Sunday, November 30, 2014

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.27,147 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம்  திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள விலை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது. மின்வாரியத்தின் நிர்வாகத் திறமையின்மையும், மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழலும் தான் இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். 

ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மின்வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர்; இழப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மின்கட்டணத்தை பெருமளவில் உயர்த்தி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை அலகு (யூனிட்) ஒன்றுக்கு ரூ.3.00 க்கும் குறைவு தான். நெய்வேலி அனல் மின்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு மின்நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் இதே அளவில் தான் உள்ளது. 

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அலகு ஒன்றுக்கு ரூ.2.00க்கும் குறைவு தான். தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைவாக உள்ள நிலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்க முடியாதது. எனினும், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் போது, அதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிகளை மின்வாரியம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளைபெருமாள்நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து  ஓர் அலகு ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி அலகு மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. மத்திய மின்நிலையங்களில் இருந்து சராசரியாக ஓர் அலகு ரூ.3.00 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. 

வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு ரூ.4.26 முதல் ரூ.5.14 வரையிலான விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியதன் தேவை என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி  பெற வேண்டும்; ஓர் அலகு மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பது ஒழுங்கு முறை ஆணையத்தின் விதியாகும். இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது. 
இந்த 4 தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து வாங்கவுள்ள 79 கோடி அலகு மின்சாரத்தை மத்திய மின் நிலையங்களிடமிருந்து வாங்கினால் ரூ. 237 கோடி மட்டுமே செலவாகும்; மற்ற தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அதிகபட்ச விலை கொடுத்து வாங்கினாலும் ரூ.406 கோடி மட்டுமே செலவாகும். 

ஆனால், 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.1205 கோடி கொடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குகிறது. இதனால் மின்வாரியத்திற்கு கண்ணுக்குத் தெரிந்து ரூ.800 கோடி முதல் ரூ.1000கோடி வரை இழப்பு ஏற்படும். 

தேவையே இல்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? இந்த மின்சாரக் கொள்முதலின் பின்னணியில் பயனடையப் போகிறவர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த வருமானத்தில் 55% வெளியிலிருந்து மின்சாரத்தை  வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. இதேநிலை நீடித்தால் மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது. 

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் மின் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்றவாறு மின்திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், மொத்த வருவாயில் பெரும் பகுதியை வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதற்காக செலவிடும் நிலையை தவிர்த்திருந்திருக்கலாம். 

ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி அதன் மூலம் லாபம் அடைவதில் காட்டிய அக்கறையை மின்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் காட்டவில்லை என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 43 மாதங்களில் ஒரு மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்கள் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் கசப்பான உண்மை ஆகும். 

எனவே, வீண் பெருமைகளை பேசுவதை விடுத்து, மின்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Saturday, November 29, 2014

கர்நாடகத்தின் வழியில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை!


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில சமூக நலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா தெரிவித்திருக்கிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதிப் புரட்சியை மேற்கொள்ளும் கர்நாடக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றதில் இருந்தே அம்மாநிலத்தில் முழுமையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த கர்நாடக அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே அனுமதி அளித்துவிட்ட நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இந்தக் கணக்கெடுப்பு தொடங்குவதாக இருந்தது. 

மக்களவைத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கி இரு மாதங்களில் நிறைவடையும் என்று கர்நாடக சமூக நலத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ரூ.117 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பில் 1.25 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் பங்கேற்பர் என்றும் அமைச்சர் ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார். 

இப்பணி  நிறைவடைந்த பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே முழுமையான சமூகநீதியை ஏற்படுத்த முடியும் என்று தந்தைப் பெரியார் கூறினார். 

சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன். 

ஆனால், பெரியாரின் வழிவந்தவர்களாக கூறிக் கொள்ளும் திராவிட ஆட்சியாளர்கள் இதற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்படி 2010ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 

அதனடிப்படையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி எனது தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 13.10.2010 அன்று 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த 40&க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினேன். கலைஞரும் அக்கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவருடன் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். ஆனால் அதன்பின் 7 மாதங்கள் அவர் பதவியிலிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைக்கும்போதெல்லாம் அளவுக்கு அதிகமான சலுகையை கேட்பதாக ஆட்சியாளர்களும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதியை பின்னுக்கு தள்ளும் செயல் என்று தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலரும் கருதி இதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை என்பது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா அளித்துள்ள விளக்கமே இவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும். ‘‘ஒவ்வொரு சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையை விடுங்கள்... ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரமே அரசிடம் இல்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் உள்ளனர்; அவர்களின் வளர்ச்சி நிலை என்ன? அவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் அளித்துள்ளன என்பதை அறியவும், இதற்குப் பிறகும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கவும் முடியும்’’ என்பதே சித்தராமையாவின் பதில் ஆகும்.

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்காக அம்மாநில அரசு கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கும் முழுமையாக பொருந்தும். அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று தான் அண்மையில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிர, சாதிவாரிக் கணக்கெடுப்பே தேவையில்லை என்று கூறவில்லை. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையுமில்லை.
ரூ.117 கோடி செலவில், இரு மாத அவகாசத்தில் கர்நாடகத்தில் நடத்தப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பை, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் குறைந்த செலவில், குறைந்த கால அவகாசத்தில் நடத்த முடியும். எனவே, முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும்.

Friday, November 28, 2014

கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்குடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மனித வள மேம்பாட்டுக்கு தடை போடும் இந்நடவடிக்கை வருத்தமளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.77,307 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதிஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாற்றுகள் எழுந்தன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சமூகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

2013&14 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு மொத்தம் ரூ.80,194 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும். ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.150 கோடி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மேலும் ரூ.20,000 கோடி குறைக்கப்பட்டால் கிராமப்புற வளர்ச்சி அடியோடு பாதிக்கப்படும். இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியும் ரூ.33,350 கோடியிலிருந்து சுமார் ரூ.9,000 கோடி குறைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதியும் குறைக்கப்பட்டால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வறுமையும், தற்கொலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை கல்வித்துறைக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் கோத்தாரி குழுவின் பரிந்துரை ஆகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்பதுடன், கோத்தாரி குழு அமைக்கப்பட்டதன் 50 ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பது சரியா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும். 12ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் 2017 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.5% ஆக உயர்த்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக  2013&14 ஆம் ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,330 கோடி நிதி நடப்பாண்டில் ரூ. 30,645 கோடியாக குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும்            ரூ. 7,000 கோடியை குறைத்து எதிர்மறையான திசையில் பயணிப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதையும், நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருப்பதையும் மறுக்க முடியாது. திட்டமில்லா செலவுகளுக்கு ரூ. 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சிறு பகுதியை குறைப்பதன் மூலமோ, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமோ நிதிப்பற்றாக்குறையை ஓரளவு குறைக்க முடியும். நிதி ஒதுக்கீட்டை குறைப்பதாக இருந்தால் அதனால் எந்த துறையும் கடுமையாக பாதிக்கப்படாத வகையில், அனைத்து துறைகளுக்கும் சீராக நிதி வெட்டு செய்யப்பட வேண்டும். அதை விடுத்து சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என்பதால், அத்துறைகளின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக உதவும் என்றால், கல்வி மற்றும் சுகாதாரத்தை உள்ளடக்கிய மனித வளம் தொலைநோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே, ஒரு சார்பான நிதி வெட்டு சரியான அணுகுமுறையல்ல. அதுமட்டுமின்றி, உட்கட்டமைப்பு வசதிகள் நகர்ப்புறங்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் நிலையில், சமூகத் திட்டங்கள் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டவை ஆகும். இத்தகைய சூழலில் சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்து விடும்.

எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவை கைவிட்டு, அனைத்து துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Saturday, November 22, 2014

அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்

சென்னை: 1996-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாமக தலைமைச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு மணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜெ.குரு, கணேஷ் குமார், வழக்கறிஞர் பாலு உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:தமிழகத்தில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இப்போதும் அதே நிலைதான்.எனவே அன்றைக்குத் தந்தது போலவே இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும்.பாமக கூட்டணியில் மதிமுக, காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைய வேண்டும்.ஜெயலலிதாவின் நிலைமை யைப் பார்த்து அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது. 2016 தேர்தல் ஒரு குருஷேத்திரம். இதில் புதிய கீதோபதேசம் எழுத ஊடகங்கள் துணை நிற்கவேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
 

கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானம்

சென்னை: இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத இரு திராவிடக் கட்சிகளும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணை போவதில் போட்டி போடுகின்றன என்று பாமக பொதுக்குழு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவில் கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளதாகவும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்:"தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த துறைகள் என்னவென்று பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் பிடிப்பவை கல்வியாகவோ, சுகாதாரமாகவோ அல்லது விவசாயமாகவோ இருக்காது. மாறாக மக்களைக் கெடுக்கும் மதுவும், சோம்பேறிகளாக்கும் இலவசக் கலாச்சாரமும் தான் பல்கி பெருகியுள்ளன.1967ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது தமிழகத்தில் தரமான கல்வியை இலவசமாக வழங்கும் அரசுப் பள்ளிகள் தான் கல்விக் கோவில்களாக நிறைந்திருந்தன; ஆனால், இன்று அரசுப் பள்ளிகள் தந்திரமாக சீரழிக்கப்பட்டு வேலைவாய்ப்பை வழங்காத கல்வியை அளிக்கும் தனியார் பள்ளிகள் தான் கல்விக் கொள்ளைக் கூடங்களாக நிறைந்திருக்கின்றன.அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் இலவசமாக கிடைத்த நிலை மாறி, தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.8 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியை எட்டி, லாபம் தரும் தொழிலாக திகழ்ந்த வேளாண் தொழில், இப்போது மைனஸ் 12 விழுக்காடு வளர்ச்சியுடன், விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டும் துயரமாகிவிட்டது.வேலைவாய்ப்பில் இரு திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர், அதாவது வேலைக்கு செல்லக்கூடிய வயதுடைய பிரிவினரில் ஐந்தில் ஒரு பங்கினர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலையில்லாமல் வாடுகின்றனர்.மொத்தத்தில், மக்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் அவசியமான கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் சீரழித்தது தான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகும்.இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாத இரு திராவிடக் கட்சிகளும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு துணை போவதில் போட்டி போடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்சியைத் தான் இரு திராவிடக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியும், அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சியும் அண்ணாவின் கொள்கைகளை அடகு வைத்துவிட்டன. மதுக்கடைகளை திறந்தால் மானியத் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியபோதிலும், மக்களைக் கெடுப்பதன் மூலம் கிடைக்கும் பணம் தேவையில்லை என்று மறுத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து பள்ளி மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் ஆட்சியை நடத்துகின்றன.மக்கள் நலனைக் காப்பதிலும், புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதிலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் போட்டிபோட வேண்டிய கட்சிகள், ஊழல் செய்வதிலும், இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தான் போட்டிபோடுகின்றன.ஒரு கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.இந்தியா விடுதலை அடைந்தவுடன், ‘‘நாட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் சேவை இனியும் தேவையில்லை; கட்சியைக் கலைத்துவிடலாம்'' என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அதேபோல், பேரறிஞர் அண்ணா இப்போது உயிருடன் இருந்தால்,‘‘ இரு திராவிடக் கட்சிகளும் மாற்றி மாற்றி ஆட்சி செய்ததன் மூலம் தமிழ்நாட்டைக் கெடுத்தது போதும்; இரு கட்சிகளையும் கலைத்துவிடலாம்'' என்று தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சீரழிவுப் பாதையில் தமிழகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா, ‘‘திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை நான் எழுதிவிட்டேன், இனி வரும் 50 ஆண்டுகளுக்கு திராவிட இயக்கங்களைத் தவிர வேறு இயங்கங்கள் இந்த மண்ணை ஆளமுடியாது'' என்று சொன்னார்.திராவிட இயக்கத்தின் முதல் பாகத்தை அண்ணா எழுதிய நிலையில், அதன் கடைசி பாகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எழுதிக் கொண்டிருக்கின்றன. அண்ணா கூறிய 50 ஆண்டுகள் 2016 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் சலித்துப் போயிருக்கும் மக்கள், தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படாதா? என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியாலும் வழங்க முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியும் மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் தவறு செய்து விட்டது.இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கிறது.மதுக்கடைகளை மூடி மதுவில்லாத சமுதாயத்தையும், நிம்மதியான குடும்பங்களையும் உருவாக்குதல், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துதல், ஊழலை அடியோடு ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை வழங்குதல் ஆகியவற்றை பா.ம.க. தலைமையிலான அணி செய்து முடிக்கும் என்பதை பிரகடனமாகவே இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

Thursday, November 20, 2014

பாமக தலைமையில் புதிய அணி உருவெடுக்கும்


சென்னை: அ.தி.மு.க.வை இனி ஊ.தி.மு.க. என்று அழைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். 2016ல் பா.ம.க. ஆட்சிதான் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணி உருவெடுக்கும் என தெரிவித்தார்.ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது. சில வழக்குகளில் மேல் முறையீட்டில் அவருக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது.மணல் கொள்ளையில்அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறது. கட்டிடம் கட்டப்படுகிறது என்றால், சி.எம்.டி.ஏ.க்கு சதுர அடிக்கு ரூ.50 வழங்கப்பட வேண்டும்.பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறைகள் தான் ஊழலின் ஊற்று. சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று வரையறை வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் செய்கிறார்கள்.அ.தி.மு.க.விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம்.அதாவது, ஊழல் தி.மு.க. அ.தி.மு.க.வை குறை சொல்வதால் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க.வுக்கு மட்டும் தான்.அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. 2016ல் பா.ம.க. ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்" என்றார்.இந்த கூட்டத்தில் பேசிய செயற்குழு உறுப்பினர்களும், தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டவர்களும் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
 

அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது!- டாக்டர் ராமதாஸ்

கோவை: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பூரண மதுவிலக்கு, நீராதார திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு ரலாம். அரசியலுக்கு வர ரஜினிக்கு முழு உரிமை உள்ளது.. அவர் வருவதற்கு முன்பே விமர்சனங்கள் தேவையற்றது," என்றார்.மேலும் அவர் கூறுகையில், "2016 ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். அப்போது ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலை வரும்," என்றார்.
 

தர்மபுரி குழந்தைகள் மரணத்திற்குக் காரணம் மதுவுக்கு அடிமையான இளைஞர்களே...: அன்புமணி

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் அதிக அளவில் குழந்தைகள் மரணமடைந்ததுக்குக் காரணம், மதுவுக்கு அடிமையாக உள்ள இளைஞர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.கடந்த சில நாட்களில் மட்டும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட பச்சிளம் குழந்தைகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது :-அதிக குழந்தைகள்...குழந்தைகள் தொடர் இறப்பு விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை தரப்பில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் குழந்தைகள் பிரிவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும் கூட, அதிக அளவில் சிகிச்சைக்கு குழந்தைகள் வருவதால், அவர்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.உடனடி நடவடிக்கை தேவை...எனவே கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை உடனே தமிழக அரசு நியமிக்க வேண்டும். 26 லட்சம் மக்கள் வசிக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் உள்ளது.தர்மபுரியில் எய்ம்ஸ்...மத்திய அரசு 1500 கோடி ருபாய் மதிப்பீட்டில் மாநிலம் தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை தர்மபுரியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுவின் பிடியில் இளைஞர்கள்...தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மதுவின் பிடியில் சிக்கியுள்ளனர். மது பழக்கத்தால் இளைஞர்கள் தங்களுடைய கர்ப்பிணி மனைவியைக் கண்டு கொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் தங்களுடைய உடல்நலம், கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போகிறது.ஊட்டச்சத்துக் குறைபாடு...ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கருவில் ஆரோக்கியமற்று வளரும் குழந்தைகள் இறுதியில் எடை குறைவாக அல்லது உடல்நல பாதிப்புடன் பிறந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் கூட இறந்து விடுகின்றன. வெகுவிரைவில் பெண்களைத் திரட்டி தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.
 

Monday, November 17, 2014

பருப்பு கொள்முதலில் ரூ.730 கோடி இழப்பு: விளக்கமளிக்குமா அரசு? ராமதாஸ் கேள்வி

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின்படி வழங்குவதற்காக துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கொள்முதல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடந்தால், பருப்பு கொள்முதல் பின்னணியில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் அம்பலத்திற்கு வரும் என இதைப்பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், முந்தைய ஆட்சியில், கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. 

இந்த திட்டத்தின்படி உளுத்தம்பருப்பு மற்றும் துவரம் பருப்பு கிலோ ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் கிலோ ரூ.25 என்ற விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான பருப்பு வகைகள் மற்றும் பாமாயிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது. இதில் தான் ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,461 டன் துவரம் பருப்பு, 9,000 டன் உளுத்தம்பருப்பு, 16,708 கிலோ லிட்டர் பாமாயிலும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாதமும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப் படுகின்றன. 

இந்த வழக்கத்திற்கு மாறாக கடந்த 15.04.2013 அன்று ஓராண்டிற்கு தலா ஒரு லட்சம் கிலோ உளுத்தம் பருப்பும், துவரம் பருப்பும் வினியோகிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பங்கேற்க பல நிறுவனங்கள் முன்வந்த போதிலும், பல்வேறு காரணங்களைக்  காட்டி, அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நான்கு நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ஒருமாதத்தில் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கோரப்பட்டு 10 மாதங்கள் கழித்து 2014ஆம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 2 புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன.

வழக்கமாக ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு 10 மாதங்களுக்கு பிறகும் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நடைமுறையில் பங்கேற்ற இரு நிறுவனங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு ஒரு டன்னுக்கு முறையே ரூ75,000, ரூ.89,000 என்ற அளவிலும், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம் முறையே ரூ.85,000, ரூ.99,000 என்ற அளவிலும் விலைக் குறிப்பிட்டிருந்தன. 

இவற்றில் ராசி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான ஆணை ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டன்னுக்கு ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.40 கோடி பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம்பருப்பு கிலோ 89 ரூபாய்க்கும், மசூர் பருப்பு(துவரம் பருப்பு) கிலோ 75 ரூபாய்க்கும் வாங்கப்பட்டால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கடந்த ஜூலை&ஆகஸ்ட் மாதத்தில் உளுத்தம்பருப்பு டன் ரூ.70 ஆயிரத்திற்கும், மசூர் பருப்பு டன் ரூ.52 ஆயிரத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

அதன்பின் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கும், நவம்பர், டிசம்பர் மாதத்திற்கும் இவை முறையே ரூ.75,000, ரூ.54,000 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் உளுத்தம்பருப்பை டன் ரூ. 43 ஆயிரம் என்ற விலையிலும், மசூர் பருப்பை டன் ரூ. 29 ஆயிரம் என்ற விலையிலும் கொள்முதல் செய்கிறது. இதைவிட 25% கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதாக இருந்தாலும் உளுத்தம்பருப்பு டன் ரூ.53,750 என்ற விலையிலும், மசூர் பருப்பு டன் ரூ.36,500 என்ற விலையிலும் தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என மொத்தம் ரூ.730கோடி இழப்பு ஏற்படும்.

சந்தையில் பருப்பு வகைகளின் விலை அடிக்கடி மாறக்கூடும் என்பதால் அவற்றை மாதாந்திர அடிப்படையில் கொள்முதல் செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது ஒட்டுமொத்தமாக ஓராண்டுக்கான பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும். மாதாந்திர அடிப்படையில் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 20 மாதங்களுக்கு முன் பெறப்பட்டு, 10 மாதங்களுக்கு முன் பிரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை இப்போது அவசர,அவசரமாக இறுதி செய்வதாக கூறப்படுவதில் இருந்தே ஆட்சியாளர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பருப்பு கொள்முதலை பொறுத்தவரை ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 04.10.2014 அன்று கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பல நிறுவனங்கள் உளுத்தம்பருப்பு டன் ரூ.60 ஆயிரத்திற்கு குறைவாகவும், மசூர் பருப்பு டன் ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாகவும் வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஆனால், அந்த நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் பொருளாதார விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இல்லை என்பதால் அந்த ஒப்பந்தப்புள்ளிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு 07.11.2014 அன்று புதிய ஒப்பந்தப்புள்ளி கோரி பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்தக் குற்றச்சாற்றுகள் உண்மை என்று வைத்துக் கொண்டால் பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு  ரூ.3000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, இந்தப் புகார்கள் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்; குற்றச்சாற்றுகளில் உண்மை இருந்தால் பருப்புக் கொள்முதல் ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

தமிழ் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை சிறையில் தள்ள வேண்டும்: ராமதாஸ்

திருவண்ணாமலை: தமிழ் மொழி அழிவதை பார்த்து கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களையும், அறிஞர்களையும் சிறையில் போட வேண்டும் என்பதே என் ஆசை என்று ராமதாஸ் கூறினார்.திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 15 ஆம் ஆண்டு தமிழகப் பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லும் அளவுக்கு தற்போது நிலை மாறி உள்ளது.மொழி, இனம், மண் இவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம்.1956ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, 'மெட்ராஸ் பிரசிடென்சி'யில் இருந்து தமிழ்நாடு என மொழிவாரி மாநிலம் உதயமானது. அப்போது பிரிந்து போன, 10 வட்டங்களில் எட்டு வட்டங்கள் ஆந்திரா மாநிலத்துடனும், இரண்டு வட்டங்கள் கேரளாவுடனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வட்டங்கள் இருந்திருந்தால் முல்லைப் பெரியார் அணை உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருந்திருக்கும்.தமிழ் மொழியில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை கலப்பு செய்து தமிழ் மொழியை அழிக்க சிலர் செயல்படுகின்றனர். தமிழ் மொழி மீது பற்று வைத்திருக்க வேண்டிய இளைஞர்கள், மது மீதும், திரைப்படங்கள் மீதும்தான் பற்று வைத்திருக்கின்றனர்.என் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் தூய தமிழில் பேசுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வேற்றுமொழி வார்த்தைக்கும் 10 ரூபாய் அபராதம் விதித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். சில நாட்களுக்கு பிறகு என்னை பார்க்க வந்தவர், உங்கள் சொல்படி அபராதம் விதித்துக் கொண்டால் எனக்கு தினமும் குறைந்தது 500 ரூபாய் செலவாகிறது என்றார். தினம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் எவ்வளவு வேற்றுமொழி வார்த்தைகள் கலப்பு இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.கொங்கு தமிழ் அறக்கட்டளை மூலமாக தமிழ் ஆட்சி மொழியாக அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தயார் செய்து, அதை தமிழகத்தில் இருக்கும் 143 தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்து, தமிழக அரசுக்கும், தமிழக அரசில் இருக்கும் மூத்த அதிகார்களுக்கும் அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை எங்கு தூக்கி போடப்பட்டது என்று தெரியவில்லை.எனக்கு ஒரு ஆசை உள்ளது. தமிழ் மொழி அழிந்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களையும், தமிழ் அறிஞர்களையும் பிடித்து சிறையில் போடவேண்டும். அப்போதாவது தமிழ் மொழியை காப்பாற்ற பாடுபடுவார்களா? என்று பார்க்கலாம். இப்போது, எங்கும் தமிழ் இல்லை, எதிலும் தமிழ் இல்லை என்று இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். கலப்பு இல்லாத தமிழ் மொழியை பேச பழக வேண்டும். அப்போதுதான், தமிழ்மொழி வளரும். இவ்வாறு அவர் பேசினார்215031.html

Saturday, November 15, 2014

சென்னை ஐ.ஐ.டி. முத்தப் போராட்டம்- ராமதாஸ் கண்டனம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 'அன்பு முத்தம்' போராட்டம் நடத்தி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:"சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்' என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர்.அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர்.மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது.

 

Thursday, November 13, 2014

இடைநிற்றல் உயர்வு: ஏழைகளின் கல்வியை உறுதி செய்ய அருகமைப் பள்ளிகள் தேவை: ராமதாஸ் கோரிக்கை


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.11.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமானால் அனைத்து மாணவர்களுக்கும் தரமான, பயனுள்ள கல்வியை வழங்குவது தான் ஒரே வழி எனும் நிலையில், மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘இந்திய கல்வி ஆலோசகர்கள்’ என்ற அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் பள்ளிக்கல்வி நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. 

6 முதல் 13 வயது வரையுள்ள படிக்காத சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியவர்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

கடந்த 2009ஆம் ஆண்டில் இதே அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் படிக்காத சிறுவர்களில் 45.34 விழுக்காட்டினர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என கண்டறியப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 8 விழுக்காடு அதிகரித்திருப்பது கல்வியிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் கவலையளிக்கும் தகவல் ஆகும்.

குறிப்பாக, மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 10 வயதுக்குப் பிறகு தான் அதிகரிக்கிறது. 23% மாணவர்கள் ஐந்தாம் வகுப்புடனும், 30% பேர் ஏழாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

அதன்பின்னர் இடைநிற்றல் விகிதம் குறைந்திருக்க வேண்டிய நிலையில், அதிகரித்திருப்பது இயல்புக்கு மாறான ஒன்றாகும். இதற்கான காரணங்கள் என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

6 முதல் 13 வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காகத் தான் அருகமைப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. 

சென்னை போன்ற நகரங்களில் தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் போதிலும், கிராமப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகளுக்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதைப் போக்குவதற்காகத் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால், நகர்ப்புறங்களிலாவது மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து இருக்க வேண்டும். ஆனால், கிராமப்புறங்களுக்கு இணையாக நகர்ப்புறங்களிலும் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதால் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.

ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைவிட மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் தான் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது தான். மாணவிகள் பருவமடைந்த பிறகு கழிப்பறை இல்லாத பள்ளிகளில் படிக்க இயலாது என்பதால் அவர்கள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். தமிழகத்தில் 1500க்கும் அதிகமான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்த பிறகும் கழிப்பறை வசதிகளை அரசு செய்து தராததே மாணவிகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

மாணவர்களின் இடைநிற்றலை உடனடியாக தடுக்க வேண்டியது அவசர, அவசியமாகும். எனவே, பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அருகமைப் பள்ளித் திட்டத்தை செயல்படுத்துதல், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செம்மையாக செயல்படுத்துவதை உறுதி செய்தல், இதற்கெல்லாம் மேலாக அரசு பள்ளிகளின் தரத்தை அதிகரித்து மாணவர்கள் தேடிவரும் நிலையை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை  மேற்கொண்டு, அனைத்து மாணவர்களும் தரமான கல்வி கற்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு மக்களைக் கொள்ளையடிக்கும் செயல்! ராமதாஸ் கண்டனம்!


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.20 லிருந்து ரூ.2.70 ஆகவும், டீசல் மீதான கலால்வரி ரூ.1.46 லிருந்து ரூ.2.96 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 100%க்கும் அதிக வரி உயர்வாகும்.

2009ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலான 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 ரூபாயும்,டீசல் விலை 30 ரூபாயும் உயர்த்தப்பட்டன. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை இப்போது தான் குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்பயனை மக்கள் இன்னும் முழுமையாக அனுபவிக்காத நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கணடிக்கத்தக்கது.

கலால் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயராது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருப்பது மோசடியான செயலாகும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் வரும் 15 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.1.50 குறைக்கப்பட வேண்டும். மத்திய அரசு வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்பதை மறைத்துவிட்டு, இந்த வரி உயர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவது மோசடி ஆகும்.

 அதேபோல், சமையல் எரிவாயு மானியமும் கிலோவுக்கு ரூ.20 என்ற அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்துள்ள நேரத்தில், வரிகளை உயர்த்தினால், மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் செயல்படுவது நேர்மையான செயல் அல்ல; மக்களைக் கொள்ளையடிக்கும் செயல் ஆகும்.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கும்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அளவுக்கு அதிகமாக உயரவே மத்திய அரசின் இந்த நடவடிக்கை வழி வகுக்கும். எனவே, கலால் வரி உயர்வை ரத்து செய்து விட்டு, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

Wednesday, November 12, 2014

நீதிபதி குன்ஹா மீதான அவதூறு: அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும் : ராமதாஸ்


 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :

’’வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை கடுமையாக விமர்சித்து  தீர்மானம் நிறைவேற்றியதற்காக வேலூர் மாநகராட்சி மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நீதிபதியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவும் ஆணையிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மூலம் சட்டத்தின் மாண்பு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. 
       
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவுடன், அவரிடம் தங்களின் போலி விசுவாசத்தை காட்டுவதற்காக நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் அ.தி.மு.க.வினர் எண்ணற்ற அவதூறுகளைப் பரப்பினர். 

சட்டத்தையும், நீதியையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக தமது கடமையை செய்த நீதிபதியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், தீர்ப்புக்கு மொழி அடிப்படையில் உள்ளர்த்தம் கற்பிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். அதிலும் குறிப்பாக அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளில் நீதிபதியை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றுவதும், பேசுவதும் மன்னிக்க முடியாத  குற்றம் ஆகும். வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் அவரை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தச் செயல்களுக்கு நான் அப்போதே கடும் கண்டனம் தெரிவித்திருந்தேன்.

நீதித்துறைக்கு எதிரான வேலூர் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இதற்காக மன்னிப்புக் கேட்டு நீதிபதி குன்ஹாவுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளையும், சட்டம் இயற்றும் அமைப்புகளையும் போர்வையாக பயன்படுத்திக்கொண்டு நீதித்துறையை அவமதிக்கும்  செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், நீதித்துறையை அவமதித்ததாக உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட சிலர் மட்டும் தான் கண்டிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் கண்டிக்கப்படாததுடன், அரச பதவிகளையும் அனுபவித்து வருகின்றனர்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டியில், குன்ஹாவை சட்டம் தெரியாத முட்டாள் நீதிபதி,   கன்னட வெறியன் என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது.  சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில், ‘‘அம்மாவை விடுதலை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்’’ என்று நீதித்துறையை எச்சரிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கிடையிலான  உறவை சீர்குலைக்கும் வகையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த  46 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 118 சட்டப்பேரவை உறுப்பினர்களும் நீதித்துறையைக் கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாமன்றக் கூட்டத்திலேயே நீதிபதி குன்ஹாவை விமர்சித்தார். அதை எதிர்த்த தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை சட்டப்பேரவையில் பேசும்போது, நீதிபதிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல என்று கடுமையாக விமர்சித்தார். அவரது வழியில் செயல்படும் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேவழியில் நீதிபதிகளை விமர்சிக்கின்றனர். இந்த போக்கை அனுமதித்தால், தமிழ்நாட்டில் தவறு செய்யும் ஆளுங்கட்சியினரை நீதித்துறை தட்டிக்கேட்க முடியாமல் போய்விடும். 

நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்கப்படவில்லை என்ற போதிலும், வேலூர் மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் இவர்களுக்கும் தார்மீகரீதியில் பொருந்தும். எனவே, நீதிபதி குன்ஹாவை விமர்சித்ததற்காக இவர்கள் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்புக் கேட்க மறுத்து நீதிபதிக்கு எதிராக தெரிவித்தக் கருத்துக்களில் உறுதியாக இருந்தால், தாங்கள் வகித்து வரும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.’’

Friday, November 7, 2014

சாதிவாரி கணக்கெடுப்பு… உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிட, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு கூடுதல் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:''சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931ஆம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்தியா விடுதலை அடைந்தபிறகு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், உண்மையான சமூகநீதியை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரேவழி என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.2010ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதி வாரியாக நடத்தப்படாத நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிட, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு கூடுதல் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து, அதன்படி இட ஒதுக்கீடு வழங்குவது தான் முறையானதாக இருக்கும். இல்லாவிட்டால், ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, அந்த வகுப்பில் பெரும்பான்மையாக உள்ள சாதியினரை புறக்கணித்து விட்டு, சிறுபான்மையாக உள்ள சமூகத்தினர் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது.தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இது நடந்து கொண்டிருக்கிறது. இந்த அநீதியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைவராலும் எழுப்பப்படுகிறது.சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது, அதை ஒழுங்குபடுத்துவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்பது முரண்பாடாக உள்ளது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, ‘‘தமிழ்நாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், இடஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும்'' என்று தெளிவாக ஆணையிட்டிருந்தது.இவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான இந்தத் தீர்ப்பை குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட சாதாரண அமர்வு எந்த அடிப்படையில் வழங்கியது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், இந்த கணக்கெடுப்பே சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிய சமூகநீதியாளர்களை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மோசடியாகும். இதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வகை செய்யப்படவில்லை என்பதுதான் இந்த முடிவுக்கு காரணம் என்றால் அதுவும் சரியல்ல.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு வகைசெய்யும் விதத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்குமே தவிர, அதில் உள்ள குறையை காரணம் காட்டி சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பு செருப்புக்கு ஏற்ப கால்களை வெட்டும் செயலாகும்.உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் இந்த தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டையே ரத்து செய்யும் நிலை ஏற்படலாம். எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்தோ, வேறு சட்ட ஏற்பாடுகளை செய்தோ சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

Wednesday, November 5, 2014

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளத்தின் சதியை தடுக்க வேண்டும் : ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’கேரளத்தில் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள அமராவதி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் பாம்பாற்றின் குறுக்கே கேரள மாநிலம் மறையூர் அருகிலுள்ள கோவில்கடவு என்ற புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கியிருக்கிறது. இப்பணிகளை கடந்த 3ஆம் தேதி முதல்வர் உம்மன் சாண்டி காணொலி மூலம் தொடங்கிவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய பாசன ஆதாரமாக திகழ்வது அமராவதி அணை ஆகும். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள இந்த அணைக்கு தமிழகப் பகுதியில் உள்ள தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகளிலிருந்தும், கேரளாவில் உருவாகும் பாம்பாற்றிலிருந்தும் தான் தண்ணீர் வருகிறது. மின்சார உற்பத்தித் திட்டம் என்ற பெயரில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகிறது.

 கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாதத்தில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் அ மைச்சரவைக் கூட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போதே இந்த திட்டத்திற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 19.02.2010 அன்று உடுமலையில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின் மற்ற முக்கிய அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக பாம்பாற்றில் அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்த கேரளம், இப்போது திடீரென இத்திட்டப்பணிகளைத் தொடங்கியிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் அதிகார வரம்புக்குள் பாம்பாறும் வருவதால், அதில் அணை கட்டுவதற்கு முன்பாக நடுவர் மன்றத்திடம் கேரளம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் அணை கட்டுவது வசதிகளை மீறிய செயலாகும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழக்கும். மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகக் கூறிக் கொண்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கவே இத்திட்டத்தை கேரளம் செயல்படுத்துகிறது.

கேரளத்தின் சுயநலத்திற்காக தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே, கேரளத்தில் பாம்பா ற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழக விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

சகாயம் குழுவின் விசாரணை வரம்பை தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் : ராமதாஸ்

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாதுமணல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சகாயம் குழு மதுரை மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யிருக்கின்றன. இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு சாதகமான அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் குறித்து விசாரனை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 11.09.2014 அன்று சென்னை உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளில் இருந்தே இந்த விசாரணையை எப்படியாவது தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. 

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. அங்கு தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், சகாயம் குழுவை அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, சகாயம் குழு அமைக்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சகாயம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் கண்டித்தது.
அதன்பிறகு தான் அரை மனதுடன் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்டது. 

தமிழகம் முழுவதும் நடந்த கனிம வளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து மட்டும் விசாரணை நடத்தினால் போதுமானது என்று தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சகாயம் குழு விசாரணைக்கு எந்த நோக்கத்திற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதோ, அந்த நோக்கத்தையே சிதைத்துவிடும் வகையில் தான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 10 மாவட்டங்களில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. கிரானைட் ஊழலைவிட மிகப்பெரிய கனிம வளக் கொள்ளையாக கருதப்படுவது தாது மணல் கொள்ளையாகும். நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டத்தில் மட்டும் 53 தாது மணல் குவாரிகளும், தூத்துக்குடி, குமரி, நெல்லை,மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 71 தாதுமணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல மாவட்டங்களில் ஆற்றுமணல், சவுடு மண் உள்ளிட்ட பல வகையான இயற்கை வளங்கள் கொள்ளை யடிக்கப்படுகின்றன. 

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் நடக்கும் அனைத்து வகையான இயற்கை வள கொள்ளைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தா ன் இ.ஆ.ப. அதிகாரி சகாயம் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற ஆணைப்படி தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த அனுமதி அளிக்காதது ஏன்? என்று நிலவியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் சகாயம் கேட்டதாகவும், அதற்கு சுரங்கத்துறை ஆணையர் சரியான பதில் அளிக்காததுடன், விசாரணை வரம்பை மாற்றி அமைக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் விசாரணைக் குழு தலைவராக சகாயத்தை அமர்த்திய தமிழக அரசு, இன்னொருபுறம் அவர் இப்போது வகித்துவரும் அறிவியல் நகர துணைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்க மறுத்திருக்கிறது. கால்கள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, விருப்பம் போல நடமாட அனுமதி அளிப்பதைப் போன்றது தான் தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஆகும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புரியும் ஒரு விஷயம் என்னவென்றால், கிரானைட் ஊழல், தாது மணல் ஊழல், ஆற்று மணல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட கனிமவளக் கொள்ளையின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 

இவ்வளவு பெரிய இமாலய சுரண்டலை தடுக்கத் தவறியதுடன், அதில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பதில் இருந்தே கனிமவளக் கொள்ளையர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் எந்தத் தவறைத் திருத்துவதானாலும் அதற்கு நீதிமன்றத்தின் கதவுகளைத் தான் திரும்பத் திரும்பத் தட்டியாக வேண்டும் என்ற நிலை நிலவுவது உண்மையாகவே வெட்கப்பட வேண்டியதாகும்.

தமிழகம் முழுவதும் நடந்த கனிம வளக் கொள்ளை மற்றும் ஊழல் குறித்த உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் சகாயம் குழுவின் விசாரணை வரம்பை தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த சில வாரங்களில் உயர்நீதிமன்றமும், அடுத்த சில மாதங்களில் தமிழக மக்களும் ஆட்சியாளர்களை கடுமையாக கண்டிப்பதும், தண்டிப்பதும் உறுதி.’’

பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் : ஜி.கே.மணி வலியுறுத்தல்

 



தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு விதித்த தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் தலையிட கோரியும், பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கி பேசியதாவது :

‘‘அ.தி.மு.க. ஆட்சியில் பால்விலை 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரூ.4 முதல் ரூ.9.50 வரை உயர்த்தினார்கள். தற்போது 2-வது முறையாக லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியுள்ளனர். இது ஏழை மக்களை மிகவும் பாதிப்பதால் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு வலியுறுத்துகிறோம்.

ஆவின் பாலில் தண்ணீர் கலந்து ஊழல் நடந்துள்ளது. இதை முன்கூட்டியே தடுத்திருந்தால் இந்த கட்டண உயர்வு வந்திருக்காது. இப்போது தனியார் பால் விலை உயர்வையும் அரசு கண்டு கொள்வதில்லை.

இதே போல், மின் கட்டணத்தையும் உயர்த்த முடிவெடுத்துள்ளனர். மின் வாரியத்தில் நடைபெறும் ஊழலை சரி செய்தாலே போதும் மின் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது.

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததை மத்திய அரசு பார்த்து கொண்டிருக்க கூடாது. மோடி அரசு 5 பேரையும் மீட்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: