Saturday, November 29, 2014

கர்நாடகத்தின் வழியில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை!


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில சமூக நலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா தெரிவித்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதிப் புரட்சியை மேற்கொள்ளும் கர்நாடக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றதில் இருந்தே அம்மாநிலத்தில் முழுமையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த கர்நாடக அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே அனுமதி அளித்துவிட்ட நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இந்தக் கணக்கெடுப்பு தொடங்குவதாக இருந்தது. 

மக்களவைத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கி இரு மாதங்களில் நிறைவடையும் என்று கர்நாடக சமூக நலத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ரூ.117 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பில் 1.25 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் பங்கேற்பர் என்றும் அமைச்சர் ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார். 

இப்பணி  நிறைவடைந்த பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே முழுமையான சமூகநீதியை ஏற்படுத்த முடியும் என்று தந்தைப் பெரியார் கூறினார். 

சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன். 

ஆனால், பெரியாரின் வழிவந்தவர்களாக கூறிக் கொள்ளும் திராவிட ஆட்சியாளர்கள் இதற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்படி 2010ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 

அதனடிப்படையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி எனது தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 13.10.2010 அன்று 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த 40&க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினேன். கலைஞரும் அக்கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவருடன் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால் அதன்பின் 7 மாதங்கள் அவர் பதவியிலிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைக்கும்போதெல்லாம் அளவுக்கு அதிகமான சலுகையை கேட்பதாக ஆட்சியாளர்களும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதியை பின்னுக்கு தள்ளும் செயல் என்று தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும் கருதி இதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா அளித்துள்ள விளக்கமே இவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும். ‘‘ஒவ்வொரு சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையை விடுங்கள்... ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரமே அரசிடம் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் உள்ளனர்; அவர்களின் வளர்ச்சி நிலை என்ன? அவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் அளித்துள்ளன என்பதை அறியவும், இதற்குப் பிறகும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும்’’ என்பதே சித்தராமையாவின் பதில் ஆகும்.

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்காக அம்மாநில அரசு கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கும் முழுமையாக பொருந்தும். அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று தான் அண்மையில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிர, சாதிவாரிக் கணக்கெடுப்பே தேவையில்லை என்று கூறவில்லை. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையுமில்லை.
ரூ.117 கோடி செலவில், இரு மாத அவகாசத்தில் கர்நாடகத்தில் நடத்தப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பை, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் குறைந்த செலவில், குறைந்த கால அவகாசத்தில் நடத்த முடியும். எனவே, முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: