தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு விதித்த தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் தலையிட கோரியும், பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கி பேசியதாவது :
‘‘அ.தி.மு.க. ஆட்சியில் பால்விலை 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரூ.4 முதல் ரூ.9.50 வரை உயர்த்தினார்கள். தற்போது 2-வது முறையாக லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியுள்ளனர். இது ஏழை மக்களை மிகவும் பாதிப்பதால் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு வலியுறுத்துகிறோம்.
ஆவின் பாலில் தண்ணீர் கலந்து ஊழல் நடந்துள்ளது. இதை முன்கூட்டியே தடுத்திருந்தால் இந்த கட்டண உயர்வு வந்திருக்காது. இப்போது தனியார் பால் விலை உயர்வையும் அரசு கண்டு கொள்வதில்லை.
இதே போல், மின் கட்டணத்தையும் உயர்த்த முடிவெடுத்துள்ளனர். மின் வாரியத்தில் நடைபெறும் ஊழலை சரி செய்தாலே போதும் மின் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது.
இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததை மத்திய அரசு பார்த்து கொண்டிருக்க கூடாது. மோடி அரசு 5 பேரையும் மீட்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
No comments:
Post a Comment