வங்கக் கடலில்
சனிக்கிழமையன்று மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம்
பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக்கடலில் சிங்கள கடற்படையினர் மிகக்
கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்திய கடல்
எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது
அங்கு வந்த சிங்கள கடற்படையினர், கயிறு, கட்டை உள்ளிட்ட பொருட்களைக்
கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். சில மீனவர்கள் கத்தியாலும்
குத்தப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த 9 மீனவர்கள், வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து மீன்கள், டீசல் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சிங்களப் படையினர், கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதேபோல், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் சிங்கள கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். எனினும், மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, இலங்கை அரசுடன் இந்திய அரசு பெயரளவில் பேச்சு நடத்துவதும், அதைத் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசு உறுதியளிப்பதும், அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதலை ஆதரவற்ற தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலாகக் கருதாமல், இந்தியா மீது தொடுக்கப்பட்ட போராகவும், இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் மத்திய அரசு பார்க்க வேண்டும்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருதக்கூடாது. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 15 மாதங்களில் மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக 12 முறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எனவே, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் இதற்குக் காரணமான சிங்களப் படையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரை, முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment