இது குறித்து பா.ம.ப. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் ஏமாற்றம்
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,350 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,300 ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே ஏமாற்றத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விளைச்சல் அதிகரிக்கிறதோ இல்லையோ, விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. உரம் உள்ளிட்ட வேளாண்மைக்கான அனைத்து இடுபொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வேளாண் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்திய போதிலும், நெல் கொள்முதல் விலையை வெறும் 16 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியது.
ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
இது போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக அரசாவது ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக அரசோ, வழக்கம் போலவே, மத்திய அரசு அறிவித்த விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயும் ஊக்கத்தொகையாக சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் உர வகைகளின் விலை 300 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் விலை வெறும் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
இதேநிலை தொடர்ந்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதையே விட்டுவிடும் நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இதைத் தடுக்கவும், உழவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment