியில் பொருந்தும். எனவே, நீதிபதி குன்ஹாவை விமர்சித்ததற்காக இவர்கள் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்புக் கேட்க மறுத்து நீதிபதிக்கு எதிராக தெரிவித்தக் கருத்துக்களில் உறுதியாக இருந்தால், தாங்கள் வகித்து வரும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: