பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.20 லிருந்து ரூ.2.70 ஆகவும், டீசல் மீதான கலால்வரி ரூ.1.46 லிருந்து ரூ.2.96 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 100%க்கும் அதிக வரி உயர்வாகும்.
2009ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலான 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 ரூபாயும்,டீசல் விலை 30 ரூபாயும் உயர்த்தப்பட்டன. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை இப்போது தான் குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்பயனை மக்கள் இன்னும் முழுமையாக அனுபவிக்காத நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கணடிக்கத்தக்கது.
கலால் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயராது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருப்பது மோசடியான செயலாகும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் வரும் 15 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.1.50 குறைக்கப்பட வேண்டும். மத்திய அரசு வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்பதை மறைத்துவிட்டு, இந்த வரி உயர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவது மோசடி ஆகும்.
அதேபோல், சமையல் எரிவாயு மானியமும் கிலோவுக்கு ரூ.20 என்ற அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்துள்ள நேரத்தில், வரிகளை உயர்த்தினால், மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் செயல்படுவது நேர்மையான செயல் அல்ல; மக்களைக் கொள்ளையடிக்கும் செயல் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கும்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அளவுக்கு அதிகமாக உயரவே மத்திய அரசின் இந்த நடவடிக்கை வழி வகுக்கும். எனவே, கலால் வரி உயர்வை ரத்து செய்து விட்டு, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment