இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டது. இது தொடர்பாக காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பிறப்பித்த உத்தரவை ஏற்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் மறுத்து விட்டார்.
பிரதமரின் பிரதிநிதியாக அவருக்கு அறிவுரை கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் செய்ய வேண்டிய நிலையில் உள்ள மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அவ்வாறு செய்யாமல், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது என்றும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்றும் புதிய யோசனை கூறியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதிமன்றம் மூலமாக நீதி கிடைப்பதை தடுக்கவே இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே இதுவரை 40க்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தப் பட்டிருக்கும் போதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்த போதுகூட பலமுறை பேச்சு நடத்தி எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, 2003ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் தான் இந்த கிருஷ்ணா.
காவிரி பிரச்சினையில் கர்நாடக ஆட்சியாளர்கள் இருதரப்பு பேச்சுக்களுக்கும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் இந்த அளவுக்குத் தான் மதிப்பளித்திருக்கிறார்கள் எனும் போது, எந்த அடிப்படையில் மீண்டும் பேச்சு நடத்த தமிழகம் முன்வர வேண்டும் என்று கிருஷ்ணா கோருகிறார் என்பது தெரியவில்லை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் இன்னும் சில வாரங்களை ஓட்டிவிட்டால், தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தராமல் ஏமாற்றிவிடலாம் என்ற சதி தான் கிருஷ்ணாவின் யோசனைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கிருஷ்ணாவின் இந்த யோசனையை தமிழக அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது. பிரதமர் கூறிய வினாடிக்கு 9000 கன அடி என்பதற்கு பதிலாக வினாடிக்கு 4500 கன அடி தண்ணீரை காவிரியில் திறந்துவிடலாம் என்றும் கிருஷ்ணா யோசனை தெரிவித்துள்ளார். இந்த நீர் காவிரி ஆற்றின் மணற்பரப்பை நனைப்பதற்குக்கூட போதாது. இது ஒருபுறமிருக்க பிரதமரே அளித்த தீர்ப்பை அவருக்கு கீழ் உள்ள அமைச்சரான கிருஷ்ணா திருத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான அமைச்சராக இருக்கும் கிருஷ்ணா, ஏதோ கன்னட அடிப்படைவாத அமைப்பின் தலைவரைப் போல செயல்படுவது சரியல்ல. இதற்காக அவரை பிரதமர் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
அதே நேரத்தில், காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் கைகோர்த்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை எதிர்கொண்டு, தமிழகத்திற்கு நீதி பெற்றுத்தர தமிழக கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.