சமையல் கியாசுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் 19.09.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மக்களுக்கு நன்மை
செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி இருக்கவேண்டும். ஆனால்,
இப்போது கெடுதல் செய்வதில்தான் போட்டி நிலவுகிறது. ஆட்சிக்கு வந்த மாநில
அரசு மக்கள் மீது ரூ.20 ஆயிரம் கோடி வரி விதித்தது. மத்திய அரசு ரூ.2
லட்சம் கோடி வரி விதித்தது.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.32 ஆக இருந்தது. தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 48 சதவீதம் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் 17 சதவீதம் வரி உள்ளது. தற்போது சிலிண்டர் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வால் மக்களை மேலும் நசுக்குகிறார்கள்.
சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி
பா.ம.க.தான். தொடர்ந்து பல போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது.
சில்லரை வணிகத்தை நம்பி சுமார் 4 கோடி பேர் இருக்கிறார்கள். வால்மார்ட்
போன்ற அன்னிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நுழைந்தால், 22 லட்சம்
பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், நுகர்வோர்களுக்கு நன்மை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்காவும் மட்டுமே பயனடையும். எனவே, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்யவேண்டும். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு பா.ம.க. ஆதரவு அளித்து கலந்து கொள்ளும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
No comments:
Post a Comment