இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள அறிக்கையில்,
கூடங்குளம் பகுதி மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு அணு உலையை திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக வந்த அப்பகுதி மக்களை விஜயாபதி என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுவதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர்புகை குண்டுகளை வீசும் ஊர்திகள் ஆகியவற்றையும் நிறுத்தி மக்களை காவல்துறை அச்சுறுத்தியுள்ளது. இடிந்தகரைக்குள் நுழைவதற்கான அனைத்து பாதைகளையும் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்துள்ளனர். ஓராண்டிற்கும் மேலாக கூடங்குளம் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிறு வன்முறை கூட நிகழாத நிலையில், காவல்துறையினரே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் விவகாரம் தொடர்பான பேச்சுக்களின் போது, அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைமுறைப் படுத்தபட்டுள்ள 144 தடை உத்தரவை 2 கி.மீ சுற்றளவுக்குள் குறைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து , அது நடைமுறைப்படுத்தபட்டது. ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தடையாணையை 7 கி.மீ தொலைவுக்கு நீட்டித்து மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தமிழக அரசு தடை விதித்திக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை மக்களின் கருத்துக்களுக்கு தமிழக அரசு மதிப்பளிக்கிறது. இப்பிரச்சினையில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்'' என்று உறுதியளித்திருந்தார். ஆனால், உள்ளாட்சித் தேர்தலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலும் முடிவடைந்த பின்னர், தனது நிலைப்பாட்டை தலை கீழாக மாற்றிக்கொண்டு மக்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிக்கிறார்.
ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டால், தேர்தலின் போது வாக்குச்சீட்டு என்ற அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை முதல்வர் உணரவேண்டும். கூடங்குளம் பகுதி மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, முதலமைச்சர் அவர்கள் இடிந்தகரைக்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முன்வர வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் வரும் 9ம் தேதி கூடங்குளத்தில் நடைபெறவிருக்கிறது. அணு உலை முற்றுகைப் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்படடுள்ளது.
No comments:
Post a Comment