Wednesday, November 5, 2014

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளத்தின் சதியை தடுக்க வேண்டும் : ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’கேரளத்தில் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள அமராவதி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் பாம்பாற்றின் குறுக்கே கேரள மாநிலம் மறையூர் அருகிலுள்ள கோவில்கடவு என்ற புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கியிருக்கிறது. இப்பணிகளை கடந்த 3ஆம் தேதி முதல்வர் உம்மன் சாண்டி காணொலி மூலம் தொடங்கிவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய பாசன ஆதாரமாக திகழ்வது அமராவதி அணை ஆகும். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள இந்த அணைக்கு தமிழகப் பகுதியில் உள்ள தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகளிலிருந்தும், கேரளாவில் உருவாகும் பாம்பாற்றிலிருந்தும் தான் தண்ணீர் வருகிறது. மின்சார உற்பத்தித் திட்டம் என்ற பெயரில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகிறது.

 கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாதத்தில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் அ மைச்சரவைக் கூட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போதே இந்த திட்டத்திற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 19.02.2010 அன்று உடுமலையில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின் மற்ற முக்கிய அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக பாம்பாற்றில் அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்த கேரளம், இப்போது திடீரென இத்திட்டப்பணிகளைத் தொடங்கியிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் அதிகார வரம்புக்குள் பாம்பாறும் வருவதால், அதில் அணை கட்டுவதற்கு முன்பாக நடுவர் மன்றத்திடம் கேரளம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் அணை கட்டுவது வசதிகளை மீறிய செயலாகும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழக்கும். மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகக் கூறிக் கொண்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கவே இத்திட்டத்தை கேரளம் செயல்படுத்துகிறது.

கேரளத்தின் சுயநலத்திற்காக தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே, கேரளத்தில் பாம்பா ற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழக விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: