தமிழ்நாட்டில் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாதுமணல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சகாயம் குழு மதுரை மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யிருக்கின்றன. இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு சாதகமான அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் குறித்து விசாரனை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 11.09.2014 அன்று சென்னை உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளில் இருந்தே இந்த விசாரணையை எப்படியாவது தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. அங்கு தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், சகாயம் குழுவை அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, சகாயம் குழு அமைக்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சகாயம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் கண்டித்தது.
அதன்பிறகு தான் அரை மனதுடன் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்டது.
தமிழகம் முழுவதும் நடந்த கனிம வளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து மட்டும் விசாரணை நடத்தினால் போதுமானது என்று தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சகாயம் குழு விசாரணைக்கு எந்த நோக்கத்திற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதோ, அந்த நோக்கத்தையே சிதைத்துவிடும் வகையில் தான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 10 மாவட்டங்களில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. கிரானைட் ஊழலைவிட மிகப்பெரிய கனிம வளக் கொள்ளையாக கருதப்படுவது தாது மணல் கொள்ளையாகும். நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டத்தில் மட்டும் 53 தாது மணல் குவாரிகளும், தூத்துக்குடி, குமரி, நெல்லை,மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 71 தாதுமணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல மாவட்டங்களில் ஆற்றுமணல், சவுடு மண் உள்ளிட்ட பல வகையான இயற்கை வளங்கள் கொள்ளை யடிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் நடக்கும் அனைத்து வகையான இயற்கை வள கொள்ளைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தா ன் இ.ஆ.ப. அதிகாரி சகாயம் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற ஆணைப்படி தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த அனுமதி அளிக்காதது ஏன்? என்று நிலவியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் சகாயம் கேட்டதாகவும், அதற்கு சுரங்கத்துறை ஆணையர் சரியான பதில் அளிக்காததுடன், விசாரணை வரம்பை மாற்றி அமைக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் விசாரணைக் குழு தலைவராக சகாயத்தை அமர்த்திய தமிழக அரசு, இன்னொருபுறம் அவர் இப்போது வகித்துவரும் அறிவியல் நகர துணைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்க மறுத்திருக்கிறது. கால்கள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, விருப்பம் போல நடமாட அனுமதி அளிப்பதைப் போன்றது தான் தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஆகும்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புரியும் ஒரு விஷயம் என்னவென்றால், கிரானைட் ஊழல், தாது மணல் ஊழல், ஆற்று மணல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட கனிமவளக் கொள்ளையின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய இமாலய சுரண்டலை தடுக்கத் தவறியதுடன், அதில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பதில் இருந்தே கனிமவளக் கொள்ளையர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் எந்தத் தவறைத் திருத்துவதானாலும் அதற்கு நீதிமன்றத்தின் கதவுகளைத் தான் திரும்பத் திரும்பத் தட்டியாக வேண்டும் என்ற நிலை நிலவுவது உண்மையாகவே வெட்கப்பட வேண்டியதாகும்.
தமிழகம் முழுவதும் நடந்த கனிம வளக் கொள்ளை மற்றும் ஊழல் குறித்த உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் சகாயம் குழுவின் விசாரணை வரம்பை தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த சில வாரங்களில் உயர்நீதிமன்றமும், அடுத்த சில மாதங்களில் தமிழக மக்களும் ஆட்சியாளர்களை கடுமையாக கண்டிப்பதும், தண்டிப்பதும் உறுதி.’’
No comments:
Post a Comment