Friday, August 17, 2012

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் : ராமதாஸ்


காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,   ‘’காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.

ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.



முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.

தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.  ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது’’என்று கூறினார்.

அவர் மேலும்,  ‘’வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாரா சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறது.   இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.

நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: