Saturday, August 25, 2012

கிரானைட் ஊழல் பெருக அனுமதிப்பதா? புதிய குவாரிகளை ஏலம் விடக்கூடாது: ராமதாஸ் அறிக்கை




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மாவட்டம் அமலூர் வட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணையில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுமென்றும், இந்த முறைகேட்டில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், கனிமவளம் மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த 9 அதிகாரிகள்  பணியிடை நீக்கம் செயப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் விசாரணையில் உள்ளது. ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவேண்டும்  அனைத்து குவாரிகளிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் விற்பனையை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை,  காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி  ஆகிய 9 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் குவாரிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.  இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தால் கோரப்பட்டிருக்கின்றன. கிரானைட் ஊழலிலோ அல்லது வேறு முறைகேட்டிலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊழலில் தொடர்புடைய பல நிறுவனங்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  எதிர்காலத்தில் கிரானைட் ஊழலை அடியோடு தடுக்க அனைத்து கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசு பரிசீலித்துவரும் நிலையில், புதிய கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுவது முறையானதாக இருக்காது. ஏற்கனவே ஊழலில் ஈடுபட்ட  நிறுவனங்களே இந்த குவாரிகளையும் ஏலத்தில் எடுக்கக் கூடும் என்பதால் அது மேலும் மேலும் ஊழலுக்கு வழிவகுக்கும்.

மிகவும் அரிதான இயற்கை வளங்களை நாட்டின் சொத்துக்களாக கருதி பாதுகாக்கவேண்டும் என்றும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல தருணங்களில் வலியுறுத்தியிருக்கிறது. எனவே, 9 மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை அரசு கைவிடவேண்டும்  ஏற்கனவே செயல்பட்டுவரும் கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்கவேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: