அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பூரண மதுவிலக்கு கோரி ஒப்பாரி என்ற நூதன போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் இன்று (01.10.2012) காலை சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த இளம் விதவைகள், தங்கள் கணவர்கள் குடிப்பழக்கத்தால் உயிரிழந்ததை பற்றி உருக்கமாக பேசியது அனைவரின் கண்களிலும் கண்ணிரை வரவழைத்தது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராமதாஸ்,
இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான். காரணம் குடிப்பழக்கம். இந்த அரசு மக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு மதுவை ஒழித்தாலே நாடு சிறப்பாக இருக்கும். இந்த குடிப்பழக்கத்தால் இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா. இலவசங்கள் மட்டும் எதற்கு. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கதறிய இளம் விதவைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும். முதல்வரும் ஒரு பெண் என்பதால், இந்த விதவைகளின் மனதை புரிந்து கொண்டு காந்தி ஜெயந்தி அன்றே மதுக்கடைக்கடைகளை முற்றிலும் மூட ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். பாமக சார்பில் வரும் டிசம்பர் 17 அன்று மீண்டும் மதுக்கடைக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த உள்ளோம். இங்கே வந்துள்ள பாதிக்கப்பட்ட அத்தனை விதவை பெண்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.
No comments:
Post a Comment