பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின்படி வழங்குவதற்காக துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கொள்முதல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடந்தால், பருப்பு கொள்முதல் பின்னணியில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் அம்பலத்திற்கு வரும் என இதைப்பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், முந்தைய ஆட்சியில், கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி உளுத்தம்பருப்பு மற்றும் துவரம் பருப்பு கிலோ ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் கிலோ ரூ.25 என்ற விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான பருப்பு வகைகள் மற்றும் பாமாயிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது. இதில் தான் ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,461 டன் துவரம் பருப்பு, 9,000 டன் உளுத்தம்பருப்பு, 16,708 கிலோ லிட்டர் பாமாயிலும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாதமும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப் படுகின்றன.
இந்த வழக்கத்திற்கு மாறாக கடந்த 15.04.2013 அன்று ஓராண்டிற்கு தலா ஒரு லட்சம் கிலோ உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் வினியோகிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பங்கேற்க பல நிறுவனங்கள் முன்வந்த போதிலும், பல்வேறு காரணங்களைக் காட்டி, அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நான்கு நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ஒருமாதத்தில் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கோரப்பட்டு 10 மாதங்கள் கழித்து 2014ஆம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 2 புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன.
வழக்கமாக ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு 10 மாதங்களுக்கு பிறகும் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நடைமுறையில் பங்கேற்ற இரு நிறுவனங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு ஒரு டன்னுக்கு முறையே ரூ75,000, ரூ.89,000 என்ற அளவிலும், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம் முறையே ரூ.85,000, ரூ.99,000 என்ற அளவிலும் விலைக் குறிப்பிட்டிருந்தன.
இவற்றில் ராசி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான ஆணை ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டன்னுக்கு ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.40 கோடி பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம்பருப்பு கிலோ 89 ரூபாய்க்கும், மசூர் பருப்பு(துவரம் பருப்பு) கிலோ 75 ரூபாய்க்கும் வாங்கப்பட்டால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கடந்த ஜூலை&ஆகஸ்ட் மாதத்தில் உளுத்தம்பருப்பு டன் ரூ.70 ஆயிரத்திற்கும், மசூர் பருப்பு டன் ரூ.52 ஆயிரத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கும், நவம்பர், டிசம்பர் மாதத்திற்கும் இவை முறையே ரூ.75,000, ரூ.54,000 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் உளுத்தம்பருப்பை டன் ரூ. 43 ஆயிரம் என்ற விலையிலும், மசூர் பருப்பை டன் ரூ. 29 ஆயிரம் என்ற விலையிலும் கொள்முதல் செய்கிறது. இதைவிட 25% கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதாக இருந்தாலும் உளுத்தம்பருப்பு டன் ரூ.53,750 என்ற விலையிலும், மசூர் பருப்பு டன் ரூ.36,500 என்ற விலையிலும் தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என மொத்தம் ரூ.730கோடி இழப்பு ஏற்படும்.
சந்தையில் பருப்பு வகைகளின் விலை அடிக்கடி மாறக்கூடும் என்பதால் அவற்றை மாதாந்திர அடிப்படையில் கொள்முதல் செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது ஒட்டுமொத்தமாக ஓராண்டுக்கான பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும். மாதாந்திர அடிப்படையில் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 20 மாதங்களுக்கு முன் பெறப்பட்டு, 10 மாதங்களுக்கு முன் பிரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை இப்போது அவசர,அவசரமாக இறுதி செய்வதாக கூறப்படுவதில் இருந்தே ஆட்சியாளர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பருப்பு கொள்முதலை பொறுத்தவரை ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 04.10.2014 அன்று கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பல நிறுவனங்கள் உளுத்தம்பருப்பு டன் ரூ.60 ஆயிரத்திற்கு குறைவாகவும், மசூர் பருப்பு டன் ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாகவும் வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஆனால், அந்த நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் பொருளாதார விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இல்லை என்பதால் அந்த ஒப்பந்தப்புள்ளிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு 07.11.2014 அன்று புதிய ஒப்பந்தப்புள்ளி கோரி பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாற்றுகள் உண்மை என்று வைத்துக் கொண்டால் பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு ரூ.3000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, இந்தப் புகார்கள் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்; குற்றச்சாற்றுகளில் உண்மை இருந்தால் பருப்புக் கொள்முதல் ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment