பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும், தமிழகம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாநில அளவிலான அனைத்து சமுதாய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராயர் நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஹோட்டல் இராஜ்பேலஸ் விடுதியில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஓராண்டிற்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும்படி கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே 69% இடஒதுக்கீடு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனால் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், அதை முறியடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதால் அதை இரத்து செய்துவிட்டு, புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படவேண்டும் இளைஞர் சமுதாயம் சீரழிவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
No comments:
Post a Comment